பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடுவதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மட்டக்களப்பிற்கு விஜயம்




கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்வையிடுவதற்காகவும், அவர்களுக்கு அனுதாபங்களைத் தெரிவிப்பதற்காகவும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின் போது அவர் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் வணக்கத்தக்குரிய பொன்னையா ஜோசப் ஆண்டகை அவர்களைச் சந்தித்து நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார். பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட மக்களைப் பார்வையிட்டார். அதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அவர்களைச் சந்தித்து நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். இறுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாநகரசபை உறுப்பினர்கள் எனப் பலரும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டிருந்தனர்.