பதவிகளுக்காக ஒரு போதும் ஐக்கிய தேசிய கட்சி பிளவு படாது-சஜித்



ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தமையால் பொதுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.அந்த வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கு பரந்துபட்ட கூட்டணிக்கு தலைமை தாங்க தயார் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச பதவிகளுக்காக ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் பிளவடையாது என்றும் குறிப்பிட்டார்.

தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுவதற்காக ஒவ்வொரு தொகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்புக்களில் முதலாவது மக்கள் சந்திப்பு இன்று கொலன்னாவையில் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.

இதன் போது உரையாற்றுகையிலேயே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறினார்.

இதன் போது கொலன்னாவை தொகுதியில் தனக்கு வாக்களித்த 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், பொதுத் தேர்தலிலும் இந்த ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறியதாவது :

ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் பதவியிலிருந்து விலகினேன். நாம் பதவிகள் மீது மோகம் கொண்டு அரசியலில் ஈடுபடுபவர்கள் அல்ல. எனவே பதவிகளுக்காக ஒரு போதும் ஐக்கிய தேசிய கட்சி பிளவு படாது என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தமையால் பொதுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றியை நோக்கிய பயணத்திற்கு தலைமை வகிக்க நான் தயாராக இருக்கின்றேன்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் பல்வேறு அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்றுள்ளன. அவ்வாறு அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க அவர்களுடன் இணைந்து ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு தயாராக இருக்கின்றோம். இந்த போராட்டங்களுடன் புது முகங்களையும் புதுக் கொள்கைகளையும் இணைத்துக் கொள்வோம்.

எதிர்க்கட்சியாக நாட்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் பொறுப்புக்களையும் சிறப்பாக நிறை வேற்றுவோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.