கிழக்குப் பல்கலைக்கழக செயல்முறைப் பயிலரங்கு



கிழக்குப் பல்கலைக்கழகக் கலைகலாசார பீட இந்துநாகரிகத் துறைத் தலைவர் கலாநிதி (திருமதி) சாந்தி கேசவன் அவர்களது ஒழுங்குபடுத்தலின் கீழ் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான 'நல்வாழ்விற்கான உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்தல்' எனும் பொருண்மையிலான செயல்முறைப் பயிலரங்கு 06.03.2019 புதன்கிழமை முற்பகல் 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 12.30 மணிவரை கலைகலாசார பீடக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்குக் கிழக்குப் பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறைத் தலைவர் கலாநிதி(திருமதி) சாந்தி கேசவன் அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைகழகத்தின் பிரதி உபவேந்தர் வைத்திய கலாநிதி கே.இ.கருணாகரன் அவர்களும் சிறப்பு அதிதியாக கலைகலாசார பீட பீடாதிபதி திரு.மு.ரவி அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

மாணவர்களுக்கான செயல்முறைப் பயிலரங்கினை நிகழ்த்துவதற்கான வளவாளராக ஐக்கிய அமெரிக்க சவுத் கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுந்தர் பாலசுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விரிவுரையாளர் திரு.நா.வாமன் வரவேற்புரையினையும், விரிவுரையாளர் கலாநிதி.திரு.வ.குணபாலசிங்கம் நன்றியுரையினையும் நிகழ்த்தியிருந்தார்கள். விரிவுரையாளர் திரு.ஜீ.பால்ராஜ் இந்நிகழ்ச்சி நிரலைத் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வின் போது வளவாளராகக் கலந்து சிறப்பித்த பேராசிரியர் சுந்தர் பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு இந்துநாகரிகத் துறை சார்பாக நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.