சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த பெண்னொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இருவருக்கு பத்துவருடங்கள் சிறைத் தண்டனை

சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த மனநலம் பாதித்த பெண்னொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இருவருக்கு பத்துவருடங்கள் சிறைத் தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். 

கடந்த 2010ம் ஆண்டு காலப் பகுதியில் திருகோணமலை நிலாவெளி பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த மனநலம் பாதித்த பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக 58வயதான கனகரட்னம் மரியதாஸ் மற்றும் அங்கு பணியாற்றிய 61வயதான சிவலிங்கம் ஜோஜ் ஆகிய இருவருக்கு எதிராக சட்ட மாஅதிபர் திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

இவ் வழக்கு தொடர்பாக விசாரணைகள் முடிவுறுத்தப்பட்டு அவ் வழக்கின் தீர்ப்புக்காக நேற்றைய தினம் திகதியிடப்பட்டிருந்த நிலையில் திறந்த மன்றில் இவர்கள் இருவருக்குமான தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. 

இதன்படி இவர்கள் இருவருக்கும் 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனையும் 5000 ரூபா தண்டப் பணமும், தண்டப்பணத்தை செலுத்த தவறின் 1 மாத கால கடூழிய சிறைத் தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 இலட்சம் ரூபா நஸ்டஈடும் அதனை வழங்க தவறின் மேலும் 2 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.