நீர்வீழ்ச்சியில் விழுந்து இளைஞர் மாயம்: தேடும் பணிகளில் கடற்படை சுழியோடிகள்

லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நக்கில்ஸ் வனப்பகுதியில் அமைந்துள்ள சேர நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். திருமணமாகவுள்ள இளம் ஜோடி ஒன்று குறித்த நீர் வீழ்ச்சிக்கு அருகில் புகைப்படம் எடுக்க முற்பட்ட நிலையில், இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். யுவதியை அங்கிருந்த சிலர் காப்பாற்றியுள்ளனர். எனினும் 27 வயதான இளைஞர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த மாதம் திருமண பந்தத்தில் இணைய இருந்த அவர்கள், பெற்றோருடன் குருநாகல் பகுதிக்கு புகைப்படம் எடுப்பதற்கென வருகைதந்துள்ளனர். அதன் போதே அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. காணாமல்போன இளைஞரை தேடும் பணியில் கடற்படை சுழியோடிகள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக லக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.