கண்டலடியில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து அலுவலகம் திறப்பு

 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கண்டலடி பிரதேச அமைப்பாளர் தலைமையில் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களை ஆதரிக்கும் முகமாக தேர்தல் பிரச்சார அலுவலகம் இன்று திறந்துவைக்கப்பட்டது.

கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான நாகலிங்கம் திரவியம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இங்கு கருத்து தெரிவித்த நாகலிங்கம் திரவியம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வாகரைப் பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை செய்து உள்ளது.
 அந்த அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சி மேற்கொண்ட காலத்தில் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது பல்வேறு வீதிகளையும் பாடசாலைகளையும் கட்டுமான பணிகளையும் குறிப்பாக வாழ்வாதாரத்தையும் செய்து காட்டினோம். ஆனால் கடந்த நான்கு வருடங்களாக நல்லாட்சி என்று கூறிக் கொண்டு இருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் ஐக்கிய தேசிய கட்சி அரசு தமிழ் மக்களுக்கும் பிரதேசத்திற்கும் எதையும் செய்து வைக்கவில்லை.

  மாறாக வாகரைப் பிரதேசத்தில் இருக்கின்ற மண் வளத்தையும் கனிய வளங்களை எவ்வாறு ஏனைய சமூகங்களுக்கு அரைத்து கொடுக்கலாம் என்பது தொடர்பாகவே சிந்தித்துக் கொண்டிருக்கும்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களினை ஆதரிப்பதன் மூலம் பிரதேசத்திற்கான அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டு தொடர்ந்தும் வாகரைப் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினை வளர்த்துக்கொண்டு கல்வி கலை கலாச்சாரம் பண்பாட்டு ரீதியாக பிரதேசம் முழுவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கு  தமிழ் மக்கள் விடுதலைப் படை கட்சி உத்தரவாதம் வழங்குகின்றது.

 அனைவரும் கோட்டபாய ராஜபக்ஷவை ஆதரிக்க ஒன்றிணைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்