மட்டக்களப்பு மாவட்டத்தில் வேகமாக வளர்ச்சியடையும் நன்னீர் மீன்வளர்ப்பு துறை !


மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு கிராமத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தடாக மீன்வளர்ப்பு திட்டத்தின் 2ம் கட்ட மீன் அறுவடை நிகழ்வு 11.02.2020 இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி அலுவலகத்தின் (மாகாணம்) மாவட்ட உத்தியோகத்தர் லோ.பிரதீபன் குறித்த பகுதிக்கு பொறுப்பான நீரியல் வள அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.நேர்த்திராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண மீன்பிடி பிரிவின் மாகாணப் பணிப்பாளர் சி.சுதாகரன் அவர்களின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் மாவட்ட மீன்பிடி அலுவலகம் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் தடாக மீன் வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 2019ம் ஆண்டு முதல் புதுக்குடியிருப்பில் ¼ ஏக்கருக்கு குறைவான நிலப்பரப்பில் தடாக மீன்வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் முதல் கட்டமாக கடந்த 2019 தை மாதம் 2ம் திகதி 4000 திலாப்பியா மீன்குஞ்சுகளை கடுக்காமுனை சமுதாய அடிப்படையிலான மீன்குஞ்சு வளர்ப்பு நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி அலுவலகத்தின் PSDG நிதி ஒதுக்கீட்டின் மூலம் இலவசமாக
பெற்றுக்கொடுக்கப்பட்டது. இதிலிருந்து கடந்த 2019 வைகாசி மாதமளவில் 1840Kg மீன் அறுவடை செய்யப்பட்டு சுமார் 540000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அந்த வகையில் இரண்டாம் கட்டமாக 4000 திலாப்பியா மீன்குஞ்சுகள் இருப்பு செய்தலானது கடந்த 2019 ஆவணி மாதம் மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 506Kg  மீன் அறுவடை செய்யப்பட்டு ரூபா 350 வீதம் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் இரண்டாம் கட்ட மீன்வளர்ப்பில் 2000முப மீன் அறுவடை
செய்ய எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.