30/1 பிரேரணையில் இருந்து விலக அரசாங்கம் தயார் !

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான 30/1 பிரேரணையிலிருந்து விலக அரசாங்கம் தயாராகி வருகின்றதென தெரிவிக்கும் சு.க செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி, அதற்கான ​ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார். 

கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கும் வகையில் 2015, 2016 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற குறித்த பேரவையின் அமர்வில் அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்த போதும், அதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நாட்டை காட்டிக்கொடுக்கும் யோசனைகளாலேயே நாட்டுக்கு ​நெருக்கடி தோன்றியுள்ளதெனவும், அந்த அறிக்கையின் விளைவாகவே இன்றளவில் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் விவகாரமும் பூதாகரமாகியுள்ளது என்றார்.

இந்த அறிக்கையால் அமெரிக்கா தனது தூய்மையை வெளிப்படுத்த முற்பட்டாலும், அமெரிக்காவின் செயல் இலங்கையின் மனித உரிமையை பெருமளவில் மீறுவதாகவே அமைந்துள்ளது என்றும் சாடினார்.