தீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் செய்தியை தருவோம் : உண்ணாவிரதம் இருப்போர் !!




-நூருள் ஹுதா உமர்-

தீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை மாலை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம். என கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வை குறிக்கோளாக கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றிய தலைவர் ஸ்ரீ. க.கு. சச்சிதானந்தம் சிவம் குருக்கள் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை முதல் பிரதேச செயலகத்தின் எதிரில் உண்ணாவிரத போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் ,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு, ஹிந்து மத பூசகர்கள், தேவாலய பாதிரியார்கள், அவர்களுடன் கல்முனை மாநகரசபை கௌரவ உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் ஆகியோரும் கலந்து கொண்டு. இந்த உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்த போராட்டத்தில் பிரதேச சமூக நல அமைப்புக்களின் சில பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். இன்றைய தினம் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் ஆதரவாக களமிருங்கியிருந்தனர். இரண்டாவது நாளாக தொடரும் சாகும் வரையிலான போராட்டத்திற்கு மக்களின் ஆதரவும் கூடிவருகிறது.

போராட்டகார்கள் தாம் அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும் எங்கள் விடயத்தில் அரசாங்கம் பொடுபோக்காக இருப்பதாகவும் உடனடியாக இந்த விடயத்தை கவனத்தில்கொண்டு தீர்வது காணும் விதமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டாவது நாளான இன்று மாலை இவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு அம்பாறை அரசாங்க அதிபர் , மேலதிக அரசாங்க அதிபர் , கல்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் திரு.அதிசயராஜ் ஆகியோருடன் பிரதேசத்திறக்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரிகளும் கலந்துகொண்டு உண்ணாவிரத போராட்டகாரர்களுடன் கலந்துரையாடினார்கள்.

அரச உயரதிகாரிகளுக்கு பதிலளித்த போராட்டகாரர்கள் நாங்கள் இனவாத குழப்பங்களை உருவாக்க இங்கு பட்டினியுடன் அமரவில்லை. இந்த நல்லாட்சி எங்களை ஏமாற்றி விட்டது. சகல வளமும் மிக்க செயலகமாக இந்த செயலகத்தை தரமுயர்த்தி தர வேண்டும். அதுவரை நாங்கள் எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம். அரச வர்த்தகமானி வரும்வரை காத்திருக்கிறோம். எங்கள் மக்களுக்கு அரசு அவர்களின் உரிமைகளை தர முன்வர வேண்டும் என்றனர்.

தொலைபேசி மூலம் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றும் அவை பலனளிக்கவில்லை. தொடர்ந்தும் போராட்டம் இடம்பெற்று வருகிறது.