தெற்காசியவின் மிக உயரமான தாமரைக்கோபுரம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.


தெற்காசியவின் மிக உயரமான கொழும்பு நெலும் பொக்குண என்ற தாமரைக்கோபுரம் இன்று மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
கொழும்பு டி.ஆர்.விஜயவர்த்தன மாவத்தையில் இந்த கோபுரம் அமைந்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த தாமரைக் கோபுரம் நாட்டின் தொலைத்தொடர்பு துறையில் புதிய பரிணாமமாக அமையுமென இலங்கை டெலிகொம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோபுரத்தில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வானொலி சேவையை முன்னெடுத்துள்ள 50 நிறுவனங்களுக்கும், தொலைக்காட்சி சேவைகளை முன்னெடுத்துள்ள 50 நிறுவனங்களுக்கும் இதன் மூலம் நன்மைகள் கிடைக்கவுள்ளன. 350 மீற்றர் உயரம் கொண்ட இக்கட்டிடம் உலகில் உள்ள 40 மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றாக உள்ளது. இதற்கு 104.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. இதில் 80 சதவீதமான தொகை சீனாவின் எக்சிம் வங்கியிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது.
Telecommunication Regulatory Commission of Sri Lanka (TRC), China National Electronics Import and Export Corporation (CEIEC) and Aerospace Long – March International Trade Company Limited (ALIT) ஆகிய நிறுவனங்களுடன் இக் கட்டிட நிர்மாணத்திற்கான திட்டம் 2012 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது. இந்த கோபுரத்தில் இருந்து பொது மக்களால் இதனை சூழவுள்ள 245 மீற்றர் உயரத்தை கொண்ட காட்சிகளை பார்வையிடுவதறகான வசதிகளும் உண்டு. 2012 ஆம் அண்டில் இக் கட்டிடம் வடிவமைக்கப்பட்டு நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
மொறட்டுவ பல்கலைக்கழக கட்டிட பீடத்தின் ஆலோசனையுடன் இந்த கட்டடம் வடிவமைக்கப்பட்டது. தொலைத் தொடர்பு தொழில்நுட்பங்களுக்கு மேலதிகமாக இதில் வர்த்தக நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. உணவகங்கள், சுப்பர்மார்க்கட், 5 நட்சத்திர ஹோட்டல்கள், திரையரங்கு, தொலைத்தொடர்பு அருங்காட்சியகம் மற்றும் ஒரே தடவையில் சுமார் ஆயிரம் பேர் அமரக் கூடிய மாநாட்டு மண்டபம் ஆகியன இந்தக் கோபுரத்தில் உள்ளன.

தாமரைக் கோபுரத்தின் உத்தியோக பூர்வ அங்குரார்ப்பணத்தை முன்னிட்டு தபால் திணைக்களம் 45 ரூபா பெறுமதியான நினைவு முத்திரை ஒன்றை வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.