அம்பாரை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகளை வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்லும் பணிகள்


(வி.சுகிர்தகுமார்)
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 8ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இன்றையதினம் வாக்குப்பெட்டிகளை வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்தின் தேர்தல் தலைமை காரியாலயமான அம்பாரை ஹாடி தொழிநுட்ப கல்லூரியில் இருந்து வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

அம்பாரை மாவட்டத்தில் மொத்தமாக 503790 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 523 வாக்களிப்பு நிலையங்களும் 53 வாக்கெண்ணும் நிலையங்களும் ஏற்படுத்தபட்டுள்ளதாக அம்பாரை மாவட்டத்தின் உதவி தேர்தல் ஆணையாளர் திலின விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.

அம்பாரை மாவட்டத்தில் கல்முனை பொத்துவில் சம்மாந்துறை அம்பாரை ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகள் உள்ளன.

கல்முனை தொகுதியில் 74 வாக்களிப்பு நிலையங்களும் பொத்துவில் தொகுதியில் 177 வாக்களிப்பு நிலையங்களும் சம்மாந்துறை தொகுதியில் 93 வாக்களிப்பு நிலையங்களும் அம்பாரை தொகுதியில் 179 வாக்களிப்பு நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் அளிக்கப்படும் வாக்குகளை எண்ண 38 நிலையங்களும் தபால் மூல வாக்குகளை எண்ண 15 நிலையங்களும் அம்பாரை ஹாடி தொழிநுட்ப கல்லூரியில் அமைக்கப்படவுள்ளதாகவும் வாக்குப்பெட்டிகளை கையளித்தல் கையேற்றல் மற்றும் எண்ணும் பணிகள் யாவும் இக்கல்லூரியிலேயே இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.