அக்கரைப்பற்று அரச போக்குவரத்து சாலை ஊழியர்களும் இன்று பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்

வி.சுகிர்தகுமார்
இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கமைவாக அக்கரைப்பற்று அரச போக்குவரத்து சாலை ஊழியர்களும் இன்று(16) பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பொதுமக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டதுடன் மாணவர்களும் அரச உத்தியோகத்தர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

அரச உத்தியோகத்தர்கள் தங்களது பணிக்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டதுடன் மாணவர்களும் பாடசாலை மற்றும் தனியார் வகுப்புக்களுக்கு செல்ல முடியாமல் பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்ததை காண முடிந்தது.

ஒரு சில தனியார் வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பஸ் தரிப்பிடத்தில் பயணிகள் தங்களது அதிருப்தியை வெளியிட்டதையும் அவதானிக்க முடிந்தது.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் நான்கு சங்கங்கள் ஒன்றாக இணைந்து ஆறு அம்ச கோரிக்கையினை முன்வைத்து முன்னெடுத்துள்ள இப்போராட்டமானது தீர்வு கிடைக்காத நிலையில் தொடரும் எனவும் ஊழியர்களால் இங்கு கருத்து முன்வைக்கப்பட்டது.

தமது அடிப்படை சம்பளத்தில் இதுவரையில் 2500 ரூபா சேர்க்கப்படாமை உள்ளிட்ட முக்கிய ஆறு கோரிக்கைகளின் முன்வைத்தே இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து பஸ் தரிப்பிட்ட சாலையின் முன்கதவுகளும் பூட்டி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.