ஏப்ரல் 21 தாக்குதல்களில் 23 சிறார்கள் உயிரிழப்பு; 61 சிறார்கள் காயம்



ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுடன் இணைந்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்படி, ஏப்ரல் 21 தாக்குதல்களில் 23 சிறார்கள் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 18 பேர் பெண் பிள்ளைகளாவர்.

இதேவேளை, தாக்குதலின் பின்னர் சிறுமியொருவர் காணாமல் போயுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி H.M. அபயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு குறித்த தாக்குதல்களில் 61 சிறார்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவர்களில் 30 சிறார்கள் சிறு காயங்களுக்கும் 31 சிறார்கள் படுகாயமடைந்துள்ளனர்.

அதேநேரம், ஏப்ரல் 21 தாக்குதல்களில் 26 பிள்ளைகள் தங்களின் பெற்றோர்களை இழந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 19 சிறார்கள் தமது தாய்மார்களையும் 4 சிறார்கள் தனது தந்தைகளையும் இழந்துள்ளனர்.

தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்த 3 பிள்ளைகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பெண் பிள்ளை ஒன்றும் இரண்டு சிறுவர்களுக்கும் சட்டபூர்வ பாதுகாவலர் ஒருவர் தேவைப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர் 42 குடும்பங்களைச் சேர்ந்த 78 சிறார்களுக்கு உலநள ஆலோசனை தேவைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 சிறார்களுக்கு கல்வி மற்றும் வாழ்வாதார உதவிகள் தேவைப்படுகின்றன.

7 சிறார்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவேண்டியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு ஏதேனும் வகையில் உதவ விரும்புவோர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.