கின்னஸ் சாதனை படைக்க இலங்கை இரட்டையர்கள் முயற்சி



உலகில் அதிக அளவிலான இரட்டையர்கள் பங்குபெறும் மாநாடு ஒன்றை நடத்தி, கின்னஸ் உலக சாதனை படைக்க இலங்கை வாழ் இரட்டையர்கள் தயாராகி வருகின்றனர்.


இலங்கையில் 1993ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 23ஆம் திகதி, 'இலங்கை இரட்டையர்கள்' அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைவர்களாக, உபுலி கமகே மற்றும் ஷமலி கமகே ஆகியோர் உள்ளனர்.

தற்போது இந்த அமைப்பில், 28,000 பேர் உறுப்பினர்களாக இருப்பதாக அமைப்பின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கொழும்பில் இரட்டையர்கள் அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைப்பின் தலைவர்கள் தெரிவித்ததாவது,"அனைத்து இனங்களையும் சேர்ந்த உறுப்பினர்கள் இருக்கும் இந்த அமைப்பின் செயற்பாடுகளை, சர்வதேச அளவில் கொண்டு செல்லும் முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி, எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திததி, எங்களின் 28,000 உறுப்பினர்களோடு உலக நாடுகளில் உள்ள இரட்டையர்களையும் இலங்கைக்கு அழைத்து பிரமாண்ட மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்த மாநாட்டின் மூலம், அதிக அளவில் இரட்டையர்களை ஒன்றுகூடச் செய்து, கின்னஸ் உலக சாதனை படைக்க எண்ணியிருக்கிறோம்" என்றனர்.