சஜித்தே வேட்பாளராக வேண்டும்; அதிகாரம் ஒழிக்க கூடாது : ஐ.தே.மு பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் முடிவு

ஐ.தே.மு பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் முடிவு

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கக் கூடாதெனவும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டுமெனவும் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற வளாகத்தில் நேற்றுக் கூடிய ஐ.தே.முவின் பாராளுமன்றக் குழு இம் முடிவை எடுத்துள்ளது. இக் கூட்டத்தில் 50ற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அமைச்சர்களான மங்கள சமரவீர, சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டனர். அதே நேரம் அமைச்சர்களான மனோ கணேசன், ரிசாட் பதியுதீன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

இதன்போது அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஐ.தே.முவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டுமென ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்கள் யோசனையை முன்வைத்தனர். இந்த யோசனைக்கு கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து ஐ.தே.க உறுப்பினர்களும் ஆதரவளித்தனர். அத்துடன், சஜித் பிரேமதாசவை ஜனாதிபதித் வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி 50இற்கும் அதிகமான ஐ.தே.க உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதமொன்றையும் பிரதமரிடம் கையளிக்க கையொப்பம் பெறப்பட்டது.

கடிதத்தில் கூட்டத்தில் கலந்துகொண்ட ஐ.தே.க. உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்ட போதிலும், அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவும் பங்காளிக் கட்சி உறுப்பினர்களும் கையெழுத்திடவில்லை.

இன்று வெள்ளிக்கிழமை பிரதமரும் ஐ.தே.கவின் தலைவருமான ரணில் விக்கிரமங்கவிடம் மேற்படி கடிதத்தை கையளித்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தவுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க கூடாதெனவும் கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டனர்.