ரிஷாட் மீதான குற்றச்சாட்டை முஸ்லிம் அரசியல்வாதிகள் பொறுப்பேற்பார்களா? -மஹிந்தானந்த கேள்வி



முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பயங்கரவாதத்துக்கு துணைபோனதாக ஒப்புக்கொண்டால் அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வார்களா? என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்தானந்த அளுத்கமகே இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

‘‘தற்போதைய சூழ்நிலையில் ரிஷாட் பதவி துறந்தமை மாத்திரமே நடைபெற்றுள்ளது. ஆனால் அரசாங்கம் ஒருபோதும் மாறப்போவதில்லை. மேலும் அரசாங்கத்தை மாற்ற வேண்டியத் தேவையும் எமக்கு இல்லை.

இதேவேளை முஸ்லிம் அமைச்சர்கள் ரிஷாட்டுக்காக ஒன்றாக பதவி துறக்க முன்வந்துள்ளனர். அவ்வாறாயின் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டால் அதற்கான பொறுப்பையும் அவர்கள் அனைவரும் ஏற்பார்களா?

அத்துடன் இந்த நாட்டிலுள்ள 99 சதவீத முஸ்லிம் மக்கள், பயங்கரவாதத்துக்கு துணைபோகமாட்டார்கள். அவர்களுடன் சமூகத்தில் ஒன்றாக வாழ்வதனால் எமக்குத் தெரியும்.

ஆனால் தேர்தலை நோக்காகக் கொண்டு செயற்படும் சிலர், அப்பாவி முஸ்லிம் மக்களை இனவாத பிடிக்குள் தள்ளிவிட முனைகின்றனர்’’ என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.