வறிய குடும்பங்களுக்கு வீடு வழங்கும் வேலைத்திட்டம் திருக்கோவிலில் முன்னெடுப்பு !


(ஏ.எஸ்.கார்த்திகேசு)
திருக்கோவில் பிரதேசத்தில் உங்களுக்கு ஒரு வீடு நாட்டுக்கு நாளை எனும் திட்டத்தில் கீழ் புதிய வீட்டுக்கான அடிக்கல் நடப்பட்டுள்ளன.
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சிந்தனைக்கு அமைவாக உங்களுக்கு ஒரு வீடு நாட்டுக்கு நாளை எனும் திட்டத்தின் ஊடாக திருக்கோவில் பிரதேசத்தில் வீடற்ற வறிய குடும்பம் ஒன்றுக்கான ஆறு இலட்சம் பெருமதியான புதிய வீட்டுக்கான அடிக்கல் நடப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு தம்பிலுவில் 01 கிழக்கு கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் திருக்கோவில் பிரதேச செயலக தொழிநுட்ப உத்தியோகத்தர் வி.திவாகரன் தலைமையில் இன்று வியாழக்கிழமை(13) இடம்பெற்று இருந்தன.

வீடற்ற குடும்பத்தினருக்கு நிரந்தர வீடு ஒன்றினை அமைத்து கொடுக்கும் அரசின் திட்டத்தின் ஊடாக தம்பிலுவில் 01 கிழக்கு வில்லியம்பிள்ளை வீதியில் வீடற்ற நிலையில் தற்காலிக கொட்டகையில் வாழ்ந்து வந்த குடும்பத்திற்கு நிரந்தர வீடு ஒன்றினை அமைத்தக் கொடுக்கும் வகையில் திருக்கோவில் பிரதேசத்தில் முதலாவது புதிய வீட்டுக்கான அடிக்கல் இன்று நடப்பட்டு வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இருந்ததுடன் திருக்கோவில் பிரதேசசபையின் உதவி தவிசாளரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதேச அமைப்பாளருமான எஸ்.விக்கினேஸ்வரன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மேலதிக முகாமையாளர் ஏ.எம்.இப்றாய்ம், திருக்கோவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் கே.சதீசேகரன், திவிநெகும உத்தியோகத்தரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியன் மாவட்ட அமைப்பாளருமான எஸ்.பி.சீலன் Battinews ஸ்தாபகர் எஸ்.சயனொளிபவன் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக கிராம நிருவாக உத்தியோகத்தர் திருமதி பரிமலவாணி சில்வெஸ்டர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொத்துவில் பிரதேச செயலக தொழிநுட்ப உத்தியோகத்தர் எம்.வி.நிலாம், கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி கீர்த்திகா மலர்ப்பிரியன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தர்சனா ரவீக்குமார், என பலரும் கலந்து கொண்டு புதிய வீட்டுக்கான அடிக்கல்லினை நட்டு வைத்தனர்.