உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட சிஹான் கே.இராமச்சந்திரனின் 5 ஆம் வருட நினைவு நாள்


பிரிந்தும் எம்மை விட்டுப் பிரியாத, மறைந்தும் நம்மிலிருந்து மறையாத மாமனிதர் அமரர். சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் (கறுப்புப் பட்டி - 8 ஆவது DAN) அவர்களின் 5 ஆம் வருட நினைவேந்தல் நிகழ்வானது ராம் கராத்தே சங்கத்தின் பிரதம போதனாசிரியர் சிஹான் கே.ஹேந்திரமூர்த்தியின் தலைமையில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.

அக்கரைப்பற்று, தருமசங்கரி மைதானத்தில் அமைந்துள்ள உள்ளக விளையாட்டரங்கில் நேற்று (6) மாலை இறை வழிபாடு மற்றும் அவரது ஆத்ம சாந்திக்கான இரண்டு நிமிடப் பிரார்த்தனையுடன் ஆரம்பமாகிய நினைவேந்தல் நிகழ்வில் ராம் கராத்தே சங்கத்தின் சகல கறுப்புப் பட்டி வீரர்களும் அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி, தீபமேற்றி, மலர் தூவி தங்களது இதயபூர்வமான அஞ்சலியைச் செலுத்தினர். குறித்த நினைவேந்தல் நிகழ்வில் ராம் கராத்தே சங்கத்தின் சிரேஷ்ட போதனாசிரியர்கள், உதவிப் போதனாசிரியர்கள், கறுப்புப் பட்டி வீரர்கள், மாகாண தேசிய மட்ட சாதனையாளர்கள் என 50 பேருக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அந்த நினைவேந்தல் நிகழ்வைத் தலைமைதாங்கி உரையாற்றிய ராம் கராத்தே சங்கத்தின் பிரதம போதனாசிரியர் சிகான் கே.ஹேந்திரமூர்த்தி, மறைந்த மாமனிதர் அமரர். சிஹான் கே.இராமச்சந்திரன் ஒரு சிறந்த ஆசான் என்பதோடு அவருக்கு இணையாக எவரையும் ஒப்பிட முடியாத சகல வல்லமைகளும் பொருந்திய ஒரு கராத்தே உலக ஜாம்பவான். அவர் எப்போதும் எதிர்மறையான நடத்தைக் கோலங்களைக் கொண்டவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கியவர் எனக் குறிப்பிட்டதோடு, அந்த மாமனிதரை இந்த இடத்தில் நினைவுகூரவேண்டும் என்ற எனது எண்ணத்துக்கு மதிப்பளித்து தூர இடங்களிலிருந்து வந்து கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

அடுத்ததாக சிஹான் கே.இராமச்சந்திரனின் நினைவலைகளைப் பதிவுசெய்த ஓய்வுநிலை அதிபரும் யோகாசனப் பயிற்றுவிப்பாளரும் ராம் கராத்தே சங்கத்தின் இலங்கைக் கிளைக்கான ஆலோசகரும் கிழக்கு மாகாண ராம் கராத்தே சங்கத்தின் தலைவரும் சிரேஷ்ட கராத்தே போதனாசிரியருமான சிஹான் கே.சந்திரலிங்கம், மறைந்த ஆசான் கே.இராமச்சந்திரன் ஒரு திறமையான கராத்தே போதனாசிரியர் மட்டுமன்றி எம்மைப் போன்றவர்களுக்கெல்லாம் நல்லொழுக்கங்களைப் போதித்தவராகவும், சிறந்த வழிகாட்டியாகவும் எங்கள் அனைவரதும் ஆழ்மனங்களில் இடம்பிடித்து, இவ்வுலக வாழ்விலிருந்து மறைந்திருந்தாலும் இன்றுவரை எம்மை வழிநடாத்திக்கொண்டிருக்கும் ஒரு மாமனிதராவார். அத்தோடு எம் மாணவர்கள் தேசிய ரீதியில் சாதித்ததோடு மட்டுமல்லாமல் கடந்த வருடங்களைப் போன்று இனிவரும் நாட்களிலும் அயல் தேசங்கள் சென்று சாதித்துக் காட்ட எமக்குத் துணை நிற்பார் என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து ‘உடற்பயிற்சியும் உள ஆரோக்கியமும்’ என்ற தொனிப்பொருளில் பேசிய அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ரெமென்ஸ், இன்றைய அவசர யுகத்திற்கு ஆட்பட்டுள்ள மனிதர்கள் முறையான உணவுப் பழக்கவழக்கங்களையோ, சரியான உடற்பயிற்சிகளையோ மேற்கொள்வதில்லை. மாறாக இயந்திரகதியில் சதா இயங்கிக்கொண்டு தமது தேவைகளில் மட்டும் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். தமது சிறுபராயத்திலே அவர்களுக்குக் கிடைத்த பொழுதுபோக்குகளோ, விளையாட்டுப் பயிற்சிகளோ இன்று அவர்களுக்கு அறவே கிடைப்பதில்லை. தமது உடல் ஆரோக்கியத்தைப் புறக்கணித்து பணத்தைத் தேடுவதிலும் அதைச் செலவழிப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். இதனால் முழுக்க முழுக்க மருந்து மாத்திரைகளோடு சீவியம் நடத்தும் சந்ததியாகவே நாம் இன்று இருக்கிறோம். ஆனால் இங்கிருக்கின்ற கராத்தே வீரர்களைப் பார்க்கும்போது எனக்கு நம்பிக்கை துளிர்க்கிறது. இவர்கள் இந்தக் கராத்தே கலையினூடாகக் கிடைக்கும் ஆரோக்கிய உடற்பயிற்சிகளை இறுதிவரை கைவிட்டுவிடாது தொடர்ந்து பின்பற்றுவதற்கு இன்று நம்முடன் வாழ்ந்து மறைந்தும் மறையாத மாமனிதர் சிஹான் கே.ராமச்சந்திரன் அவர்களின் நினைவு நாளில் உறுதி பூணவேண்டும் என்று தெரிவித்தார்.

இறுதியாக அவரது மாணவர்களும் அனைத்து வீரர்களும் இணைந்து சிஹான் கே.ராமச்சந்திரன் அவர்களது திருவுருவத்துக்கு மரியாதை செய்யும் நிகழ்வுடன் குறித்த நினைவேந்தல் வைபவம் நிறைவுற்றது.

இலங்கை கராத்தே சம்மேளனத்தின் தலைவராக, இலங்கை கராத்தே சம்மேளனத்தின் நடுவர் சங்கத் தலைவராக, தொழில்நுட்பக் குழுவின் தலைவராக, அதன் உப தலைவராக பல பதவிகளை வகித்திருந்த அமரர். சிஹான் கே.இராமச்சந்திரன் அவரது பதவிக் காலத்தில் அவற்றைச் சிறப்பாக வழிநடத்தியவர் என்பதோடு ஆரம்ப காலத்தில் ஆசிய நடுவர் குழாமில் சிறப்புடன் பணியாற்றியிருந்தவர். கடந்த 1970 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்தப்பட்ட ஆண்களுக்கான கட்டழகர் போட்டியில் கலந்துகொண்டு Mr. Batticaloa பட்டத்தை வென்றிருந்த அவர் தனது 65 ஆவது வயதில் (06.06.2014) ஏற்பட்ட திடீர் மாரடைப்பினால் இயற்கையடைந்தார்.