3ஆம் தவணை பரீட்சை பாடசாலைகளுக்கேற்ற நேர அட்டவணைகளில்வரலாற்றில் முதற் தடவையாக கிழக்கு மாகாணத்தில் மூன்றாந் தவணைப்பரீட்சை வழமைக்கு மாறாக பாடசாலை மட்டத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலையொட்டி இப்பரீட்சைகள் முன்கூட்டியே நடைபெறவிருப்பது குறித்து அவரிடம் கேட்ட போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்:

இம்முறை பொதுவானதொரு காலஅட்டவணை மாகாணத்திற்கோ வலயத்திற்கோ இருக்கப்போவதில்லை. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அந்தந்தந்த பாடசாலை தமக்கேற்றால் போல் கால அட்டவணையைத் தயாரித்து பரீட்சையை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான அறிவுறுத்தல்களை 17கல்வி வலயங்களின் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அவர்களுடாக சகல அதிபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி இவ் வாரமிருந்து வேறுபட்ட நேர அட்டவணையின்படி 3ஆம் தவணைப்பரீட்சைகள் நடைபெறும்.

வினாத்தாள்களை அந்தந்த பாட ஆசிரியர்களே தயாரித்து பரீட்சையை நடாத்துவார். அந்த வினாத்தாளின் மாதிரி அதற்கான விடைகள் அடங்கிய கோவையை ஒவ்வொரு பாடசாலையும் வலயக் கல்விப் பணிமனையில் ஒப்படைக்கவேண்டும். வலயத்திலுள்ள பாட உதவி கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் போன்றோர் வினாத்தாளின் தரம் பொருத்தப்பாடு போன்றவற்றை மதிப்பீடு செய்வார்கள்.

மேலும் பரீட்சைகளை நேரகாலத்துடன் பூர்த்திசெய்து 3ஆம் தவணை விடுமுறைக்கு முன்பாக விடைத்தாள்களை மாணவர்களிடம் ஒப்படைக்கவேண்டும். அத்துடன் மாணவர் அடைவு முன்னேற்ற அறிக்கையையும் ஒப்படைக்கவேண்டும்.

அதாவது விடுமுறைக்காக மாணவர்கள் வீடுசெல்லும் போது விடைத்தாள்கள் மற்றும் மாணவர் முன்னேற்ற அறிக்கை அவர்கள் கையிலிருக்கவேண்டும்.

எனவேதான் கற்பித்த ஆசிரியர்கள் மேலும் தமது வாண்மை விருத்தியை மேம்படுத்தவேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு ஆசிரியரும் தாம் முடித்த அலகிற்கேற்ப அந்தப்பரப்பிற்குள் வினாப்பத்திரத்தை தயாரிக்கவேண்டும். அந்தப்பாடசாலை விரும்பிய கால அட்டவணைக்கேற்ப பரீட்சையை நடாத்தவேண்டும்.

மறுபக்கம் ஆசிரியர்கள் தமது பாடப்பரப்பில் கூடுதல் பாண்டியத்தியம் உள்ளவராக மேம்படவைத்தலும் நோக்கமாகவுள்ளது. கிழக்கின் கல்வித்தரத்தை உயர்த்தும் உபாயத்தில் இதுவொரு மூலோபாயமாகும் என்றார்.