பொத்துவில் பிரதேச செயலக கொரோனா பாதுகாப்பு செயலணி விசேட கூட்டம் !

(வி.சுகிர்தகுமார்)
பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொரோனா பாதுகாப்பு செயலணி விசேட கூட்டம் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் நேற்று(25) பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.


இக்கூட்டத்தில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், பொத்துவில் பிரதேச சபையின் உபதவிசாளர் எஸ்.பார்த்தீபன், செங்காமம் இராணுவ முகாமின் அதிகாரி லெப்டினட் கேணல் வெதகெதர, சுகாதார வைத்திய அதிகாரி ஏ.யு.அப்துல் சமட், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த, ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் ஏ.ஆதம்லெவ்பை மௌவி,மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் அப்துல் மலீக் மற்றும் வர்த்தகசங்க தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கொரோனா நோய் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாத்தல் மற்றும் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப்பொருட்களை பெற்றுக்கொடுத்தல் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயும் முகமாக இடம்பெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பொத்துவில் பிரதேசத்தில் நெருக்கடிகளை தவிர்க்கும் முகமாக மக்கள் ஒன்றுகூடும் மரக்கறி மற்றும் மீன்சந்தையினை தற்காலிகமாக பிரதேச செயலகத்தின் முன்பாக உள்ள பிரதேசத்தில் அமைத்தல். பிரதேசங்களில் வாழும் அனைத்து மக்களும் வெளியிலே செல்லும்போது முகக்கவசம் அணிதலை கட்டாயப்படுத்தல். வியாபார நிலையங்களுக்கு செல்லும் அனைவரும் முகக்கவசம் அணிவதுடன் வியாபார நிலையத்துள் உள்ளவர்களும் முகக்கவசம் மற்றும் கைக்கவர் அணிதல் வேண்டுவதுடன் ஒரு மீற்றர் இடைவெளியை இருவரும் பேணுதல், வியாபார நிலையத்துள்ளும் வெளியிலும் மக்கள் கூட்டமாக இருக்க முடியாது, தனியார் மருத்துவமனை மற்றும் சலூன்ளை பூட்டுதல் வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

மேலும் விவசாயிகள் மீனவர்கள் தங்களது தொழில் நடவடிக்கையினை மேற்கொள்ள முடியும் எனவும் அனுமதி பெற்ற வியாபாரிகள் பொருட்களை வாகன உதவியுடன் கோமாரி, பாணம, லாகுகல உள்ளிட்ட பிரதேசங்களுக்கும் வீடுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய முடியும் எனவும் மாவட்ட அரசாங்க அதிபரினால் அனுமதி வழங்கப்பட்டது.

அத்தோடு வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த உள்நாட்டு வெளிநாட்டவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவேண்டும் எனவும் ஊரடங்கு காலத்தில் வீணே வீதிகளில் செல்கின்றவர்கள் பொலிசாரால் கைது செய்யப்படுவர் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

மேலும் பிரதேசத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார வைத்திய அதிகாரி, பொலிசார் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இராணுவ உதவியுடன் கண்காணித்து செயற்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது.

ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொருட்களையோ அல்லது வேறு நிவாரணங்களையோ வழங்க விரும்புகின்றவர்கள் எக்காரணத்தை கொண்டும் பிரதேச செயலகத்தின் அனுமதியின்றி வழங்குவது தடைசெய்யப்படுவதாகவும் முடிவெடுக்கப்பட்டது.