பெரிய நீலாவணையில் கழிவு நீர் சுத்திகரிப்பு தொகுதியமைக்க அமைச்சர் ஹக்கீம் 50 மில்லியன் ஒதுக்கீடு


(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் எடுத்துக் கொண்ட துரித முயற்சியினால் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பெரிய நீலாவணை இஸ்லாமிக் ரிலீப் தொடர்மாடி வீட்டுத் தொகுதிக்கு கழிவு நீர் சுத்திகரிப்பு பொறிமுறை (Sewerage System) திட்டத்தை முன்னெடுப்பதற்காக நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் 50 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தினால் வீடு, வாசல்களை இழந்த பெரிய நீலாவணைப் பகுதி மக்களுக்காக இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தினால் 96 வீடுகளைக் கொண்ட தொடர்மாடி வீட்டுத் தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டு, வழங்கப்பட்டிருந்தன.

எனினும் கடந்த சில வருடங்களாக இவ்வீடுகளுக்கான மலசலகூடக் கழிவுக்குழிகளும் சமையலறை கழிவு நீர்க் குழிகளும் நிரம்பி, வெடிப்புகள் ஏற்பட்டு சேதமடைந்துள்ளதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சூழலும் மாசடைந்து காணப்படுகிறது.

இதன் காரணமாக இவ்வீட்டுத் தொகுதிகளில் வாழ்கின்ற மக்கள் எதிர்நோக்கியுள்ள அவல நிலையை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள், உள்ளூராட்சி, மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் அனுசரணையுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் அங்கு கழிவு நீர் சுத்திகரிப்பு தொகுதியை அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அதற்கான நகல் திட்டத்தையும் கையளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் மூலம் இத்திட்டத்திற்கான நிதியொதுக்கீட்டை மேற்கொள்வதற்கு அமைச்சர் ஹக்கீம் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்நிதியின் மூலம் குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் இன்று கல்முனை மாநகர சபையில், மாநகர முதலவர் ஏ.எம்.றகீப் தலைமையில் அவசர கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இதில் மாநகர சபையின் ஆணையாளர் எம்.சி.அன்சார், சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.ஏ.நிஸார், நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் கல்முனை மாநகர அபிவிருத்தித் திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் ஏ.சி.சமால்தீன், பெரிய நீலாவணை இஸ்லாமிக் ரிலீப் தொடர்மாடி வீட்டுத் தொகுதி முகாமைத்துவ சபையின் தலைவர் எம்.ஐ.எம்.சாஹிர், உப தலைவர் இசட்.ஏ.எம்.மஸ்ஹூட், செயலாளர் யூ.எல்.நாபீர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது நவீன தொழில்நுட்பங்களுடன் முன்னெடுக்கபடவுள்ள இத்திட்டம் குறித்து வீட்டுத்தொகுதி முகாமைத்துவ சபையினருக்கு விளக்கிக் கூறப்பட்டதுடன் இதில் அவர்களது வகிபாகம் தொடர்பிலும் எடுத்துரைக்கப்பட்டது.

அத்துடன் இவ்வேலைத் திட்டத்தை உடனடியாக ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் இத்திட்டம் இவ்வருடம் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் உத்தியோகத்தர்களை அறிவுறுத்திய முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள், அதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.