தொழுகையின் பின் வீடு திரும்பிய பெண் வாகன விபத்தில் பலி



வாழைச்சேனை, ஹைறாத் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (06) மாலை உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். 

வாழைச்சேனை, ஹைறாத் வீதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயாரான எம்.ஏ.சி. உசன் பீவி (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

முஸ்லிம்களின் நோன்பு காலத்தில் நிறைவேற்றும் மார்க்க கடமையான கியாமுல்லைல் எனும் இரவு நேர தொழுகையை நிறைவேற்றி விட்டு கடந்த 04 ஆம் திகதி அதிகாலை 3.15 மணி அளவில் வீடு திரும்புவதற்கு வாழைச்சேனை ஹைறாத் வீதியை கடக்க முற்பட்ட வேளை மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த பெண் காயமடைந்தார். 

பின்னர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரணைகளின் பின்னர் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வாழைச்சேனை ஹைறாத் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

விபத்துச் சம்பவம் தொடர்பான மோட்டார் சைக்கிள் சாரதிய கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்