கல்முனை உப-பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நடவடிக்கை வேண்டும்-கருணா அம்மான்


(பாறுக் ஷிஹான்)
கல்முனை உப-பிரதேச செயலகத்தை தரமுயர்த்த விரைவாக நடவடிக்கை வேண்டும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் திங்கட்கிழமை(23) பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் வைத்து குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதன் போது கல்முனை உப பிரதேச செயலகத்தினை முழுமையான அதிகாரத்துடன் தரமுயர்த்த வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்திய கருணா அம்மான் அம்பாறை மாவட்டத்தின் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளில் கல்முனை உப பிரதேச செயலகம் மாத்திரம் தரமுயர்த்தப்படாத நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டினார்.

இதனை அடுத்து பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கடந்த யுத்தக்காலங்களில் இப்பிரதேச செயலகம் தரமுயர்த்தபடாமைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட போதிலும் அதை இன்று ஏற்றுக்கொள்ள முடியாது. யுத்தம் முடிந்து பத்து வருடகாலமாகியும் கூட கல்முனை உப பிரதேச செயலகம் முழுமையான அதிகாரத்துடன் தரமுயர்த்தப்படாமைக்கான ஆக்கப்பூர்வமான காரணங்கள் எதுவும் இல்லாமை கவலையளிப்பதாக தன்னிடம் குறிப்பிட்டதாக கருணா அம்மான் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சரிடம் கடந்த அரசின் பாரபட்ச செயற்பாடாகவே இதனை பார்ப்பதாகவும் தற்போதைய நாட்டின் நிலைமைகளை கருத்திற்கொண்டு கல்முனை உப பிரதேச செயலகம் விரைவாக தரமுயர்த்தப்பட வேண்டும் எனவும் கல்முனை நகரைச் சுற்றியுள்ள ஏனைய பிரதேச செயலகங்கள் தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில் கல்முனை உப பிரதேச செயலகம் மாத்திரம் தரமுயர்த்தப்படவில்லை. 

இதற்காக பல போரட்டங்கள் மேற்கொண்ட போதும் அரசு அதை செவிசாய்க்கவில்லையென்றும் கூறினார்.

இறுதியாக குறித்த சந்திப்பில் கருத்து கூறிய அமைச்சர் அரசாங்கம் என்பது மக்களின் குறைகளைத் தீர்த்து மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவது ஆகும்.தொடர்ச்சியாக மக்களை இவ்விடயத்தில் ஏமாற்றுவது ஏற்றுக்கொள்ளக் கூடியவிடயம் அல்ல. எனவே உடனடியாக எமது அரசு தலையிட்டு தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என குறிப்பிட்டார்.