மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சிங்கள சிற்றூழியர்களினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

(லியோன்)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சிங்கள  சிற்றூழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிற்றூழியர்களாக கடமையாற்றும் பொலநறுவை, கருதுருவெல ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் கடமைக்கு நேரம் தாமதமாகி வந்ததன் காரணமாக நாளாந்தம் கையெழுத்து இடும் பதிவேட்டில் கையெழுத்திட அனுமதி மறுத்ததன் காரணமாக இந்த ஆர்பாட்டத்தினை முன்னெடுத்ததாக தெரிவித்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வளாகத்தின் முன்னாள் ஒன்றுகூடிய சிங்கள  சிற்றூழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுமார் 380 மேற்பட்ட பொலநறுவை, கதுருவெல பகுதியை சேர்ந்த  சிற்றூழியர்களாக கடமையாற்றுகின்றனர். இவர்களுக்கு இலங்கை போக்குவாத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றினை போக்குவரத்துக்காக வழங்கப்பட்டுள்ள நிலையில் இதில் பயணிக்கும் சிற்றூழியர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பத்தோடு , உரிய நேரத்திற்கு கடமைக்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்படுவதாவும் தெரிவிக்கின்றனர் .
இவ்வாறு இன்றைய தினம் பேருந்து தாமதித்ததன் காரணமாக கடமைக்கு நேரம் தாமதமாகி வந்ததன் காரணமாக நாளாந்தம் கையெழுத்து இடும் பதிவேட்டில் கையெழுத்திட அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்தனர்

எனவே இவ்வாறான நிலை எதிர்காலத்தில் ஏற்படாதிருக்க தங்களுக்கான போக்குவரத்து வசதிகளை வைத்தியசாலை நிர்வாக ஏற்படுத்த தரவேண்டும் எனவும் , இதேவேளை இவ்வைத்தியசாலையில் ஐந்து , ஆறு வருடங்களுக்கு மேலாக கடமை புரியும்  சிற்றூழியர்களுக்கு பொலநறுவை , கருதுருவெல பகுதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு இடமாற்றத்தினை பெற்றுத்தர வேண்டும் என தமது கோரிக்கையினை முன்வைத்து இந்த ஆர்பாட்டத்தினை முன்னெடுப்பதாக தெரிவித்தனர் .

இது தொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி.கே.கலாரஞ்சனியிடம் கேட்ட போது கருதுருவெல பகுதியில் இருந்து வருகை தரும் சிற்றூழியர்களுக்கான போக்குவரத்து வசதிகள் இலங்கை போக்குவாத்து சபையுடனும் , சுகாதார அமைச்சுடனும் கலந்துரையாடப்பட்டு இவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

இதேவேளை வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி.கே .கலாரஞ்சனி வழங்கிய வாக்குறுதியினை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிற்றூழியர்கள் நாளாந்த வரவிற்கான கையெழுத்து இடும் பதிவேட்டில் கையெழுத்திட அனுமதி வழங்கப்பட்டு கடமைக்கு அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து  சிற்றூழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.