வெடிகுண்டு கலாசாரத்துக்கா? சுதந்திரமான சூழ்நிலைக்கா?



எதற்கு வாக்களிக்கப் போகிறீகள்?

நிவாரணம் கேட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது அதற்கு ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் வெடிகுண்டுகள் மூலமே பதிலளித்தனர்.எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நாட்டு மக்கள் அத்தகையதொரு வெடிகுண்டு கலாசாரத்துக்கா அல்லது தற்போது அனுபவிக்கும் சுதந்திரமான சூழ்நிலைக்கா வாக்களிப்பது என்பதை தீர்மானிக்க வேண்டுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

லக்கலை புதிய நகரில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அரசாங்கம் கம்பெரலிய செயற்திட்டத்தின் மூலம் கிராமிய வீதிகள் அனைத்தையும் அபிவிருத்தி செய்துள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபை மாகாண ரீதியிலானா சகல பாதைகளையும் அபிவிருத்தி செய்து அவற்றை 'காபட்' பாதையாக மாற்றியுள்ளது. அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் கருத்திட்டத்தின் கீழ் பெருமளவிலான பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையைப் பெற்றுக்கொண்டு தொழிற்சாலைகளில் ஏற்றுமதி வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களுக்காக சிறந்த சந்தை விலையை பெற்றுக்கொடுப்பதற்கு எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சமுர்த்தி உதவிபெறுவோருக்கான கொடுப்பனவை அதிகரிப்பதற்கும் சமுர்த்தி பெறுவோரின் குடும்ப எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது.

மஹாபொல புலமைப் பரிசில் நிதியை 5000 ஆக அதிகரிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். அதேபோன்று கர்ப்பிணித் தாய்மாருக்கு 20,000 ரூபா பெறுமதியான போஷணை உணவுப் பொதி பெற்றுக்கொடுப்பதற்கும், பாடசாலை மாணவர்களுக்கு சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தின் மூலம் காப்புறுதியைப் பெற்றுக்கொடுக்கவும் எமது அரசாங்கமே நடவடிக்கை எடுத்தது.

விவசாயத் துறைக்கு தேவையான நீரைப் பெற்றுக்கொடுப்பதற்கும், புதிதாக 5000 ஏக்கரில் இறப்பர் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கும் நாம் எதிர்பார்த்துள்ளோம். அதற்கிணங்க மேல் மாகாணத்தில் இறப்பர் பயிர்ச்செய்கையை அகற்றி புதிதாக லக்கல பிரதேசத்தில் 5000 ஏக்கரில் இறப்பர் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம். தற்போது நாட்டின் பொருளாதாரம் ஏற்றுமதிப் பொருளாதாரமாக முன்னேற்றம் பெற்றுள்ளது.