களத்தில் சுமந்திரன் , மனோவும் தயாவும் : உச்சி தொடும் உண்ணாவிரத போராட்டம்.!!




-நூருள் ஹுதா உமர்-


கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வை குறிக்கோளாக கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மத குருமாரின் போராட்டம் ஐந்து நாட்களை இன்று அடைந்துள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த திங்கட்கிழமை காலை முதல் பிரதேச செயலகத்தின் எதிரில் உண்ணாவிரத போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் ,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு, ஹிந்து மத பூசகர்கள், தேவாலய பாதிரியார்கள், அவர்களுடன் கல்முனை மாநகரசபை கௌரவ உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் ஆகியோரும் கலந்து கொண்டு. இந்த உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்த போராட்டத்தில் பிரதேச சமூக நல அமைப்புக்களின் சில பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். அன்று முதல் இன்றுவரை தினம் தினம் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் ஆதரவாக களமிருங்கியிருந்தனர். ஐந்தாவது நாளாக தொடரும் சாகும் வரையிலான போராட்டத்திற்கு மக்களின் ஆதரவும் கூடிவருகிறது.

போராட்டகார்கள் தாம் அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும் எங்கள் விடயத்தில் அரசாங்கம் பொடுபோக்காக இருப்பதாகவும் உடனடியாக இந்த விடயத்தை கவனத்தில்கொண்டு தீர்வது காணும் விதமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐந்தாவது நாளான இன்று மாலை இவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு இந்து விவகார சமூக நல்லிணக்க அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் அமைச்சருமான தயா கமேக அவர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் ஆகியோருடன் பிரதேசத்திறக்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரிகளும் கலந்துகொண்டு உண்ணாவிரத போராட்டகாரர்களுடன் கலந்துரையாடினார்கள்.