நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் இந்த சிறுபான்மை அரசாங்கத்தை விரட்டியடிக்க முடியும்




மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட எதிர்கட்சியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய கட்சிகளும் சரியான முடிவினை எடுத்து வியாழக்கிழமை (ஜுலை 11) இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் இந்த சிறுபான்மை அரசாங்கத்தை விரட்டியப்பது கஷ்டமான விடயமல்ல என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதத்தின்போது உரையாற்றும்போது அவர் இதை சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தை தோல்வியடையச்செய்து மக்களுக்கு புதியதோர் பொதுத் தேர்தலை பெற்றுக்கொடுப்பதே தமது கட்சியின் எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்.

சரியான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும் அதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காது உயிர்த்த ஞாயிறு (2019.04.21) பாரிய அழிவினை ஏற்படுவதற்கு இடமளித்த அரசங்கத்திற்கு இனியும் நாட்டின் பாதுகாப்பையோ, மக்களின் பாதுகாப்பையோ ஒப்படைக்க முடியாடிதெனவும் அவர் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் மேலும் வலியுறுத்தியதாவது சரியான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் அரசாங்கம் தனது பொறுப்பை தட்டிக்கழித்துள்ளதுதெனவும் தெரிவித்தார்.

"இந்த அநியாயத்திற்கு பொறுப்பு கூறவேண்டிய இரண்டு குழுக்கள் உள்ளன. அதில் ஒன்று இந்த தாக்குதலை திட்டமிட்டு, அதை செயற்படுத்தி பாரிய அழிவை ஏற்படுத்தியவர்கள். அதில் சிலர் இறந்துள்ளனர். எஞ்சியவர்கள் தற்போது சீஐடியிலும், டிஐடியிலும் விசாரணை நடத்தப்படுகிறது. சிலர் கைது செய்யபப்ட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கு முழுமையாக பொறுப்பு கூறவேண்டிய ஒரு குழுவினருக்கு தண்டனை இல்லை. அவர்கள் தான் இந்த சோக நிகழ்வு ஏற்படப்போகிறது என்பதை தெரிந்துக்கொண்டும் அதற்கு இடமளித்து பார்த்துக்கொண்டிருந்த அரசாங்கமாகும். என அனுர குமார தெரிவித்தார்.