பிரதேசக் கல்விப்புலத்தில் நூற்றாண்டு கண்டுவிட்ட பட்டிருப்புத் தேசிய பாடசாலை- களுவாஞ்சிகுடி இன் வகிபாகம் -ஒரு ஆய்வுக் குறிப்பு- கவிக்கோ வெல்லவூர்க் கோபால்
கவிக்கோ வெல்லவூர்க் கோபால்
(தேசியக் கலைஞர் எஸ்.கோபாலசிங்கம்)

ஒரு பிரதேசம் சார்ந்த சமூகக் கட்டமைப்பில் அதன் விழுமியங்களை நெறிப்படுத்துவதிலும் சமூக மூலதனமாகக் கொள்ளப்படத்தக்க ஒற்றுமை, சார்புநிலை, நட்புணர்வு, சகிப்புத்தன்மை ஆகியவற்றை அக்கட்டமைப்புக்குள் பலப்படுத்துவதிலும் கல்வியின் பங்களிப்பானது முதன்மையும் முக்கியத்துவம் பெற்றதாக அமைகின்றது. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம்முதலே தமிழினத்தின் இருப்பு மற்றும் வாழிடங்களையும் மரபுவழிப் பண்பாட்டு நெறிமுறைகளையும் அடையாளப்படுத்திய பல கிராமங்களைக் கொண்டமைந்த வளமான பிரதேசம் நமது பட்டிருப்புத் தொகுதி. இதன் சுமார் எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்விநிலையை நாம் உற்றுநோக்கும் தன்மையில் மிகப் பாரிய பின்னடைவையே இப்பிரதேசம் கொண்டுள்ளமை புலனாகின்றது.

பட்டிருப்புப் பிரதேசம் கல்வியில் பின்தங்கிய பிரதேசமாக அன்று நோக்கப்படும் தன்மையில் அப்போதைய கல்விச் சூழலையும் கவனத்தில்கொள்வது அவசியமாகிவிடுகின்றது. போர்த்துக்கேயரது வருகைக்கு முன்னதான குருகுலக் கல்வி மற்றும் திண்ணைப் பள்ளிக் கல்விமுறை முன்னெடுப்புகள் அனைவரையும் சார்ந்தமையாத தன்மையில் அவை சமூக மூலதனமாக அமையும் நிலையை எட்டவில்லை. தொடர்ந்தாற்போல் போர்த்துக்கேயரது ஆட்சி தொடக்கம் ஆங்கிலேயரது மத்தியகால ஆட்சிவரை செயல்பாட்டிலிருந்த மிசனெறிக் கல்வி முறையானது மதம் சார்ந்த கல்வி விழுமியங்களை முன்னெடுத்தபோது இப்பிரதேச மக்கள் அதனை முழுமூச்சில் எதிர்க்கும் அல்லது வெறுக்கும் மனோநிலையிலும் செயல்பாட்டிலும் தங்களை நிலைநிறுத்திக்கொண்டமையால் கல்வித்துறையில் மேலும் ஒரு பாரிய பின்னடைவை நோக்கியே பயணிக்க வேண்டியவர்களானார்கள். 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தே ஒருசில அரச பாடசாலைகளை ஆங்கில அரசு ஆரம்பித்த நிலையில் இப்பிரதேசத்தில் அவ்வாறான ஒரு பாடசாலையும் நிறுவியதாகத் தகவலில்லை. இப்பிரதேச மக்களில் பெரும்பாலனாவர்கள் சாதாரண விவசாயக் குடியினரான சாமானியராகவே வாழ்ந்தனர். சிலர் நிலபுலங்களைக்கொண்ட போடிமாராக அறியப்பட்டாலும் பெருமளவு நிதியைக்கொண்டு சைவப் பாடசாலைகளை உருவாக்கும் நிலையில் அவர்கள் அன்று இருக்கவில்லை. அத்தோடு அவர்களது ஆர்வமும் மனோநிலையும் இதில் உள்ளீர்க்கப்படவில்லை.

இத்தகைய பின்னணியிலேயே நாம் பட்டிருப்பு தேசியப் பாடசாலையினுடைய தோற்றுவாய்குறித்துக் கவனம் செலுத்தவேண்டியுள்ளது. 1919ல் களுவாஞ்சிக்குடியில் இயங்கிய திண்ணைப்பள்ளியை பொறுப்பேற்ற இந்து சபை அதனை ஒரு சைவப்பாடசாலையாக மாற்றியமைத்தது முதல் அதன் தொடக்ககாலம் வரலாற்றில் பதிவிடப்படுகின்றது. 1924 மார்ச் 24ல் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையென்ற பெயரில் அரசால் பொறுப்பேற்கப்பட்ட இப்பாடசாலை 5ஆம் வகுப்புவரை மாணவர்களுக்கு கல்வி போதிக்கத்தொடங்குகின்றது. இதனைத் தொடர்ந்து பட்டிருப்புப் பிரதேசத்தில் 5ஆம் வகுப்புவரை கல்விபோதிக்கத்தக்க சில அரசினர் பாடசாலைகள் தோற்றம் பெறுகின்றன. இதில் ஒரு சிறப்பு அம்சமாக களுவாஞ்சிக்குடியில் இயங்கிய அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை 1933முதல் கனிஷ;ட தரதரப் பத்திர வகுப்பு (JSC) மற்றும் சிரேஷ;ட தராதரப் பத்திர வகுப்பு (SSC) ஆகியவற்றைக் கொண்ட பாடசாலையாக மாற்றம் பெறுகின்றது. இக்காலம் முதலாக இப்பாடசாலையானது இப் பிரதேச கல்வி வளர்ச்சியில் தடம் பதிப்பதை நம்மால் நிச்சயப்படுத்தமுடிகின்றது.

இதனைப் பெருவாய்ப்பாகக்கொண்டு வாவியின் கிழக்குப்புறத்தே துறைநீலாவணை, கல்லாறு, கோட்டைக்கல்லாறு, ஓந்தாச்சிமடம், மகிளூர்முனை, மகிளூர், குறுமண்வெளி, எருவில், பட்டிருப்பு, களுவாஞ்சிக்குடி, களுதாவளை, தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம், குருக்கள்மடம் போன்ற கிராமங்களையும் வாவியின் மேற்புறத்தே மண்டூர், பாலமுனை, தம்பலவத்தை, வெல்லாவெளி, பாலையடிவட்டை, கோவில்போரதீவு, முனைத்தீவு, பெரியபோரதீவு,  பழுகாமம் மற்றும் குடியேற்றக் கிராமங்களையும் உள்ளடக்கிய பல மாணவர்கள் இக்கல்விச் சாலையில் தங்களையும் தொடர்ந்தாற்போல் பதிவாக்கிக்கொண்டனர். பின்னர் 01.06.1936ல் இப்பாடசாலை இரண்டாகப் பிரிக்கப்பட்டு அதன்ஒரு பகுதி தற்போதைய இடத்தில் பட்டிருப்பு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை களுவாஞ்சிகுடி என்ற பெயரில் இயங்கத்தொடங்கியதும் தெரிகின்றது.

கிழக்கு மாகாணத்தின் வடபகுதிக்கு அரசாங்க சபை உறுப்பினராகவும் இலவசக் கல்வியின் தந்தையாகப் போற்றப்படும் ஊ.று.று கன்னங்கராவைத் தலைவராகக்கொண்ட அரச கல்விச் சபை உறுப்பினராகவும் பணியாற்றிய அமரர் நல்லையா அவர்களது சிபார்சுக்கமைய இப்பாடசாலையானது 1946 செப்பரம்பர் 9ஆம் திகதிமுதல் திரு.முருகுப்பிள்ளை அவர்களைத் தலைமை ஆசிரியராகக்கொண்டு 'மட்ஃ பட்டிருப்பு கனிஷ;ட ஆங்கில பாடசாலை, களுவாஞ்சிக்குடி' எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டமை வரலாற்றில் பதிவாகியுள்ளது. பின்னர் 'துவிபாஷh' (இருமொழிப்) பாடசாலைகள் திட்டத்தின்கீழ் தமிழையும் ஆங்கிலத்தையும் போதனா மொழியாகக்கொண்ட பாடசாலையாக மாற்றம்பெற கூடவே இதன் மாணவர் வரவு மேலும் அதிகரிக்கத்தொடங்கியது.

1950க்கு பிற்பட்ட காலத்தே இப்பாடசாலையின் செயற்பாட்டில் பட்டிருப்புத் தொகுதி மக்களின் கல்வி வளர்ச்சியின் படிநிலைத் தன்மையை நம்மால் அவதானிக்கமுடிகின்றது. ஆரம்ப காலத்தே சிரேஷ;ட தராதரப் பத்திரப் பரீட்சையில் சித்திபெற்று உயர் கல்வியைத் தொடரமுடியாதுபோன பலர் ஆசிரியசேவை, எழுதுனர் மற்றும் இணைந்த சேவைகள், சிற்றூழியர் சேவை என பல்வேறு அரசுப் பதவிகளில் உள்ளீர்க்கப்பட்டனர். இன்னும் சிலர் கல்முனை, மட்டக்களப்பு போன்ற பட்டினப் பாடசாலைகளில் தங்கள் உயர்கல்வியைத் தொடர்ந்துபெற்று பல்கலைக்கழகங்களில் இணைந்துகொண்டதோடு மருத்துவர்களாக, பொறியியலாளர்களாக இன்னும் உயர் பதவிகளைப் பெற்றவர்களாக மேலும் வெளிநாடுகளில் பணிபுரிபவர்களாக மாறலாயினர்.

1962ஐ தொடர்ந்த காலம் இப்பிரதேசத்துக்கு ஒரு பொற்காலம் என்றே கூறவேண்டும். இப்பாடசாலை மகா வித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டதோடு கலைப்பிரிவில் உயர்தர வகுப்பும் ஆரம்பிக்கப்பட்டநிலையில் மேலும் இப்பிரதேசக் கல்விப்புலம் பெரும் மாற்றம்கண்டது. அதனைத் தொடர்ந்து சாதாரண குடும்ப நிலையைக் கொண்ட இப்பிரதேச மாணவர்கள் இப்பாடசாலையூடாக பல்கலைக் கழகங்களுக்கு செல்லுகின்ற வாய்ப்பினை பெறவும் தொடங்கினர். படிப்படியாக பல்வேறு வசதிகளையும் கொண்டுயர்ந்த இக்கல்விச்சாலை விஞ்ஞான உயர்தர வகுப்பையும் மற்றும் வர்த்தகப் பிரிவையும் தொடங்கிய பின்னர் மாவட்டத்தில் தலைசிறந்த பாடசாலைகளில் ஒன்றாகத் தன்னை நிலைநிறுத்தியது. நமது மண்ணில் போர்ச்சூழல் உருவாவதற்கு முன்னதான கால்நூற்றாண்டைக் கணக்கிலெடுத்தால் நமது பிரதேசத்திலிருந்து பல்கலைக்கழகங்களுக்குச் சென்றவர்களில் சுமார் 70 விழுக்காட்டினர் இப்பாடசாலையில் பயின்றவர்களாகவே இருந்தனர். அத்தோடு நூற்றுக்கணக்கானவர்கள் தொழில் வாய்ப்பினையும் பெற்றனர். போர்க்காலச் சூழலில் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வதியும் கல்வியாளர்கள் மற்றும் உயர் தகமையாளர்களைப் பட்டியலிட்டால் அதில் பெரும்பாலானவர்களை இக்கல்விச்சாலையில் பயின்றவர்களாகவே நம்மால் அடையாளப்படுத்தமுடியும்.

போர்க்காலச் சூழல் இப்பிரதேசத்தே உயிரிழப்பு மற்றும் சொத்திழப்பு போன்ற பாரிய அழிவினை ஏற்படுத்தியதோடு கல்விப் புலத்தில் பல்வேறு இடர்ப்பாடுகளையும் தடைகளையும் உருவாக்கிய தன்மையில் வசதிபடைத்தபலர் அதிலிருந்து மீட்சிபெற மட்டக்களப்பை அண்டி  இடம்பெயரவும் இன்னும் சிலர் நாடுவிட்டுப் புலம்பெயரவும் செய்தனர். இதன் பிரதிபலிப்பு இப்பாடசாலையிலும் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்திய நிலையிலும் பிரதேசம் சார்ந்த அதன் கல்விப்பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டதையே பார்க்கின்றோம். கடந்த பத்து ஆண்டுகளை நாம் கணக்கிலெடுக்கின்றபோது இக்கல்விச் சாலையின் கல்வியோடிணைந்த வளங்களும் கல்விசார் செயல்பாடுகளும் மாவட்ட மட்டத்தில் அது எட்டியுள்ள உயர்நிலையும் உண்மையில் பிரமிக்கவே செய்யும்.

இன்று நூற்றாண்டைக் காண்டுவிட்ட பட்டிருப்பு ம.ம.வி, தேசியப்பாடசாலை - களுவாஞ்சிகுடி அதன் பிரதேசம்சார்ந்த வகிபாகத்தில் நீதித்துறை, மருத்துவத்துறை, பொறியியல்துறை, கல்வித்துறை மற்றும் தொழில்துறைகள் என விரிவுபட்டு நூற்றுக் கணக்கானவர்களுக்கு ஏற்றமளித்து கூடவே அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த தலைமைத்துவங்களையும் உருவாக்கி தலைநிமிர்ந்து நிற்பதைப் பார்க்கின்றோம். அதன் பெருமையை உலகரங்கில் நிலைநிறுத்தும் இந்நூற்றாண்டு போல் இன்னும் பல நூற்றாண்டுகள் காண வாழ்த்துவோம்!

எட்டுத் திசைமேவ எட்டாப் புகழ்கொண்டு
கிட்டாப் பெரும்கொடையாய்க் கிழக்கொளிரும். – பட்டிருப்பு
தேசியக் கலாசாலை திகழ்பணியின் நூறாண்டு
பேசுமதன் வையகத்துப் பேறு !