வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்



(வி.சுகிர்தகுமார்)
வெள்ள அனர்த்தத்தின் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நேற்று (13)ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் எம்.ஏ.எம்.றியாஸ் கலந்து கொண்டதுடன் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

வெள்ள அனர்த்த பாதிப்பு, அதற்கான நிவாரணத்தை பெற்றுக்கொடுத்தல், அனர்த்தம் ஏற்பட்டமைக்கான காரணம், அதில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கான வழிமுறைகள், மீளவும் மக்களை இயல்பு வாழ்க்கை முறைக்கு கொண்டு செல்லல், எதிர்காலத்தில் வெள்ளம் அனர்த்தம் ஏற்படாமல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, ஒவ்வொரு பிரதேசத்திற்கான வெள்ள அனர்த்த குழுவை அமைத்தல் போன்ற விடயங்கள் இங்கு ஆராயப்பட்டன.

இக்கூட்டத்தின் போது உரையாற்றிய பிரதேச செயலாளர் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாகவும் இதன்போது அரச உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பில் விளக்கியதுடன் எதிர்காலத்தில் இதுபோன்ற அனர்த்தங்கள் நிகழுகையில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் தொடர்பிலும் விளக்கினார். அத்தோடு வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மீனவர்கள் தொழிலாளிகள் என பல்வேறு தரப்பினரின் தகவல்களையும் சேகரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இங்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் எம்.ஏ.எம்.றியாஸ் உரையாற்றுகையில் வெள்ள அனர்த்தம் ஏற்படுகின்ற போது அதன் உண்மைத்தன்மையான தகவல்கள் விரைவாக சேகரிக்க வேண்டியது உத்தியாகத்தர்களின் பொறுப்பு என்றார். தகவல்கள் தாமதமாகும் சந்தர்ப்பத்தில் உரிய இழப்பீட்டை பெறுவதில் சிக்கல் நிலை தோன்றும் எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் எமது பகுதியில் வெள்ளம் ஏற்படுவதற்கான பிரதான காரணம் தொடர்பான பல்வேறு விடயங்களையும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். முறையான உட்கட்டுமானப்பணிகளின் மூலம் வெள்ள அனர்த்தத்தை குறைக்க முடியும் என்பதை மக்களுக்கு தெளிவூட்டுவதுடன் பிரதேசத்தில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கும்போது இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அனைவருக்கும் வலியறுத்த வேண்டும் எனவும் அதற்காக பிரதேசத்திற்கான வெள்ள அனர்த்த குழுவை அமைத்து அதில் இளைஞர்களையும் உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.