Sunday, February 10, 2019

கிழக்கு மாகாண மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த கிராமசக்தி மூலம் விரிவான செயற்திட்டம்

ads


பல தசாப்தங்களாக காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்து வந்த எமது நாடு, அதிலிருந்து சுதந்திரமடைந்து 71 ஆண்டுகள் கடந்திருக்கும் பின்னணியிலும் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்த நிலையை இன்னும் எட்டாமலேயே இருக்கின்றது. இதனால் நாட்டில் பெரும் எண்ணிக்கையான மக்கள் பொருளாதார ரீதியில் வளர்ச்சி காண முடியாத வறுமை நிலை யில் வாழவே நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கடந்து வந்திருக்கும் இந்தக் காலம் முழுவதிலும் அவ்வப்போது ஆட்சியிலிருந்த அனைத்து அரசாங்கங்களும் பொதுமக்களுக்கான வறுமை ஒழிப்பு பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்தி வந்திருக்கின்றன. அவற்றில் சில ஓரளவேனும் வெற்றி கண்டிருந்த போதிலும் பல முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியினை நாட்டுக்கு பெற்றுக் கொடுக்க தவறியிருக்கின்றன. இதனால் வறிய மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்கான காத்திரமான ஒரு செயல்திட்டத்தின் தேவை தொடர்ந்தும் இருந்து வந்திருக்கின்றது.


இந்தத் தேவையினை இனங்கண்டு அம்மக்களுக்கு சிறந்த பொருளாதார வாழ்வாதாரத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பூரண வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக அபிவிருத்திக்கான பொருளாதாரத் திட்டமே 'கிராமசக்தி' என அழைக்கப்படுகின்றது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிப் பதவியை ஏற்றதன் பின்னர் மாகாண ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இச்செயல் திட்டம் இம்முறை ஜனாதிபதியின் பிரத்தியேக வழிகாட்டலின் கீழ் கிழக்கு மாகாணத்தில், இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.

அரசாங்க அதிபரின் வழிகாட்டலில், பிரதேச செயலாளரின் வழிநடத்தலில், கிராம சேவகர் மட்டத்தில் இந்த செயல் திட்டம் முன்னெடுக்கப்படுவது வழக்கமாகும். அதனால் கிராமத்தின் அடிப்படைத் தன்மையினை அனுபவ ரீதியில் அறிந்திருக்கும் கிராம சேவகர்களிடமிருந்து திரட்டப்படும் தகவல்களின் அடிப்படையில், பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும், சுயமுயற்சியின் மூலம் சுபீட்ச பாதையில் அடியெடுத்து வைக்கும் எண்ணம் கொண்டவர்களை தெரிவு செய்து அவர்களுக்கான பொருளாதார, தொழில்நுட்ப, முகாமைத்துவ, வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட சகல பயிற்சிகளையும் வழிகாட்டுதல்களையும் பெற்றுக் கொடுப்பதே இத்திட்டத்தின் சிறப்புத் தன்மையாகும்.

ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவிலும் வசித்து வரும் அறிவு, ஆற்றல், திறமை கொண்ட ஆண், பெண் இருபாலாரையும் தெரிவு செய்து அந்தந்த கிராமங்களின் வளங்களைக் கொண்டு குறிப்பிட்ட பிரதேசத்தின் சிறப்புப் பெற்ற உற்பத்திகளை ஊக்குவித்து அதற்கான சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் உற்பத்தி செய்யப்படாத, ஆயினும் கிழக்கிற்கேயுரிய விசேட உற்பத்திகளை ஊக்குவிப்பதுடன், அந்த உற்பத்தியினை மேற்கொண்டு அவற்றை சந்தைப்படுத்துவதற்காக அந்தந்த கிராமவாசிகளை அங்கத்தவர்களாகக் கொண்டு கம்பனிகள் அமைக்கப்படும்.

அந்தக் கம்பனிகளுக்கு அரச துறையில் பாதுகாப்பு உத்தரவாதம் பெற்றுக் கொடுக்கப்படுவதுடன், அந்த உத்தரவாதம் காரணமாக இலங்கையின் முதல் தர தனியார் கம்பனிகளின் பூரண அனுசரணையும் பங்களிப்பும் அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும். தனியார் மற்றும் அரச நிறுவனங்களுடன் கிராமசக்தி மூலம் உருவாக்கப்படும் கிராமிய கம்பனிகளை பாதுகாக்கத்தக்க முத்தரப்பு ஒப்பந்தங்களை உருவாக்குவதன் மூலம் இந்த முயற்சியினை இடைவிடாது முன்னெடுத்து செல்லுதல் உறுதிப்படுத்தப்படும்.

தற்போதைய நவீன வர்த்தக செயற்பாடுகளில் தனியார் துறையினர் தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல் போன்ற விடயங்களில் அரச துறையினை விட முன்னணி வகிப்பதால் அதன் மூலம் கிடைக்கப் பெறும் சாதகத் தன்மையினை கிராமப்புற மக்களுக்கு பெற்றுக் கொடுக்க இதனூடாக எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த உற்பத்திக் குழுக்களினாலே, தம்மால் சிறந்து விளங்க முடியும் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்படும் உற்பத்தித் துறையினை மேம்படுத்தி அதன் மூலம் சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்வதற்கும் தம்முடன் இணைந்திருக்கும் குழுவினை பொருளாதார ரீதியில் ஊக்குவிப்பதற்குமான ஆரம்ப நிதி ஒதுக்கீட்டினை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும். அதேவேளை, குறிப்பிட்ட கிராம கம்பனிகள் உரிய முறையில் இயங்கி வருகின்றனவா? அதன் பலன்கள் சம்பந்தப்பட்ட கம்பனிகளுக்கு கிடைக்கப் பெறுகின்றனவா? என்ற விடயங்களை கிராமசக்தி தலைமையகம் தொடர்ச்சியாக கண்காணித்து வரும்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் கடல்சார் தொழிற்துறைகள் (மீன் உற்பத்தி, கருவாடு, கடற்தாவர வளர்ப்பு), பனைசார் உற்பத்திகள், விவசாய உற்பத்திகள், மட்பாண்டக் கைத்தொழில், பண்ணை வளர்ப்பு, வனைதல் உற்பத்திகள், நெசவு உற்பத்திகள் (கைத்தறி), குடிசைக் கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில், வீட்டுத் தோட்டம் போன்ற துறைகளை இலக்கு வைத்து  பெருமளவு அரச முதலீட்டின் அடிப்படையில் இம்மாகாணத்தை பொருளாதார ரீதியில் வலுவூட்டும் நோக்கத்துடனேயே ஜனாதிபதியினால் கிராமசக்தி தேசிய வேலைத் திட்டத்திற்காக கிழக்கு மாகாணம் உள்வாங்கப்பட்டிருக்கின்றது.

இதுவரை பதுளை, அனுராதபுரம் உள்ளிட்ட நாட்டின் பல பிரதேசங்களும் சிறந்த முறையில் மேம்படுத்தப்பட்டு, அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்த வறிய மக்கள் அந்த வறுமையிலிருந்து விடுபட்டு, பின்தங்கிய சமுதாயம் என்ற நிலையில் இருந்தும் விடுபட்டு வளர்ச்சி கண்டுவரும் சமுதாயமாக மாற்றம் பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த பின்னணியில் ஜனாதிபதியின் தலையீட்டினால் கிழக்கிற்கு கிடைக்கப் பெறும் இந்த பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பினை சிறந்த முறையில் புரிந்து கொண்டு, அதனால் அடையக் கூடிய பலனை கிழக்கிலங்கை சமூகத்திற்கு பெற்றுக் கொடுக்கின்ற பொறுப்பும் கடப்பாடும் மக்களின் வரியினால் மாதாந்த சம்பளத்தை பெறும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய உத்தியோகத்தர்களுக்கும் உள்ளது. நாட்டு மக்களையும் அரச துறையையும் தமது இருப்பின் தளமாக கொண்டு செயற்படும் தனியார் நிறுவனங்களுக்கும் கிராமசக்தி அபிவிருத்தித் திட்டத்தை யதார்த்தமாக்க வேண்டிய பொறுப்பு இருக்கின்றது.

வறுமையிலிருந்து விடுபடுவதற்கான தேவையும் அதற்கான அர்ப்பணிப்பும் புத்தாக்க முயற்சியும் மிக்க ஒரு சமூகத்திற்கு கிராமசக்தி என்பது ஒரு வரப்பிரசாதமாகும் என்பதை ஏனைய மாவட்டங்கள் செயற்பாட்டு ரீதியில் உணர்ந்தும் உணர்த்தியும் இருக்கின்றன.

ஆதலால் நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெருமளவு அங்கவீனர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் விசேட தேவையுடைய பொதுமக்கள் என பலவித தன்மையை கொண்டிருக்கும் கிழக்கு மாகாணம் இந்த கிராமசக்தி செயற்திட்டத்தின் ஊடாக போதிய பலனை அடைய முயற்சிக்க வேண்டும்.

கிராமசக்தி தேசிய நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க வருகின்ற ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து, தத்தமது கிராமங்களின் குறை, நிறைகளை எடுத்துக்காட்டி, அதற்கு ஜனாதிபதி நேரடி பணிப்புரையிலான தீர்வுகளை பெற்றுக் கொள்ளக் கூடிய அரியதோர் வாய்ப்பும் கிழக்கு கிராமசக்தி தேசிய செயற்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு இருக்கின்றது. இவற்றின் பலனை பெற்றுக் கொள்வதற்கு கிழக்கு மாகாணத்தில் வறுமை நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் முன்வர வேண்டியதும் அவசியமாகும்.
கிழக்கு மாகாண மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த கிராமசக்தி மூலம் விரிவான செயற்திட்டம் Rating: 4.5 Diposkan Oleh: Sayan
 

Top