வெளிநாட்டில் இருந்ததாகக் கூறி பொறுப்பை ஏற்க மறுத்தார் ஜனாதிபதி; ஹேமசிறி பெர்ணான்டோ



தான் வெளிநாட்டில் இருந்ததால், உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களைத் தடுக்க முடியாமைக்கான பொறுப்பை ஏற்க மறுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதற்கான பொறுப்பை ஏற்றுப் பதவி விலகுமாறும் பதிலாக, தூதுவர் பதவியொன்றைப் பெற்றுத்தருவதாகவும், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு தெரிவித்ததாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறி​யமை தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்னால் முன்னிலையாகியிருந்த நிலையிலேயே, சற்றுமுன்னர் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர், அரச புலனாய்வுப் பிரிவு, தனக்குக் கீழ் இருந்த போதிலும், அதன் அனைத்துச் செயற்பாடுகளையும், ஜனாதிபதியே மேற்கொண்டதாகவும் தான், செயலற்ற அதிகாரியாகவே செயற்பட்டு வந்ததாகவும் கூறினார்.

தாக்குதல்கள் தொடர்பிலான தகவல்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, ஜனாதிபதியிடம் நேரம் ஒதுக்கித் தருமாறு பலமுறை கோரியிருந்த போதிலும், அவர் அதற்கு ஒரு நாள் கூட நேரம் ஒதுக்கவில்லை என்றும், பெர்ணான்டோ கூறினார்.

“பூஜித் ஜயசுந்தரை ஏன் விலகச் சொல்கிறீர்கள், அப்படியானால், இதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய அனைவரும் விலக வேண்டுமல்லவா, அதனால் நானும் பதவி விலகுகிறேன்” என்று ஜனாதிபதியிடம் கூறி, இராஜினாமா கடிதத்ததைக் கையளித்த போது, அவர் அதைப் புண்முறுவலுடன் பெற்றுக்கொண்டதாகவும், ஹேமசிறி பெர்ணான்டோ கூறினார்.