காத்தான்குடி தள வைத்தியசாலைக்கான புதிய அம்பியூலன்ஸ் வண்டி மிக விரைவில் வழங்க ஏற்பாடு பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவிப்பு



எம்.ரீ. ஹைதர் அலி
காத்தான்குடி தள வைத்தியசாலைக்கான புதிய அம்பியூலன்ஸ் வண்டி மிக விரைவில் வழங்க சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

அண்மையில் நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலைகளுக்கான இரண்டாம் கட்ட அம்பியூலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட்ட போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி வைத்தியசாலைக்கான அம்பியூலன்ஸ் வண்டி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடி தள வைத்தியசாலையினைப் பொறுத்த மட்டில் அதிகமான நோயாளிகளை பிற வைத்தியசாலைகளுக்கும் கொழும்பு தேசிய வைத்தியசாலை, கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலைகளுக்கும் ஏற்றிச் செல்கின்ற பணியினை இவ் வைத்தியசாலை முன்னெடுக்கும் நிலையில் அதற்கான அம்பியூலன்ஸ் தேவைப்பாடு மிக அதிகமாகவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி தவிர்ந்த ஏனைய தள வைத்தியசாலைகளிக்கு புதிய அம்பியூலன்ஸ் வண்டிகள் இரண்டு தொகுதிகளாக வழங்கப்பட்டபோதிலும் இறுதியாக நேற்று வழங்கப்பட்ட தொகுதியிலும் காத்தான்குடிக்கான புதிய அம்பியூலன்ஸ் வழங்கப்பட்டவில்லை.

இதனடிப்படையில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்களிடம் இது சம்பந்தமாக தெளிவுபடுத்தியதன் விளைவாக மிக விரைவில் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கான Benz ரக அம்பியூலன்ஸ் வண்டி ஒன்று வழங்கப்படும் என உறுதியளித்தார்.

இதற்கான சிபாரிசுக் கடிதம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் சிபாரிசுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.