மண்புழு உரமும் அதன் முக்கியத்துவம்

மண்புழு உரமும் அதன் முக்கியத்துவம்

தற்போதுள்ள சூழ்நிலையில் விவசாயம் செய்வதே பெரும் சவாலாக உள்ளது. விதை விலை, உர விலை, வேலையாள் கூலி, பூச்சி கொல்லி மருந்துகளின் விலை என விவசாயம் செய்வதற்கு தேவைப்படும் அனைத்து உள்ளீட்டு பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே இருக்கின்றது. ஆகவே இவற்றை சமாளிக்க விவசாயிகள் மாற்று வழிகளை கையாள வேண்டும். அதாவது மாற்று முறைகள் என்பதை விட இயற்கை முறை அல்லது நமது முன்னோர்களின் பாரம்பரிய முறைகளை கையாள வேண்டும். உதாரணமாக உக்கிய தொழு உரங்களை உற்பத்தி செய்வது, இயற்கை பூச்சி விரட்டிகள், மூலிகை பூச்சி கொல்லி மருந்துகளை நாமே தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் விவசாய செலவுகளை குறைக்க முடியும். மேற் குறித்த வழியில், கால்நடை கழிவுகளைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்து விவசாயத்திற்கு பயன்படுத்துவதன் மூலமும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க முடியும்.

மண்புழு உரம் தயாரிப்பதற்கு மண்புழுக்கள், மாட்டின் சாணம், தீவனக்கழிவுகள், சிறிதளவு சர்க்கரை, வீட்டுக் காய்கறி கழிவுகளைக் கொண்டு இயற்கை முறையில் போசாக்கான மண்புழு உரம் தயாரிக்கலாம்.

மாடுகளின் சாணம் 10 – 20 நாட்கள் பழமையானதாக இருக்க வேண்டும்.

(உரம் தயாரிக்க பயன்படும் பொருட்களில் தாதுக்கள், பிளாஸ்டிக் பொருட்கள், இரசாயன உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகள் ஆகியன இருக்க கூடாது)

மண்புழுக்களில் நிறைய வகை இருந்தாலும் சிவப்பு நிற மண்புழுக்கள் தான் உரம் தயாரிக்க உகந்தவை. நமக்கு தேவையான மண்புழுக்களை நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியும். 

மண்புழுக்களை உற்பத்தி செய்யும் முறை :-

மண்புழுக்களை உற்பத்தி செய்யும் முறை மிக இலகுவானது. 10கிலோ சாணத்தை எடுத்துக்கொண்டு 2கிலோ சர்க்கரையுடன் கலக்கி, நல்ல ஈரலிப்பான இடத்தில் இந்த கலவையை மண்தரையில் கொட்டி வைத்து, பத்து நாட்களுக்கு தண்ணீர் தெளித்து கொண்டு வந்தால் மண்புழுக்கள் தானே உருவாகும். மண்புழுக்களை சேகரித்தும் உருவாக்கலாம்.

மண்புழு உரம் தயாரிக்கும் முறை :-
மண்புழு உரம் தயாரிக்க படுக்கை முறை, குழி முறை, தொட்டி முறை என 03 வகை உள்ளன.

படுக்கை முறையில் தரையில் இயற்கை சாணத்தையும் மற்ற கழிவுகளையும் போட வேண்டும். இதில் அதிக அளவு மண்புழு உரம் தயாரிக்கலாம்.

குழி முறையில், குழிவெட்டி அடியில் சாணம் மற்றும் இதர தீவனக்கழிவுகளை போடலாம். ஆனால் குழி முறையில் போதுமான காற்றோட்டம் இருக்காது. செலவும் அதிகம். தொட்டி முறையே நடுத்தர விவசாயிகளுக்கு சிறந்த முறையாகும்.

தொட்டி முறையில் மண்புழு உரம் தயாரிக்கும் முறை :-

மண்புழு உரம் தயாரிக்க எப்பொழுதும் நிழல், ஈரப்பதன், குளிர்ச்சியான பகுதியை தேர்வு செய்ய வேண்டும். 500-600 லீற்றர் கொள்ளளவு உள்ள சீமென்ட் அல்லது பிளாஸ்டிக் தொட்டியை பயன்படுத்தலாம். அல்லது வீட்டில் தொட்டி இருந்தால் அதையே பயன்படுத்திக் கொள்ளலாம்.

 மாடுகளின் சாணம் மற்றும் சிறு துண்டுகளாக வெட்டிய பசுந்தீவனக் கழிவுகள், உலர்ந்த இலைகள் 3:1 என்ற அளவில் கலந்து தொட்டிக்குள் போட வேண்டும். 15-20 நாட்களுக்கு இந்த கலவையை அப்படியே விட்டுவிட வேண்டும். சிறிதாக வெட்டிய இலைகள் மற்றும் பசுந்தீவனத்தை 15-20 செ.மீ அளவுக்கு போட வேண்டும். அதற்கு மேல் மாட்டுச்சாணம், ஏனைய கழிவுகளை அதே அளவு போட வேண்டும். மண்புழுக்களை 500-1000 எண்ணிக்கைக்கு மேல் அடுக்கில் விடவேண்டும். மண்புழுக்களை விட்டவுடன் குளிர்ந் நீரை தெளிக்க வேண்டும்.; உள் அடுக்குகள் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க தொடர்ந்து குளிர் நீரை தெளிக்க வேண்டும். 30 நாட்களுக்கு ஒரு முறை கிளறி விட வேண்டும். 45-50 நாட்கள் ஆனவுடன் மண்புழு உரம் தயாராகும். தொட்டியின் அடியில் 30 நாட்களின் பின் மண்புழுக்களால் சுரக்கப்படும் மண்புழுத்திரவம் சேகரிக்கப்படும்.


மண்புழு உரம் அறுவடை செய்யும் முறை :-

மண்புழு உரம் தயாரானவுடன் அது கறுப்பு நிற தூள்களாக மாறும். அதன் பின்னர் தண்ணீர் தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும். மேலும் உரம் தயாரிக்கும் இடத்திற்கு அருகில் புதிய சாணத்தை சர்க்கரையுடன் கலந்து (10கிலோ சாணம் : 1கிலோ சர்க்கரை) நீர் தெளித்து வைத்தால் இந்த மண்புழு உரத்தில் உள்ள மண்புழுக்கள் அருகில் உள்ள புதிய சாணம் மற்றும் வெல்லக் கலவைக்கு சென்றுவிடும். இரண்டு நாட்கள் சென்ற பின் மண்புழு உரத்தை பயன்படுத்தலாம்.


மண்புழு உரம் இடும் முறை :-

மண்புழு உரத்தின் அளவு பயிர்களின் தன்மையை பொறுத்து வேறுபடும். விவசாயப் பயிர்களுக்கு, ஒரு ஏக்கருக்கு 1-2 தொன் அளவும், பழ மரங்களுக்கு, மரத்தின் வயதைப்பொறுத்து 2முதல் 5கிலோகிராம் வரை ஒரு மரத்திற்கு இட வேண்டும். காய்கறிச் செடிகளுக்கு, நாற்றுக்கள் வளர்ப்பதற்கு ஒரு ஏக்கருக்கு 500கிலோகிராம் அளவும், வளரும் செடிகளுக்கு 400-500கிராம் பயன்படுத்தலாம்.

சேகரித்த 1லிற்றர் மண்புழு திரவத்திற்கு 5லிற்றர் நீர் கலந்து ஐதாக்கி தாவர இலைகளுக்கு விசிறுவதன் மூலம் தாவரங்களுக்கு தேவையான நுண் மூலகங்களை வழங்கலாம்.

மண்புழு திரவமானது (worm casting) தாவர வளர்ச்சிக்கு தேவையான நைதரசன் (N), பொட்டாசியம் (K), பொஸ்பரஸ்(P), கல்சியம்(CA),மக்னீசியத்தையும்(MG) கொண்டுள்ளது. இவ்உரமானது வழமான மேல்மண்ணிலும் பார்க்க 5மடங்கு அதிகமான நைதரசனையும் 7மங்கு அதிகமான பொட்டாசியத்தையும் 1.5மடங்கு அதிகமான கல்சியத்தையும் கொண்டுள்ளது. 



இம் மண்புழுஉரப்பாவனை மூலம் மண்ணில் நீர்ப்பிடிப்புத்தன்மையும் அதன் கட்டமைப்பும் மேம்படுத்தப்படுவதோடு மண்ணின் காற்றோட்டமும் அதிகரிக்கப்படும். இவ்வாறான இயற்கை சேதன முறைப்பயன்பாட்டால் இரசாயனப்பசளைகளின் பாவனைகளைக்குறைத்து சூழல் மாசுபடுவதிலும் இருந்து பாதுகாப்பதோடு எமது எதிர்கால சந்ததியினருக்கு நச்சுத்தன்மையற்ற சுகாதாரமான உணவு உற்பத்திகளை பெற்றுக்கொள்ள நாம் ஒவ்வொருவரும் ஒரு சமுதாய அக்கறையுள்ள பிரஜைகளாக இயன்றவரை பங்களிப்பு செய்வோம்.

செல்வி.கே. கிரிஷாந்தினி B.Sc (Hons)