திருகோணமலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன



இலங்கையில் நடைபெறவிருக்கின்ற 8ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்காக, இம்முறை திருகோணமலை தேர்தல் மாவட்டத்தினுடைய தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

அதனடிப்படையில் வாக்குச்சாவடிகளுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் திருகோணமலை தொழிநுட்பக் கல்லூரியில் இருந்து அனுப்பி வைக்கப்படும் செயற்பாடானது திருகோணமலை பொலிஸாரின் பாதுகாப்புடன் இடம்பெறுகின்றது.

இம்முறை திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 281,114 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள். அவர்களது வாக்குப்பதிவிற்காக 307 வாக்களிப்பு நிலையங்கள் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திருகோணமலை  மாவட்டத்தில் இதுவரை காலமும் சிறு சிறு தேர்தல் வன்முறைச்சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் மாத்திரமே பதியப்பட்டிருக்கின்ற அதேவேளை பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸாரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் வன்முறைச்சம்பவங்கள் இடம்பெறக்கூடும் என எதிர்வுகூரப்படும் இடங்களில் விசேட அதிரடிப்படையினரது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாக்குகளை எண்ணும் நிலையமான திருகோணமலை தொழிநுட்பவியல் கல்லூரியில், 21 சாதாரண வாக்கெண்னும் நிலையங்களும் 9 தபால்மூல வாக்கெண்ணும் நிலையங்களும் வாக்கெண்ணும் நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது

அத்துடன் இம்முறை தேர்தலுக்காக திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 4000 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.