மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளாந்தம் தொழில் செய்து வாழும் ஏழை மக்களுக்கு உலர் உணவு பொதி வழங்கி வைப்பு !


மட்டக்களப்பு மாவட்டத்தில்  இளைஞர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக சமூக சேவையாளர் ஒருவரால் 320 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் முகமாக அரசாங்கத்தால் நாடளாவிய ரீதியில் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பட்ட பிரதேசங்களிலும் அன்றாடம் தொழில் செய்து அதிலிஇருந்து ஈட்டப்படும் வருமானத்தில் வாழ்க்கை செலவினத்தை ஈடு செய்து வாழும் குடும்பங்கள் பல நாளந்த செலவினத்தை ஈடு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரோடு இணைந்த இளைஞர்கள் கேட்டுக்கொண்டதிற்கு அமைவாக மட்டு நகரின் வர்த்தகரும் சமூக சேவை ஆர்வளருமான ஹரிதரன் கிரி அவர்களின் தலைமையில் இளம் வர்த்தகர்கள் சிலரும் இணைந்து உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.

மேற்படி பணியில் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் த.கௌரி அவர்களும், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் சு.சுதர்சன் அவர்களும், மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சு.ஸஜித் உட்பட இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது நாகபுரம், தேவபுரம், முரக்கொட்டாஞ்சேனை, கழுவங்கேணி, திராய்மடு, கொக்குவில், சத்துருக்கொண்டான் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 320 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.