தேர்தல் ஆணைக்குழுவின் அடுத்த நகர்வு நாளை


எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளதுடன் இதற்கு அனைத்து கட்சிகளதும் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷ்ப்பிரிய தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.

நாளை மாலை 02.00க்கு தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மற்றும் பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் என்பவற்றை நடத்துவது தொடர்பில் காணப்படும் சட்டசிக்கல்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை இந்த கலந்துரையாடலில் வாக்காளர் பெயர்பட்டியல் மீள்திருத்தம் தொடர்பிலும் கட்சி செயலாளர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த உள்ளூராட்சி ​தேர்தலில் தேர்தல் நடத்தப்படாத எல்பிடிய பிரதேச சபைக்கான தேர்தல் தொடர்பிலும் இந்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

இதேவேளை 18வயதை பூர்த்தி செய்த இலங்கயர்களுக்கு வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி குறுந்தகவல்களை அனுப்புவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கையெடுத்துள்ளது.

15 வயதை பூர்த்தி செய்த இளைஞர்களின் பட்டியல் இதற்கென தயாரிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதனடிப்படையில் குறித்த குறுந்தகவல் பரிமாற்றம் இடம்பெறவுள்ளது.