கல்முனை பிரதேச செயலக கோரிக்கையையும் காற்றில் பறக்கவிட்டு , கட்சி தீர்மானத்தை மீறிய கோடீஸ்வரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை !

கட்சி தீர்மானத்தை மீறி வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் வாக்களித்த கோடீஸ்வரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.


ரெலோவின் மத்திய, அரசியல்குழு தீர்மானங்களிற்கு மாறாக, கோடீஸ்வரன் நேற்றைய (12) வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார். அது தவிர, இரண்டு நாட்களின் முன்னதாக, கல்முனை உப பிரதேசசெயலகம் தரமுயர்த்தப்படும் என்ற வாக்குறுதி கிடைக்காமல் வாக்களிக்க கூடாது என்றும் கட்சிக்குள் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதையெல்லாம் மீறி கோடீஸ்வரன் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.

எனினும், கட்சி தலைவரான செல்வம் அடைக்கலநாதன் வாக்களிப்பில் கலந்துகொள்வதை தவிர்த்திருந்தார்.
கோடீஸ்வரன் ஆதரித்து வாக்களித்தது குறித்து ரெலோவின் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தாவை தொடர்பு கொண்டு கேட்ட போது மேற்கண்டவாறு கூறினார்.

“வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னம் அதிகரித்துள்ள நிலையில், இராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்ட இந்த வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பதில்லையென ரெலோவின் மத்தியகுழு, அரசியல்குழுவில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அரசியல்கைதிகள், காணாமல் போனோர் பிரச்சனை தொடர்கிறது. கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதாக பிரதமர் வாக்களித்து, பின்னர் அதிலிருந்து நழுவி விட்டார். இதை பற்றிய எந்த உத்தரவாதத்தையும் பெறாமல், வெறுமனே கையை தூக்கி ஆதரவளிக்கும் அரசியலை எமது கட்சி செய்யாது. எமது கட்சியிலிருந்து யாரும் அப்படி செய்தால், அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும்.

நேற்றைய வாக்கெடுப்பிற்கு முன்னதாக, காலையிலேயே கோடீஸ்வரனிற்கு இதை நினைவூட்டினோம். ஆனால், கட்சி தீர்மானத்தை கணக்கிலெடுக்காமல் அவர் செயற்பட்டுள்ளார். அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.
இதேவேளை, 2017ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் போதும், இப்படியான சம்பவம் இடம்பெற்றது.

அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பான உறுதியான உத்தரவாதம் கிடைக்காமல், வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க கூடாது என ரெலோவின் மத்திய, அரசியல் குழு கூட்டங்களில் முடிவெடுக்கப்பட்டிருந்தது. எனினும், அதை மீறி கோடீஸ்வரன் வாக்களித்தார். இம்முறையை போலவே, அப்போதும் செல்வம் அடைக்கலநாதன் வாக்கெடுப்பில் கலந்துகொள்வதை தவிர்த்தார். எனினும், வாக்கெடுப்பு நடந்த அன்றைய இரவில், வாக்கெடுப்பு வெற்றியடைந்தது தொடர்பாக நடந்த விருந்தில் செல்வம் அடைக்கலநாதனும் கலந்து கொண்டிருந்தார்.
அப்போது கட்சி தீர்மானத்தை மீறிய கோடீஸ்வரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 கோடீஸ்வரன், கல்முனை பிரதேச செயலக தரமுயர்வு கோரிக்கையையும் காற்றில் பறக்கவிட்டு, வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்கு சமூகவலைத்தளங்களில் கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.