பாராளுமன்றத் தெரிவுக்குழு இன்று மீண்டும் விசாரணை


ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல்கள் குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க இன்றையதினம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் சூபி முஸ்லிம் பள்ளிவாசல் பிரதிநிதிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தெரிவுக்குழுவின் விசாரணைகள் இடம்பெறவிருக்கும் அதேநேரம், விசாரணைகளை முன்னெடுப்பதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள், சபாநாயகர் கரு ஜயசூரியவைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

பாராளுமன்றத் தெரிவிக்குழுவினால் அழைக்கப்பட்ட சிலர் விசாரணைக்கு சமுகமளிக்காமை மற்றும் பணியில் இருக்கும் அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியிருந்தமை குறித்த பிரச்சினைகள் இங்கு பேசப்படவிருப்பதாக தெரிவுக்குழு உறுப்பினரும், ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

முன்னாள் பொதுநிர்வாக, முகாமைத்துவ மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன் ஆகியோர் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தபோதும் அவர்கள் ஆஜராகவில்லை. உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் இவர்கள் இருவரும் அங்கம் வகித்தனர். ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் என்பதற்காக மாத்திரமன்றி விசாரணைகளுக்குப் பதில் வழங்கக் கூடிய அதிகாரிகள் என்ற அடிப்படையிலுமே அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். சி.ஐ.டி மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளும் ஆஜராகவில்லை. இவ்வாறான நிலையில் எதிர்கால விசாரணை செயற்பாடுகள் குறித்து சபாநாயகருடன் கலந்துரையாடவிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். 

இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் பற்றியும் சபாநாயகருக்கு விளக்கமளிக்கவுள்ளோம் என்றார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரும் அழைக்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும், இது பற்றி தெரிவுக்குழு இணைந்தே முடிவெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்றையதினம் பிற்பகல் 2மணிக்கு கூடவுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியிடம் முதலில் விசாரணைகள் நடத்தப்படவிருப்பதுடன், அதனைத் தொடர்ந்து சூபி முஸ்லிம் பள்ளிவாசல் பிரதிநிதிநிதிகளிடம் விசாரணைகள் நடத்தப்படவிருப்பதாக தெரிவுக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தெரிவுக்குழுவின் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமர்வில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் ஆகியோர் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மீண்டும் இன்று ஆணைக்குழுவின் விசாரணை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.