Monday, March 18, 2019

மேலும் மேலும் காலஅவகாசம் வழங்கி எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை ; வடமாகாண முன்னாள் முதல்வர்

ads

நான்கு வருடங்கள் செய்யாத ஒன்றை இரண்டு வருடங்கள் மேலும் கொடுப்பதால் நடைமுறைப்படுத்தப்படாது என்பதே எமது கருத்து. போர்வீரர்களுக்கு எதிராக எவ்வித விசாரணையையும் நடத்த நாங்கள் விட மாட்டோம் என்று பேசிக் கொண்டிருக்கையில் மேலும் மேலும் காலஅவகாசம் வழங்கி எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை என வடமாகாண சபை முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.


மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் போனோரின் குடும்பங்கள் சேர்ந்து தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகமாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நாளைய தினம் மட்டக்களப்பில் நடத்துகின்றனர். அவர்களின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்கும் எங்களின் ஆதரவினை அவர்களுக்குத் தெரிவிப்பதற்காகவே எமது மட்டக்களப்பு விஜயம் அமைகின்றது. அவர்கள் பல வருட காலமாக மிகவும் கஷ்டப்பட்டு தங்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் அது தொடர்பில் எவ்விதமான விசாரணைகளும் நடைபெறாத நிலையில் இவற்றை உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கின்றது. அதற்கு ஆதரவை வழங்க வேண்டிய அவசியமும் எங்களுக்கு இருக்கின்றது.

அரசியற் கட்சி தொடங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கவில்லை மக்களுக்கு இருந்தது. ஏனெனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எதனை மக்களுக்கு செய்யப் போவதாக அறிவித்தார்களோ அவை ஒன்றையுமே செய்யாமல் தான்தோன்றித் தனமாக தமக்கு இஷ்டமானதை அவர்களுக்கு நல்லது எதுவோ அதைத் தான் செய்து கொண்டு வந்தர்கள். இது எமது அடிப்படைக் கொள்கைகளை மறந்து செயற்படுவதாக எமக்குத் தென்பட்டது. அதன் காரணத்தினாலேயே நாங்கள் புதிய கட்சி ஒன்றைத் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

எமது தாரக மந்திரமாக தன்னாட்சி தன்நிறைவு, தற்சார்பு என்பதாகவே இருக்கின்றது. எமது மக்கள் எங்களை நாங்களே பார்த்துக் கொள்ள வேண்டியதாக இருக்கின்றது. எந்நாளும் மத்திய அரசாங்கம் தரும் வெளிநாடுகள் தரும் என்று தொடர்ந்து வழமுடியாது. எம்மை நாங்கள் நம்பி எங்கள் வாழ்க்கையை முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. ஏனெனில் எங்களுக்கு அரசியற் தீர்வு தரப்படவில்லை. பொருளாதார ரீதியாக நன்மை தருவதாகக் கூறினாலும் தாங்கள் நினைத்ததைத் தருகின்றார்களே தவிர நாங்கள் கேட்பதைத் தருவதில்லை. இந்த நிலையில் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி என்ன என்ன செய்ய வேண்டும், எமது அடிப்படைக் கொள்கையின் காரணம் என்ன, அந்த அடிப்படைக் கொள்கைகளை முன்வைப்பதற்கான காரணங்கள், அவற்றை நாங்கள் தவறவிட்டோமானால் வருங்காலத்தில் ஏற்படக் கூடிய தாக்கங்கள் என்ன என்பவற்றை எடுத்துக் கூறுவதற்கு ஒரு அவசியம் ஏற்பட்டதன் காரணமாகத் தான் இந்தப் புதிய கட்சியை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம்.

அடுத்து வருகின்ற தேர்தல் என்ன என்பதை வைத்தே எமது நடவடிக்கைகள் இருக்கும். தற்போதைய நிலையில் எமது கட்சியை ஸ்திரப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இலங்கை அரசாங்கத்திற்குக் கால அவகாசம் வழங்குவது தொடர்பில் எம்மைப் பொறுத்தவரையில் நான்கு வருடங்கள் செய்யாத ஒன்றை இரண்டு வருடங்கள் மேலும் கொடுப்பதால் நடைமுறைப்படுத்தப்படாது என்பதே எமது கருத்து. ஏனெனில் ஜனாதிபதியே தெரிவித்திருக்கின்றார் போர்வீரர்களுக்கு எதிராக எவ்வித விசாரணையையும் நடத்த நாங்கள் விட மாட்டோம் என்று இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் மேலும் மேலும் காலஅவகாசம் வழங்கி எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை. இது எங்களுடைய பிரச்சனைகளை இழுத்தடிப்புச் செய்து எமது பிரச்சனைகள் தூர்ந்து போவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்நிய நாடுகளும் இதற்குத் துணை போகின்றன. எமது கட்சிகளும் தங்களின் நன்மைகளைப் பெறும் எண்ணத்தில் இருக்கின்றார்கள். எனவே நாங்கள் இதனை ஏற்றுக் கொள்வதாக இல்லை.

எம்மைப் பொருத்தரையில் செயலாளர் நாயகம் பாதுகாப்புச் சபைக்கு உண்மையை எடுத்துக் காட்டி சர்வதேச நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை அனுப்ப வேண்டும் என்பது தான் எமது கோரிக்கை. அது முடியாது என்றால் இலங்கையில் நடந்து என்ன என்பது தொடர்பில் ஆராய்வதற்கு ஒரு குழுவை அமைத்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்.

ஒவ்வொரு நாடும் தங்களின் நல உரித்துக்களை வைத்தே நடவடிக்கை எடுத்து வருகின்றது. தற்போதைய காலத்தில் இலங்கை சீனா உறவை வைத்து மேற்கு நாடுகள் சில நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கின்றது. அவற்றை எல்லாம் வைத்துக் கணித்துப் பார்க்க வேண்டும். உடனே ஆரூடம் சொல்ல முடியாது எல்லாக் காலத்திலும் இலங்கை அரசுக்கு சார்பாக விடயங்கள் நடைபெறாது.

தமிழ் மக்களின் தலைவர்கள் தமது மக்களின் நடவடிக்கைகளைப் பேணிப் பாதுகாக்கமையினால் ஏற்பமட்டமையே கிழக்கு மாகாணத்திலுள்ள சகோதர ஆக்கிரமிப்புகள் மற்றும் நில அபகரிப்பு நிலைமைகள். இது மிகவும் சிக்கலான விடயமாக இருக்கும். இருப்பினும் முதலில் கிழக்கில் உள்ள காணிப்பிரச்சனைகள் தொடர்பில் நாங்கள் அறிந்துகொண்டு குழுவொன்றை அமைத்து புள்ளிவிபரங்களை சேகரித்து. அடுத்து மெற்கொள்ள வேண்டிய விடயங்களைக் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம். அதன் பின்னர் முஸ்லீம் தலைவர்கள் மற்றும் அரச தரப்புடன் கூடி இந்தப் பிரச்சனை தொடர்பில் நாங்கள் ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டி அவசியம் இருக்கின்றது.

கிழக்கு மக்கள் தாங்கள் தலைமை வகிக்கும் ஒரு கட்சியைத் தொடங்கி வடக்கையும் சேர்த்து தலைமை வகிக்கக் கூடிய தலைமைத்துவத்தைக் கொடுக்க முடியும். வடக்கில் இருந்து வருபவர்கள் தலைமைத்துவம் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. உங்களுடைய தலைமைத்துவத்தில் தான் அனைத்தும் இருக்கின்றது. எந்நேரமும் வடக்கில் இருப்பவர்கள் எம்மைப் பார்க்கின்றார்கள் இல்லை என்று சொல்வது சரியானதல்ல. உங்களுடைய தலைமைத்துவத்தை நீங்கள் வளர்க்க வேண்டும். எங்களது கட்சியைப் பொருத்தவரையில் வடக்கு கிழக்கு தலைவர்கள் இருவரும் சேர்ந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்துதான் நான் இங்கு வந்துள்ளேன்.

தற்போதைய 13வது திருத்தச் சட்டத்திலே நாங்கள் எதனைச் சாதிக்கப் போகின்றோம் என்ற கேள்வி இருக்கின்றது. ஆனால் மாகாணசபை இருந்தவரையில் நாங்கள் எங்களுக்கென்று ஒரு அடையாளத்தைக் கொடுக்கக் கூடியதாக இருந்தது. அந்த அடையாளத்தை நாங்கள் இழந்து விட்டோம். தற்போது மத்திய அரசு தான்தோன்றித் தனமதாக தனக்குத் தேவையானவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்கள். அந்த வகையில் தான் மாகாணசபைத் தேர்தலையும் தள்ளி வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்று தெரிவித்தார்.மேலும் மேலும் காலஅவகாசம் வழங்கி எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை ; வடமாகாண முன்னாள் முதல்வர் Rating: 4.5 Diposkan Oleh: Office
 

Top