வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் ஸ்ரீநேசன் எம்.பி

தமிழ் மக்களுக்காக செயற்பாடுகளை மேற்கொண்டவர்கள் யார் என்பதை கருத்திற்கொண்டே வரவு- செலவுத் திட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்ததென அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சிறிநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவு வழங்குவதா அல்லது எதிர்ப்பதா என்ற கேள்வி எங்கள் மத்தியில் எழுந்தது.

இதன்போது நாங்கள் அதிகமாக சிந்தித்த விடயம் என்னவென்றால், கடந்த ஆட்சியாளருக்கு சாதகமாக நடப்பதா அல்லது தற்போதைய ஆட்சியாளருக்கு சாதகமாக நடந்து அவர்கள் ஊடாக சில அபிவிருத்தி மற்றும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதா என்பதன் அடிப்படையிலேயே நாம் சிந்தித்திருந்தோம்.

அந்தவகையில் எமது நாட்டில் காணப்படுகின்ற பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றினை ஒப்பிட்டே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

மேலும்  தமிழ் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அம்மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வருகின்றவர்கள் யார் என்பதை ஆராய்ந்தே வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்கினோம்” என சிறிநேசன் தெரிவித்துள்ளார்.