கிழக்கில் உலக வங்கி, ஐரோப்பிய யூனியன் நிதியிலான நவீனமயமாக்கல் விவசாயத் திட்டம் துரிதப்படுத்தப்படுகிறது !


அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் விவசாயப் பிரிவு நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய நவீனமயக்கால் திட்டங்களை மீளாய்வு செய்யும் மாகாண திட்ட வழிநடாத்தல் குழுக் கூட்டம் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பீ. வனிகசிங்க தலைமையில் மட்டக்களப்பு நீர்பாசனத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று (21) இடம் பெற்றது.

உலக வங்கி, ஐரோப்பிய யூனியன் உதவித்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற திட்டங்கள் தொடர்பான மீளாய்வுகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா மற்றும் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் பண்டாரநாயக ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

இதன்போது இவ்விரு மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் பரீட்சாத்தத் திட்டங்களினது விளைவுகள் பற்றி விரிவாக ஆரயாப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் ஆயிரத்தி 327.5 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்திட்டத்தில் 50 ஏக்கர் பச்சை மிளகாய்ச் செய்கையும், ½ ஏக்கர் பீற்றூட் செய்கையும், 100 ஏக்கர் நிலக்கடலை செய்கையும், 500 ஏக்கர் கெக்கரி செய்கையும், 528 ஏக்கர் விசேட உணவு உற்பத்திகளான நிலக்கடலை, கௌபி போன்ற தானிய வகைகளும், மாதுளை, பப்பாசி, வாழை போன்ற பழப்பயிர் செய்கைகளும்  மன்முனை தென் எருவில் பற்று கலுவாஞ்சிக்குடி, மன்முனைப்பற்று ஆரையம்பதி, கோரளைப்பற்று வடக்கு ஆகிய  பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் இப்பயிர்ச்செய்கைக்குத் தேவையான ஆலோசனைகள், வழிகாட்டல்கள், விவசாயத் தினைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவற்றுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் விவசாய உபகரண வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக விவசாயப் பிரிவு நவீன மயமாக்கல் திட்டத்தின் கிழக்கு மாகாண சிரேஸ்ட பொறியியலாளரான பொறியலாளர் கே. பாஸ்கரதாஸ் இக்கூட்டத்தில் விளக்கமளிக்கையில் தெரிவித்தார்.

இதேபோல் அம்பாரை மாவட்டத்திலும் சுமார் ஆயிரத்தி 300 மில்லியன் ரூபா செலவில் 50 ஏக்கர் மஞ்சள் செய்கை, 50 ஏக்கர் கடுகு உற்பத்தி, 80ஏக்கர் மரவள்ளிக் கிழங்குப் பயிர்ச்செய்கை பண்ணப்பட்டுள்ளதுடன் புதிய திட்டங்களான விவசாய நவீனமயமாக்கப்பட்டதும் பெறுமதி சேர்க்கப்பட்ட திட்டங்களாக தேசிக்காய் உற்பத்தி, கோழித் தீவனங்களுக்கான சோளம் உற்பத்தி, ஏற்றுமதிக்கான வழிபாட்டு மலர் உற்த்தி, சேதன மரக்கறி உற்பத்தி, மஞ்சள் மற்றும் இஞ்சி உற்பத்தி மற்றும் ஆரஞ்சு உற்பத்தி போன்றவை முன்மொழியப்பட்டுள்ளன.

விவசாய உற்பத்தி அறுவடையினை சந்தைப்படுத்தும் போது விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கருத்து முன்வைக்கயில் களுதாவளையில் மேற்கொள்ளப்படும் மிளகாய்ச் செய்கை வகையானது பெறுமதி சேர்கப்பட்டு பயன்படுத்த முடியாமலிருப்பதையும், கொரோனா தொற்று காலப்பகுதியில் அது நடைமுறையில் உணரப்பட்டதாகவும் அதற்கான மாற்று வகை மிளகாயினைப் செய்கை செய்வதற்கு ஊக்கமளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும் நெல் அறுவடை செய்யும் போதும் விவசாயிகள் காயவைத்த நெல்லினையே கூடிய விலைக்கு விற் கமுடிகின்றது. எனவே அறுவடை செய்யும் போது அவற்றைக் காயவைக்கும் நடமாடும் இயந்திரங்களை பெற்றுக் கொடுக்கவேண்டுமெனவும் இங்கு கேட்டுக்கொண்டார்.

இம்மாகாண திட்ட வழிநடாத்தல் குழுவின் 6வது கூட்டத்தில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே. சிவனாதன், விவசாயப் பிரிவு நவீனமயமாக்கல் திட்டத்தின் கிழக்கு மாகாண பிரதி திட்டப் பணிப்பாளர் பீ.எம்.என். தயாரத்ன, விவசாயத் திணைக்கள உயர் அதிகாரிகள், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பிரதேச செயலாளர்கள் உட்பட பல அதிகாரிகளும் கலந்து கொணடனர்.