கட்டணம் அறவிடும் முன்பள்ளிகள் இனி தனித்து இயங்க முடியாது


நாட்டில் இயங்கும் சகல முன்பள்ளிகளும் அரச பாடங்களுடன் இணைத்து இலவசக் கல்வித் திட்டத்துக்குள் கொண்டு வரப்படுமெனத் தெரிவித்த புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, அவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களும் அரச பாடசாலைக்கு இணைத்துக் கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார். 


மாத்தளை மாவட்டம் ரத்தொட்ட நகரில் நேற்று (19) நடைபெற்ற  கூட்டத்தில்  தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய சஜித் பிரேமதாச, இலவசக்கல்வியை மேலும் வலுவடையச் செய்யும் வகையில், புதிய திட்டத்தை அமுல்படுத்தவுள்ளேன்.அதனடிப்படையில் நாட்டில் இயங்கும் சகல முன் பள்ளிகளையும் இணைக்கவுள்ளேன். கட்டணம் அறவிடும் வகுப்புகள், முன்பள்ளிகள் இனிமேல் தனித்து இயங்க இடமளிக்கப்படமாட்டாது. முன்பள்ளிச் சிறார்களுக்கும் இலவசக் கல்வி என்ற திட்டத்தை அமுல்படுத்தவுள்ளோம்.

சீருடை, கற்றல் உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும். அங்கு கற்பித்த ஆசிரியர்கள் அரச பாடசாலைகளுடன் இணைக்கப்பட்டு உரிய சம்பளம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் ஒவ்வொரு பிரதேச சபை எல்லைகளிலும் குறைந்தது ஒரு தொழிற் பேட்டையையாவது நிறுவி தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதோடு உற்பத்திகளை ஊக்குவித்து உள்ளூர் உற்பத்திகளை சர்வதேச சந்தைக்குக் கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும். எனது தந்தை ஆரம்பித்த ஆடை உற்பத்தித்துறையை மீண்டும் ஆரம்பித்து சர்வதேச சந்தைக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தொழில் வாய்ப்புகளுக்கு அரசாங்கத்தை நம்பிக்கை கொண்டிராமல் சுயதொழில் வாய்ப்புகளுக்கும் கைகொடுக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் காணப்படும் வளங்களை இதற்குப் பயன்படுத்த எண்ணியுள்ளோம். இது தேர்தல் வாக்குறுதியல்ல யதார்த்த பூர்வமானது எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.