ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸஹ்ரானுடன் எவ்வித ஒப்பந்தங்களையும் செய்யவில்லை



-எம்.பஹ்த் ஜுனைட்-

தற்கொலை குண்டுதாரி ஸஹ்ரானுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்ததாக பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியமாளித்த முன்னாள் கிழக்கு மாகாண ஆழுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளதாக பொதுஜனபெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேற்படி எந்த ஒப்பந்தத்தையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸஹ்ரானுடன் செய்தது என்பதை முற்றாக நிராகரிப்பதாகவும்,அதனை மறுப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் காத்தான்குடி பிரதான அமைப்பாளரும்,தேசிய கொள்கை பரப்புச்செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முபீன் அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,கடந்த 2015 பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக காத்தான்குடி பிரதேசத்தில் பிரதான செயற்பாட்டாளராக தானே செயற்பட்டதாகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பிலான தேர்தல் செயற்பாடுகளுக்கு தானே பொறுப்பாக இருந்ததாகவும் அந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக இருவர் போட்டியிட்டதாகவும் அதிலொருவர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மற்றொருவர் போட்டியிட்டதாகவும் அவர்கள் தனிப்பட்ட ரீதியாக ஸஹ்ரானுடன் ஒப்பந்தத்துக்கு சென்றிருக்கலாம் எனவும் அது தொடர்பில் கட்சியின் அமைப்பாளரான தனக்கோ அல்லது கட்சியின் தலைமைத்துவத்துக்கோ தெரியப்படுத்தவில்லை என்பதுடன் இத்தகைய ஒப்பந்தங்களில் ஈடுபட்டிருந்தால் அது தொடர்பில் கட்சியிடம் முன் அனுமதிபெறப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இத்தகைய ஒப்பந்தங்களில் யாராவது வேட்பாளர்கள் ஈடுபட்டிருந்தால் அவர்களே அதனை பொறுப்பேற்க வேண்டுமே ஒழிய கட்சி அதனை பொறுப்பேற்காது என முபீன் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.