கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை நடாத்திய தொழில் முனைவுக்கான கண்காட்சிப்படுத்தலும் விற்பனையும்



கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் ஏற்பாட்டில் கலைகலாசார பீடத்தின் முதலாம் வருட இரண்டாம் அரையாண்டு மாணவர்களைக் கொண்டு 'கலையும் தொழில் முனைவும்' எனும் பாடத்தின் செயற்பாட்டு நடைமுறை விடயத்தை வலுப்படுத்தி மாணவர்களின் படைப்பாக்கத் திறன், சுய உற்பத்தி, ஆளுமை விருத்தி ஆகியவற்றை முதன்மைப்படுத்தி அவர்களின் சிந்தனையில் இவ் எண்ணகரு தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் 'கலையின் மகத்துவமும் தொழில்முனைவும்' எனும் தலைப்பில் 21.06.2019 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் நுண்கலைத்துறையின் தலைவர் திரு சு.சந்திரகுமாரின் தலைமையில் தொழில் முனைவுக்கான கண்காட்சி நடைபெற்றது.

அவரது வழிகாட்டல், ஆலோசனையில் திட்டமிட்டு இந்த நிகழ்வு மாணவர்களின் முழு முகாமைத்துவத்துடன் செயற்படுத்தப்பட்டு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு, நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளர்களான கலாநிதி சி.ஜெயசங்கர், வ.இன்பமோகன், கு.ரவிச்சந்திரன் ஆகியோரும் குறிப்பாக, உதவி விரிவுரையாளர்களான திருமதி பிரியா இளங்கோ, செல்வி ஞானசக்தி, நுபீஸா, திருமதி துஸ்யந்தி சத்தியஜித், விரிவுரையாளர் து.கௌரீஸ்வரன் ஆகியோரும் மாணவர்களுடன் இணைந்து, வழிப்படுத்தி முழு ஒழுங்கமைப்பினையும் செய்திருந்தததுடன், நிகழ்விற்கான முயற்சி மற்றும் வழிகாட்டலில் கலைத் துறைப் பீடாதிபதி ரவி அவர்களின் சேவையும் அளப்பரியது.

இந்த நிகழ்விற்குப் பதில் பீடாதிபதி சமூக விஞ்ஞானத்துறையின் தலைவர் கலாநிதி ஜி.தில்லைநாதன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். கலைகலாசார பீடத்தின் துறைத்தலைவர்களான கலாநிதி ஜெ.ஹென்னடி, எம்.ரி.எம்.றிஸ்வி, கலாநிதி (திருமதி) எஸ். சாந்திகேசவன், திருமதி அன்ரன் அருள்ராஜ், வணக்கத்திற்குரிய அருள்தந்தை எ.எ.நவரட்ணம், க.கருணாகரன், எஸ்.ஜெகநாதன், கலாநிதி சி.அருள்மொழி ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர். கௌரவ அதிதிகளாக ஊரில் இவ் ஆக்கச் செயற்பாட்டில் ஈடுபடும் எம்.எ.சித்திக் (மரத்தளபாடக் கலைஞர்), ஜ.தஸ்லீம் (சிற்பி), விஸ்வராஜா பரஞ்சோதி (மட்பாண்டக் கலைஞர்), பாலசுப்பிரமணியம் கல்பனா (மட்பாண்டக் கலைஞர்), தர்மலிங்கம் வளர்மதி (மட்பாண்டக் கலைஞர்) ஆகியோர் வருகை தந்து கருத்துப் பகிர்ந்தனர். இவர்களுக்கு கௌரவம் அளிக்கப்பட்டது.

அத்தோடு, பேராசிரியர்கள், பீடாதிபதிகள், முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், ஊர்மக்கள், மாணவர்கள் எனப்பரும் கலந்து சிறப்பித்தமை சிறப்பம்சமாகும்.  மாணவர்களின் சுய படைப்புக்களான கவிதை, பேச்சு, நடனம், பாடல் ஆகிய ஆற்றுகைத் திறன்களும் வெளிப்படுத்தக்கட்டன.

இன்றைய உலகமயமாக்கல் வெளியில் உள்ளுர் கூட்டுச் செயற்பாடும் கூட்டு வாழ்வும் சிதைக்கப்பட்டு பணத்திற்காக மட்டும் அலையும் தனிமனித உணர்வின் நுகர்வுப் பண்பாட்டுச் சூழலில் கூட்டுணர்வுடன் எமது சுதேசிகளால் உற்பத்தி செய்யப்படும் உள்ளுர் உற்பத்திகளான பனம்பொருள், மட்பாண்டம், மரவேலை, பன்வேலை, தையல் கலை, உருக்குவேலை, உள்ளுர் உணவுகள் ஆகியவற்றில் ஈடுபடும் கலைஞர்களிடம் சென்று அவர்களிடம் பயின்று அவர்களின் இணைவுடன் தயாரித்தவையும், அவ் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொண்டுவரப்பட்டவையும் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.