ஆணைகட்டியவெளி நாமகள் வித்தியாலயம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை

(சித்தா)
பட்டிருப்பு கல்வி வலயமானது மட்டக்களப்பின் தெற்கே அமைந்துள்ள கல்வி வலயமாகும்.
இவ் வலயம் மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப் பற்று என இரு கோட்டங்களை உள்ளடக்கியது. இதில் போரதீவுப்பற்றுப் பிரதேசம் சகல வழிகளிலும் பின்தங்கிய பிரதேசமாகும். இப் பிரதேசத்தில் அமைந்துள்ள கிராமமே ஆணைகட்டியவெளிக் கிராமமாகும். இங்குள்ள பாடசாலையே மட்/பட்/ஆணைகட்டியவெளி நாமகள் வித்தியாலயமாகும். இப்பாடசாலையின் அதிபர் பதவியுயர்வு பெற்றுச் சென்ற நிலையில் சிரேஸ்ட ஆசிரியர் ஒருவரே இப் பாடசாலையின் நிருவாகக் கடமைகளை ஆற்றி வருகின்றார். இப் பாடசாலைக்கு கடமைக்காக வரும் ஆசிரியர்கள் போதுமான பொதுப் போக்குவரத்தின்றி சிரமப்படுகின்றனர். மழைகாலம் வந்தால் இவ்வாசிரியர்களுக்கு பயம் பிடித்து விடும். ஏனெனில் வெள்ளம் பாய்ந்துதான் பாடசாலைக்குச் செல்ல வேண்டும். இவ்வாறானதொரு கஷ்டமான நிலையிலும் கூட இவ் வருடம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய அனைவரும் 70 புள்ளிக்கு மேல் பெற்று 100 வீதச் சித்தியினை அடைந்துள்ளனர்.
இப் பாடசாலையில் இருந்து 15 மாணவர்கள் விண்ணப்பித்து அனைத்து மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இதில் 8 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளதுடன் 5 மாணவர்கள் 100 புள்ளிக்கு மேலும், 2 மாணவர்கள் 70 புள்ளிக்கு மேலும் பெற்று 100 வீதச் சித்தியினைப் பெற்றமை சாதனையாகும்.
இப் பாடசாலைக்கு விஜயம் செய்த ஆரம்ப பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன், ஆரம்பப் பிரிவு சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திருமதி.ச.தில்லைநாதன் அவர்களும் சாதனை புரிந்த தற்காலிக அதிபர் திரு.க.ஜெயகரன் அவர்களையும், மாணவர்களை பரீட்சைக்கு வழிகாட்டி ஊக்குவித்த ஆசிரியர் செல்வி வை.கங்காதேவி அவர்களையும் மாணவர்களையும், பெற்றோர்களையும் பாராட்டியுள்ளனர்.