ஹிஸ்புல்லாஹ் மற்றும் இலங்கக்கோனுக்கு தெரிவுக்குழு அழைப்பு



முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் ஆகியோரை நாளை சாட்சியமளிக்க அழைப்பதென பாராளுமன்ற தெரிவுக்குழு முடிவு செய்துள்ளது.

விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழு நாளை (13ஆம் திகதி) பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் கூடவுள்ளது.

இதில் மிக முக்கிய விடயம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் , இதே தாக்குதல்கள் குறித்து விசாரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினராவார்.

அந்தக் குழு அறிக்கையினை நேற்று முன்தினம் ஜனாதிபதியிடம் கையளித்துள்ள நிலையில் குழுவானது எந்த அடிப்படையில் எப்படியான விசாரணைகளை மேற்கொண்டது என்பதை கேட்பதற்காகவே இலங்ககோன் பாராளுமன்ற தெரிவுக்குழு முன் அழைக்கப்படவுள்ளார்.

ஏற்கனவே இந்த தெரிவுக்குழுவை ரத்துச் செய்ய ஜனாதிபதி வலியுறுத்தி வரும் நிலையில் அவர் நியமித்த குழுவின் உறுப்பினர் ஒருவரை தெரிவுக்குழு அழைத்திருப்பது ஜனாதிபதிக்கு மேலும் விசனத்தை ஏற்படுத்தக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை விசேட தெரிவுக்குழு சாட்சி விசாரணைகளை முன்னெடுத்தது.

இதன்போது, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பின் தலைவர் M.I.M. ரிஸ்வி மௌலவி, காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் மொஹம்மட் சுபெய் உள்ளிட்டோர் முன்னிலையாகியிருந்தனர்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் M.I.M. ரிஸ்வி மௌலவி தெரிவுக்குழுவில் நேற்று சாட்சியமளித்தார்.