டெங்கு நோயினால் 11 பேர் உயிரிழப்பு


இந்த வருடத்தின் ஜனவரி முதல் ஏப்ரல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் டெங்கு நோய் காரணமாக நாடளாவிய ரீதியில் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு, டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 13,505 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தொற்றுநோய் பிரிவு தெரிவித்தது.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இம்மாவட்டத்தில் 2,998 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இம்மாவட்டத்தில் 1,703 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கும் அடுத்தபடியாக யாழ்ப்பாணத்தில் 1,676 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, எவருக்காவது காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் கை வைத்தியத்தை நாடாது, உடனடியாக வைத்தியசாலையை நாடி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு, வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்தோடு, கர்ப்பிணிகளுக்கு காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் தாமதியாது உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், வைத்திய நிபுணர்கள் தெரிவித்தனர்.