Thursday, June 13, 2019

நாட்டை அழிவு பாதைக்கு இட்டு செல்லும் ஜனாதிபதி மைத்திரி

ads


ஆர்.சயனொளிபவன்  & TEAM 
 • சமாதான புறாவாக நல்லிணக்க ஆட்சியை  ஆரம்பித்த மைத்திரி 
 • எளிமையான சாதுவான தன்மைகளை  காட்டி மக்கள் மனதில் 
 • ஜனவரி 2018 உள்ளூர் ஆட்சி தேர்தலில் பெரு வெற்றி கொண்ட மஹிந்தவின் தாமரை மொட்டு 
 • மைத்திரி மஹிந்தவின்  ஒக்டோர் 2018 ஆட்சி களைப்பு முயற்சியும் நாட்டில் தொடர்ந்த  ஸ்திரமற்ற  தன்மையும் 
 • மைத்திரி அதிகாரத்தை பாவித்து எடுக்கும் அதிரடி முடிவுகள் 
 • ஜனாதிபதி தேர்தலுக்குரிய தினம் அறிவிக்கும் வரை உள்ள காலப்பகுதிக்குள் ஏற்படவிருக்கும் அதிரடி நடவடிக்கைகள்
எமது நாட்டின் நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதிகளின் சரித்திரத்தை பார்ப்போமானால்  ஜனாதிபதிகள் என்ற வரிசையில் மைத்திரி 6வது ஜனாதிபதியாகவும் அதேவேளை 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதியாகவும் பதவியேற்றுள்ளார். மேலும் ஜனாதிபதி மைத்திரியின் பார்வையில் இருந்து பார்க்கும் போது சரித்திரம் தனக்கு சாதகமாக இருப்பதனாலும் மேலும் நாட்டில் பதவிவகித்த  நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதிகளான J R ஜெயவர்த்தன, சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச அனைவரும் ( முன்னாள் ஜனாதிபதி R பிரேமதாசா தவிர - பதவியில் இருக்கும் போதே படுகொலை செய்யப்பட்டதால் ) இரு முறை ஜனாதிபதியாக பதவி வகித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்க முக்கிய விடயமாகும். மேலும் நிறைவேற்று அதிகாரம் தம்வசம் உள்ள வரையில் ஜனாதிபதி மைத்திரியின் பார்வையில் தனக்கும் முன்னாள் ஜனாதிபதிகளை போல் இரண்டாம் தவணை ஜனாதிபதியாக வருவதற்கு நல்ல சந்தர்ப்பம்  உள்ளது எனவும் சிந்திக்க தொடங்கியுள்ளார் . மேலும் இவருடைய இவ் எண்ணப்பாட்டால் நாடு  என்றும் இல்லாத அளவிற்கு நெருக்கடிக்கு தள்ளப்பட்டு கொண்டிருப்பதையும் எம்மால் உணரக்கூடியதாகவும் உள்ளது.

சமாதான புறாவாக நல்லிணக்க ஆட்சியை  ஆரம்பித்த மைத்திரி
நவம்பர் 2014ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதி தேர்தலுக்குரிய தினத்தை அறிவித்து ஓரிரு தினங்களுக்குள் நல்லாட்சிக்கான அமைப்பு தமது ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி அவர்களை களமிறக்கி 08 ஜனவரி.2015 அன்று நடைபெற்ற தேர்தலில் வெற்றியாளராக வெளிகொண்டுவந்தனர் என்பது யாவருக்கும் தெரிந்த விடயமே.

மேலும் இவருடைய வெற்றிக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் வாக்காளர்கள், தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள், மலையக தமிழ் மக்கள் ஆகியோர் பெரும் பங்களித்துள்ளனர் . இவை யாவற்றிற்கும் ஏற்றாற்  போல் மைத்திரி ஆட்சிக்கு  வந்த ஓரிரு தினங்களில் இருந்தே நாடளாவிய அளவில் பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டதுடன் நாட்டில் வாழும் சகல இன மக்களும்  பீதி அற்ற நிலையுடன் வாழும் நிலை  ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு பின்பு உணரக்கூடியதாக  இருந்தது . இவை மட்டுமல்லாமல் புதிய ஜனாதிபதி மைத்திரியோ 10 உறுப்பினர்களை தேர்ந்து மேலும் அவ் உறுப்பினர்களிடம்  நாடு சம்பந்தமான முக்கியமான முடிவுகளை எடுக்கும் பொறுப்பையும்   கொடுத்தார் . இச் சபையில் மறைந்த சோபித தேரர்  ஒரு முக்கிய அங்கத்தவராக இருந்து  பங்காற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஆனால் துரதிர்ஸ்ரவசமாக நவம்பர் 2015 இல்  சோபித தேரரின் மறைவை தொடர்ந்து  இச்சபையின் முக்கியத்துவம் இழந்த   நிலையும்  உணரக்கூடியதாக இருந்ததும்  மேலும் காலப்போக்கில் இச் சபையும் கலைந்து  போனது

எளிமையான சாதுவான தன்மைகளை காட்டி மக்கள் மனதில்

மைத்திரி ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் ஓரிரு வார காலங்களுக்குள்ளேயே நாட்டின் உள்ள சகல மக்களின் மனதை கவர்ந்த முதல் மனிதனாக இடம் பிடிக்கவும் தவறவும் இல்லை. முக்கியமாக
 • பொது இடங்களில்  அதாவது விஹாரமகாதேவி பூங்கா போன்ற பகுதிகளில் உடற்பயிற்சியிற்கு மிக குறைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் உலா வருவதும் 
 • பொதுஇடங்களுக்கு செல்லும் போது மக்களை தேடி செல்வதையும் மற்றும் மக்களோடு மக்களாக நின்று புகைபடங்கள்  எடுப்பதையும் 
 • நாட்டின் பல பகுதிகளுக்கும் செல்லும் போது மக்களுக்குள் சென்று மக்களின் குறைகளை கேட்டறிபவராகவும்  
 • வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் போது மக்களோடு மக்களாக பயணிப்பதும் 
 • வெளிநாட்டு பயணங்களில்  சாதாரண மக்கள் போல் பொது இடம்களுக்கு செல்வதும்
 • நாட்டின் பல பாகம்களுக்கும் விஜயம் செய்யும் போதும் வீட்டில் இருந்து பொதியில் கொண்டுவரும் எளிமையான உணவை உட்கொள்ளுவதும் 
என பல விடயம்களில் ஜனாதிபதி மைத்திரி நாட்டு மக்களிடம் முன்பிருந்த ஜனாதிபதிகளை விட குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவை விட மக்களின் ஜனாதிபதியாக பெரும் இடத்தை பெற்றிருந்தார்.

ஜனவரி 2018 உள்ளூர் ஆட்சி  தேர்தலில் பெரு வெற்றி கொண்ட மஹிந்தவின் தாமரை மொட்டு


நல்லாட்சியில் நாட்டுமக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையீனம் மற்றும் மகிந்த தரப்பின் மேல்  சுமத்தப்பட்ட 
 • பாரிய அளவிலான நிதிமோசடி மற்றும் மனித உரிமை மீறல்கள் நிரூபிக்கப்படாமை மேலும் இவை யாவும் மஹிந்தவிற்கு எதிராக வேண்டுமென்றே சோடிக்கப்பட்ட முயற்சிகளா என எழுந்த ஐயப்பாடு
 • மந்தகதியிலான அபிவிருத்திமுயற்சிகள்
 • மேலும் ஐக்கிய தேசிய அரசால் மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் பல நூறு  கோடி ரூபாக்கள் அளவிலான கடன் பினைமுறிப்பு மோசடி
இவைகளால்  குறிப்பாக  சிங்கள மக்கள் மத்தியில் இவ் இரு கட்சிகளுக்குள்ளும்   வைத்திருந்த நம்பிக்கையை இழந்த தன்மையை ஜனவரி 2018 நடைபெற்ற உள்ளூர் ஆட்சி தேர்தல்கள் தெளிவாக எடுத்து காட்டியது அத்தோடு மஹிந்தவின் தாமரை மொட்டு அணி தன்னிச்சசையாக போட்டியிட்டு 50% மேலான வாக்குகளை பெற்று பெரு வெற்றியையும் ஈட்டியது  அதே வேளையில் ஏதோ ஒரு வகையில் கூட்டாட்சிக்கு பங்காளிகள் போல் இயங்கிய  சிறுபான்மை மக்களை பிரதிநிதிவப்படுத்தும்  கட்சிகள் தமது பிராந்தியங்களில்  பெரும் வாக்கு சரிவையும் கண்டது. மேலும் இம் முடிவுகள்  நல்லாட்சியில் மக்கள் வைத்துள்ள அதிருப்தியை தெளிவாக வெளிப்படுத்தியது.

இத் தேர்தலை  தொடர்ந்து பிரதமர் ரணிலுக்கு  எதிராக மகிந்த அணியால்  நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டதும். மேலும் அம் முயற்சியில் மஹிந்த அணி தோல்வியை தழுவியதையும் அதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான கருத்துவேறுபாடுகளும்  அதிகரிக்க துவங்கியதும் தெளிவாக தென்படத்துவங்கியது.

மைத்திரி மஹிந்தவின் ஒக்டோபர் 2018 ஆட்சி களைப்பு முயற்சியும் நாட்டில் தொடர்ந்த ஸ்திரம் அற்ற தன்மையும் 26 அக்டோபர் 2018 ஜனாதிபதி மைத்திரி மஹிந்த அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் சதி மூலம் ஆட்சியை கைப்பற்ற மேற்கொண்ட முயற்சியும் அதனைத்தொடர்ந்து அவ் முயற்சி தோல்வியைத்தழுவியதால் ஜனாதிபதி மைத்திரியால் பாராளுமன்றத்தை கலைக்க மேற்கொண்ட மற்றுமொரு முயற்சியிற்கு நாட்டின் உயர் நீதிமன்றம் இவ் முயற்சியானது நாட்டின் 19A அரசியல் சட்டத்திற்கு முரணான முயற்சி என்று தீர்ப்பளித்ததும் மேலும் நாடாளுமன்றத்தில் ரணில் தரப்பு தமது பெரும்பான்மையை மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியாக்கியதும் தெரிந்ததே .

மேலும் இத்தன்மை நாட்டையே இரு மாத காலங்களுக்கு  ஸ்தம்பிதமடையவும் செய்தது. இவை மட்டுமன்றி இதன் தொடர்ச்சியான தாக்கத்தை பொருளாதார ரீதீயாக பார்போமேயாயின் பாரிய முதலீட்டாளர்கள் இலங்கையில் வைத்திருந்த நம்பிக்கையையும் இழக்கவைத்துள்ளது. இக்காலகட்டத்தில் இலங்கை ரூபா ஏனைய நாணயங்களுக்கு எதிராக பெரும் வீழ்ச்சியையும் கண்டதும் .பெருமளவில் இறக்குமதி பொருட்களில் தங்கியிருக்கும் எமது நாடு பெருமளவு பொருட்களில் விலையேற்றத்தையும் சந்திக்க நேர்ந்துள்ளது . இது ஒருபக்கம் இருக்க ஆட்சி கலைப்பு முயற்சியானது மஹிந்தவின் செல்வாக்கிலும் பாரிய சரிவையும் ஏற்படுத்தியுள்ளது

மைத்திரி அதிகாரத்தை பாவித்து எடுக்கும் அதிரடி முடிவுகள்


நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதெற்கென நல்லாட்சிக்கான அமைப்பால் ஜனாதிபதியாக கொண்டுவரப்பட்ட மைத்திரி அவர்கள் தனக்குரிய சில நிறைவேற்று அதிகாரங்களை மட்டும் தான் குறைத்தாரே தவிர    அதன் பின்பு எஞ்சியுள்ள அனைத்து அதிகாரங்களையும் தம்வசம் வைத்திருக்கவே விரும்பினார். மேலும் தனது நிறைவேற்று அதிகாரத்தை பாவித்து தன்னிச்சிசையான முடிவுகளையும் எடுக்க துவங்கினார். குறிப்பாக
 • நாட்டில் உள்ள அணைத்து அமைச்சுக்களும் மற்றும் திணைக்களங்களும் ஜனாதிபதி மைத்திரியின் எண்ணப்படி நடக்கவேண்டும் என்ற எண்ணப்பாட்டை கொண்டிருத்தல்
 • கடந்த அக்டோபர் 26  ல் பிரதமர் ரணிலை பதவியில் இருந்து நீக்க முயன்றது வெற்றியளிக்காத நிலையில் பாராளுமன்றத்தை கலைக்கமுயன்றது
 • கடந்த ஜனவரி மேற்கொள்ளப்பட்ட ஆளுநர்களின் நியமனங்களின் போது தன்னிச்சையாக முடிவுகளை எடுத்ததாகவும் குறிப்பாக அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ், சுரேன் ராகவன் ஆகியோரின் நியமனங்களில்
 • மாகாண சபைகளுக்குள் வரும் அதிகாரங்களை தம் வசம் வைத்து  மாகாண ஆளுநர்களை நியமித்து அதன் மூலம் தனக்கு ஏற்ற வகையில் மக்களின் மனதில் இடம் பிடிக்க கூடிய வகையில் கொள்கைகளை நடைமுறைப் படுத்துவது
 • அமைச்சரவை உறுப்பினர்களை நியமிக்கும் மற்றும் நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளதால் ஐக்கிய தேசிய முன்னணியால் சிபாரிசுகள் மட்டுமே மேற்கொள்ளக்கூடியதாக உள்ளதாலும் மேலும் அவ்வகையில் ஜனாதிபதி தாம் விரும்பாத ஒருவருக்கு அமைச்சர் பதவிக்கு நியமிக்காது இருப்பதும் தென்படுகின்றது அந்த வகையில் சரத்பொன்சேகா  அவர்களும் உள்ளடங்குவார்
 • வெளிநாடுகள் செல்லும் போதும் தாம் வகிக்கும் முக்கிய அமைச்சு பொறுப்புகளை தாமே வைத்துக்கொள்ளுவதும்
 • உயிர்த்த ஞாயிறு முஸ்லீம் அடிப்படைவாத தற்கொலை தாக்குதல்களுக்கு பாதுகாப்பு அமைச்சு பொறுப்பை தம் வசம் வைத்துள்ள ஜனாதிபதி மைத்திரி தாக்குதல்கள் பற்றிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டபோதும் உதாசீனம்  பண்ணியது மேலும் தனது அதிகாரத்தை பாவித்து அதற்கு உரிய பொறுப்பை ஏற்கமறுத்தல்
 • உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியம் அளித்த முன்னாள் போலீஸ் ஆணையாளர் மற்றும் பாதுகாப்பு செயலாளர்களின் வாக்குமூலம்களை தொடர்ந்து அவ் தெரிவுக்குழுவின் விசாரணையை முடக்க முயற்சித்தல்
 • நீதிமன்றம்களை அவமதித்த குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்ட ஞான தேரரை விடுவித்தது
 • அண்மைக்காலமாக தனக்கு உகந்த முறையில் ஐக்கிய தேசிய முன்னணி அரசை செயற்படாதவிடத்து அமைச்சரவை கூட்டத்தை நடாத்தாது இருத்தல்

பெரும் அதிர்ச்சி என்னவெனில் சமாதான புறவாக மற்றும் மிகவும் எளிமையான முதல் மனிதராக நாட்டு மக்கள் மனதில் இடத்தை பிடித்தஜனாதிபதி மைத்திரி பின்னர் முன்பு இருந்த ஜனாதிபதிகளை விட தமது நிறைவேற்று அதிகாரத்தை தன்னலத்திற்கு  பயன்படுத்துவதேயாகும் .

ஜனாதிபதி தேர்தலுக்குரிய தினம் அறிவிக்கும்வரை உள்ள காலப்பகுதிக்குள் ஏற்படவிருக்கும் அதிரடி நடவடிக்கைகள்ஜனாதிபதி தேர்தலுக்குரிய காலப்பகுதி அண்மித்த நிலையில் மேலும் ஜனாதிபதி மைத்திரி பல அதிர்ச்சி தர கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என பலராலும் எதிர்வு கூறப்படுகின்றது. அண்மைக்கால செயற்பாடுகளை எடுத்துக்கொள்வோமாயின் தெளிவாக தென்படுவது என்னவெனில் ஜனாதிபதி மைத்திரி தான் இரண்டாவது முறையும் ஜனாதிபதி பதவிக்கு போட்டி போடுவதற்குறிய செயல் திட்டத்தில் இறங்கியுள்ளதேயாகும். இதன் ஒரு கட்டமாக

 • ஜனாதிபதி தேர்தலில் நிற்பதற்கான ஒரு சாதகமான சூழலை உருவாக்க முற்படுகின்றார்.

இதற்கு முதல் கட்டமாக அவரை பொறுத்த அளவில் ஒரு திடமான கள நிலைமையை உருவாக்கவேண்டும் அதற்காக இதுவரை ஜனாதிபதி மைத்திரி பல அரசியல் குத்துகரணங்களை அடித்தும் தேவை ஏற்படின் பழிவாங்கல் முயற்சிகளை மேற்கொள்ளுவதும் குறிப்பாக கடந்த 12 மாதகாலப்பகுதிக்குள் காணப்படும் ஒரு பொதுவான விடயமாக உள்ளது. மேலும் அவற்றுள் சில 

1.பிரதமர் ரணிலை முன்னிலை அரசியலில் இருந்து ஒதுக்க முயற்சி 
மறைந்த சோபித தேரரின் நல்லாட்சிக்கான அமைப்பு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரி அவர்களை வேட்பாளராக களமிறக்கிய போது. மைத்திரி அவர்கள் ஒரு முறை ஜனாதிபதி என்றும் மற்றும் மைத்திரி அவர்கள் தனது பதவிக்காலத்திற்குள்ளேயே நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி முறையை ஒழிப்பதெனவும் அத்தோடு  அதிகாரத்தின் மையமாக பாராளுமன்றம் மாற்றப்படவேண்டும் என்ற ஒரு புரிந்துணர்வு அடிப்படையிலேயே மைத்திரி களமிறக்கப்பட்டார் எனவும் மேலும் இரண்டாவது தவணை இவர் பிரதமர் ரணிலின் வெற்றிக்கு உழைக்கவேண்டும் எனவும் கூறப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரியோ ரணில் ஓரங்கட்டப்படும் பட்சத்தில் புதிய ( ஜனாதிபதி கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் கூறியதாகவும் கொழும்பு ஊடகங்களும் கூறுகின்றன) ஐக்கிய தேசிய கட்சியின் வெல்லக்கூடிய தலைவருடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஈடுபடுவதன் மூலம் தான் இரண்டாவது தடவையும் தேர்தல் களத்தில் இறங்கலாம் எனவும்

2.ரணிலை ஒதுக்கும் முயற்சி பயனளிக்காத பட்சத்தில் மஹிந்தவுடன் இணைந்து ஒரு சாதகமான களநிலைமையை உருவாக்குதல் 

அதாவது மஹிந்தவை பொறுத்த அளவில் அவரால் பிரதமராக மட்டும் தான் வரமுடியும். மேலும் மஹிந்தவை பொறுத்தளவில் அவருடைய மகன் நாமல் நாட்டின் தலைமை பொறுப்பில் விரைவில் அமர்த்தப்படவேண்டும் . மற்றும் மஹிந்தவின் பார்வையில் மைத்திரியை பொறுத்த அளவில் அவர் மேலும் ஒரு முறை தான் ஜனாதிபதியாக வரமுடியும். அதே வேளை இச் சந்தர்ப்பத்தில் புதிய ஒருவர் ஜனாதிபதியாக வரும் பட்சத்தில் மைத்திரியை போல் அவரும் மேலும் ஒரு முறை அதாவது இரண்டாவது தவனையும் ஜனாதிபதியாகுவதற்கு முயற்சிக்கலாம்    என்பதுதான் யதார்த்தம் . இவை யாவற்றையும் நன்கு அறிந்துள்ள மஹிந்த தன்னுடைய காலப்பகுதிக்குள் தனது மகன் உயர் பதவிக்கு வருவதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பமாக மைத்திரி அணியுடன் சேர்வதன் மூலம் சாதிக்கலாம் என எதிர்வு கூறப்படுகின்றது . 


3. மேலும் கோத்தபாய ராஜபக்ச சிங்கப்பூரில் கடந்த வாரம் இருதய அறுவைசிகிச்சைகியிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாலும் மீண்டும் ஒரு முறை மைத்திரியின் சந்தர்ப்பம்  சற்று அதிகரித்திருப்பதாகவும். இச் சந்தர்ப்பத்தில் மைத்திரி தனக்குள்ள பொதுமக்களின் அபிப்பிராயத்தில் மேலும் அதிருப்தி வராமல் பார்த்துக்கொள்வதில் மிகவும் அக்கறையுடன்  உள்ளதாகவும் இதன் ஒரு தோற்றப்பாடுதான் தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பொறுப்பை கண்டறிவதற்கான விசாரணை. தற்போதைய நிலைமைகளின் படி பொறுப்பு ஜனாதிபதியின் பக்கம் சாய்வதால் ஜனாதிபதி அவ் விசாரணையை உடன் நிறுத்தவேண்டும் என்று பிடிவாதமாகவுள்ளார். இதனை காரணம் காட்டி திங்கள் நடைபெறவிருந்த அமைச்சரவை கூட்டத்தையும் ஜனாதிபதி கூட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும் .

4. ஜனாதிபதி மைத்திரியின் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலியின் நியமனங்களின் மூலம் - (ஆனால் இம் முயற்சி தற்போது தோல்விகண்டுள்ளது )

 • இவர்கள் இருவரும் முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் றிசாத்தின்   மக்கள் காங்கிரசிற்கு எதிரானவர்கள் இதன் மூலம் முஸ்லீம் மக்களின் வாக்குவங்கியை பிரித்தல் அதாவது ஒரு பகுதி முஸ்லீம் வாக்காளர்களை தம் வசப்படுத்துதல்
 • மேலும் ஹிஸ்புல்லாஹ்வை பொறுத்தளவில் அவர் தமிழ் விரோத போக்கு உடையவர் இதன் மூலம் தமிழ் முஸ்லீம் மக்களின் வாக்குகளை வரும் ஜனாதிபதி தேர்தலில் பிரித்தல் மேலும் இதன் மூலமும் பெரும் பகுதி முஸ்லீம் வாக்காளர்களை தம்வசப்படுத்துதல்

ஆனால் இம் முயற்சியானது ரத்தின தேரரின் உண்ணாவிரத முயற்சியை தொடர்ந்து தோல்விகண்டுள்ளது 

 • மேலும் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மூலம் தமிழ் மக்களின் வாக்கு வங்கியின் ஒருபகுதியினரை தம் வசப்படுத்துதல். வடக்கு வாழ் மக்களின் நலன்களில் அதிக அக்கறை காட்டும் வடமாகாண ஆளுநர் ஜனாதிபதிக்கு ஆதரவாக வடக்கு தமிழ் மக்களை சேர்க்கும் முயற்சியில் தன்னையும் ஒரு கட்டத்தில் ஈடுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

4. கடும் சிங்கள போக்காளர் ஞான தேரரின் விடுதலையின் மூலம் ஜனாதிபதி மைத்திரி மேலும் ஒரு விடயத்தை தெளிவுபடுத்துகின்றார். அவருடைய கடும் சிங்கள போக்கு மேலும் நாடு தற்போது உள்ள நிலையில் பெரும்பான்மை சிங்கள மக்களின் நன்மதிப்பை பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சியாக கருதப்படுகின்றது .   ஜனாதிபதி மைத்திரி தான் இரண்டாவது முறை களமிறங்குவதற்கு உரிய ஒரு கள நிலையை உருவாக்குவதற்கே இவ்வாறு விடா முயற்சிகளை மேற்கொள்ளுவதாகவும் மேலும் அவர் தேர்தலில் நிற்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் பட்சத்தில் நாடு பெரும் நெருக்குவாரத்தையும் சந்திக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை எனவும் கருதப்படுகின்றது . 

எமது நாடு போன்ற ஒரு வளர்முக நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை தோன்றும் போது கூடுதலாக வெளிநாட்டு வருமானம் மற்றும் முதலீடுகளில் பெருமளவு தங்கியுள்ள இவ் வேளையில் குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பார்வையில் தமது முதலீட்டிற்கும் ஆபத்தான நிலை உருவாகும் என்ற ஊகத்தால் தாங்கள் முதலீடும் அளவை குறைக்கலாம் அல்லது தமது முதலீட்டை திரும்பி பெறலாம் இதன் தொடர்ச்சியாக நாடு பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவுகளையும் சந்திக்கும் என்பதிலும் ஐயமில்லை.


தற்போதைய நிலைமைகளை வைத்து பார்க்கும் போது வருகின்ற ஜனாதிபதி தேர்தலை பொறுத்தளவில் நாடு என்றுமில்லாதவாறு நெருக்கடியானா நிலைக்கு தள்ளப்படும் சந்தர்ப்பங்கள்  அதிகமாக காணப்படுவதாகவும் . மேலும் ஜனாதிபதி மைத்திரி களமிறங்கும் பட்சத்தில் அதிலும் குறிப்பாக அரசில் இருக்கும் இரு கட்சிகளிலும்  இருந்து வேட்பாளர்கள் தேர்தலில் குதிக்கும் பட்சத்தில் நாடு கற்பனையே பண்ணமுடியாத அளவிற்கு  இருண்ட காலப்பகுதிக்குள் தள்ளப்படக்கூடிய சந்தர்ப்பம்  அதிகமாகவே தென்படுகின்றது.

ஆர்.சயனொளிபவன்  & TEAM 

நாட்டை அழிவு பாதைக்கு இட்டு செல்லும் ஜனாதிபதி மைத்திரி Rating: 4.5 Diposkan Oleh: Sayan
 

Top