இலங்கையில் விசேட கல்வி மற்றும் உள்ளடங்கற் கல்வியின் பரிணாம வளர்ச்சி

ஊனமுற்றோருக்கு உதவுதல் தொடர்பான மிக நீண்ட வரலாறு இலங்கைக்கு உண்டு. கி.மு மூன்றாம் நூற்றாண்டிலும் அதற்கான சான்றுகளைப் பெற முடியும். பேரரசன் அசோகன் உடல் ஊனமுற்றோரை பராமரிக்கும் நிறுவனங்களை அமைத்திருந்தான். அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் மன்னர் புத்தாளன் இதே பணியை மீண்டும் இந்நாட்டில் நடத்தினான். அவன் நாட்டில் பல பாகங்களில் கால்களில் குறைபாடுடையோருக்காகவும், பார்வையற்றோர்களுக்காகவும் பராமரிப்பு நிலையங்களை நிறுவினான். இந்நிலையங்கள் எவ்வளவு காலம் நீடித்து இருந்தது என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. பின்வரும் காலகட்டங்களில் நிறுவன மயமாகும் தன்மை இலங்கையில் வளர்ச்சியுற்றது.

1. 1505-1656 வரை- போர்த்துக்கேயரின் நிர்வாக காலம்
2. 1656-1796 வரை- ஒல்லாந்தரின் நிர்வாக காலம்

இக்காலகட்டங்களில் மிஷனரிகளினால் குறைபாடுடைய பிள்ளைகளுக்காக புண்ணிய தாபனங்களாக நடத்தப்பட்ட நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இங்கு அப்பிள்ளைகளுக்கு கல்வியளிப்பதிலும் பார்க்க அவர்களைப் பராமரித்தலுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

விசேட பாடசாலைகளில் கல்வி 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நலன்புரி நடவடிக்கைகளில் ஈடுபட்ட  மிஷனரிக் குழுக்களும், கோயிலுடன் தொடர்புடைய குழுக்களும் உடல் ஊனமுற்றோரின் நலன் கருதி முக்கிய நடவடிக்கைகளை எடுத்தனர். முறையானதும் நிறுவனம் சாந்ததுமான முறையில் விசேட கல்வித் தேவையுடையோருக்கு கல்வி அளித்தல் 1912ம் ஆண்டு வரை விரிவடையும் அதே சமயம் குருடர் செவிடருக்கான முதலாவது வதிவிடப் பாடசாலை 1912 இல் இங்கிலாந்து சபையினால் இரத்மலானையில் ஆரம்பிக்கப்பட்டது. இதனை இலங்கையில் விசேட கல்வியின் ஆரம்பப்படி முறையாகக் கொள்ளலாம். இது யாப்பொன்றின் மூலம் ஆளப்பட்ட ஒரு உதவி பெறும் பாடசாலையாகும்.

1925 இல் செவிடருக்கும் குருடருக்குமான இரண்டாவது பாடசாலை தமிழ்மொழி மூலம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் மொழி மூலமான நபீல்ட் நிறுவன இப்பாடசாலை யாழ்ப்பாணம் கைதடியில் ஆரம்பமானது. பலாங்கொடை, மாத்தறை, கண்டி ஆகிய இடங்களில் பௌத்த காங்கிரஸும் ஏனைய சில தேசிய அமைப்புகளும் இவற்றை நிறுவின. இவை ஒரு வகையான கல்வி வழங்கும் நிறுவனங்கள் ஆகும். இன்று இவ்வாறான 25 பாடசாலைகள் நாட்டில் இயங்குகின்றன. இவை செவிடர், குருடர், உளரீதியாக பின் அடைந்தவர்கள் ஆகியோருக்கு கல்வி வழங்குகிறது. ஒரு நிர்வாகக் குழுவினரால் இப்பாடசாலைகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இன்று மேற்படி அரசு சார்பற்ற பாடசாலைகள், அரசியல் உதவிப்பணம் மூலம் பராமரிக்கப்படுகிறது. அதன் மூலம் ஆசிரியர்களுக்கு சம்பளம், பாடசாலை புத்தகங்கள், சீருடைகள், விசேட கல்வி துணை சாதனங்கள் ஆகியவற்றுக்கு செலவிடப்படுகின்றன.

1939 ஆம் ஆண்டில் 39 ஆம் இலக்க கல்விச் சட்டகத்தின் கீழ் இலவச கல்வித் திட்டத்தின் கீழ் உதவி பெறும் விசேட பாடசாலைகள் உள்ளடக்கப்பட்டன. 

1966 இல் திருமதி M.R.கென்மோர் நிபுணத்துவ ஆலோசகராக இலங்கைக்கு வந்தார். வெளிநாட்டு பார்வையற்றோருக்கான அமெரிக்க நிறுவனத்தின் சார்பாக இலங்கையில் கண்பார்வையற்ற பிள்ளைகளின் கல்வி பற்றி ஆராய்ந்து அரசுக்கு பொருத்தமான விதப்புரைகளை வழங்கினார். 1966 இன் கென்மோர் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அமைச்சரவை தீர்மானம் ஒன்றை எடுத்தது. அதன்படி இலங்கை சாதாரண பாடசாலைகளில் ஒன்றிணைந்த கல்வி அறிமுகமாகியது. முதலில் 17 கண்பார்வையற்ற பிள்ளைகளுக்கு இத்திட்டம் ஆரம்பமாகியது. பின்னர் சாதாரண பாடசாலைகளில் பார்வைக் குறைபாடுடைய பிள்ளைகள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இங்கு அவர்கள் சாதாரண பிள்ளைகளுடன் அமர்ந்து கல்வி கற்றனர். பார்வையற்ற பிள்ளைகளுக்கான விசேட கல்வி ஆசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பாடசாலைகளில் சேவை செய்யக் கூடியவாறு இடம்பெயர் ஆசிரியர் சேவை உருவாக்கப்பட்டது. கேட்டல் குறைபாடுடைய பிள்ளைகளுக்கான ஒன்றிணைந்த கல்வி 1925 ஆம் ஆண்டிலும் ஆரம்பிக்கப்பட்டது. 

இன்று ஆயிரம் விசேட வகுப்புக்கள் அல்லது விசேட அலகுகள் சாதாரண அரச பாடசாலைகளில் செயற்படுகின்றன. இவற்றில் 610 அலகுகள் அறிவுசார் குறைபாடுடைய பிள்ளைகளுக்கானவையாகும். 230 பாடசாலைகள் கேட்டல் குறைபாடு உடைய அல்லது செவிடர்களுக்கான பாடசாலைகளாகும். இவ்வகுப்புகளில் குறித்த பாடசாலைகளின் பொதுக் கல்வி வழங்கும் வகுப்புக்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் பெரும் எண்ணிக்கையான மாணவருக்கு உடல் ரீதியாக குறைபாடற்றோருடன் சமூக ரீதியில் ஒன்றிணைய வழிவகுக்கிறது. இலங்கையில் இன்று 45000 ற்கும் அதிகமான உடல் குறைபாடுடைய மாணவர்கள் சாதாரண பாடசாலைகளில் கல்வி கற்கின்றனர் (இரத்னாவதி D.K.D/2005) எவ்வாறாயினும் ஒரு காலத்தில் விசேட கல்வி வகுப்பில் சேர்ப்பதென்பது பிள்ளையின் சாதாரண கல்வி மற்றும் சமூக அனுபவங்களின் முடிவு என கருதப்பட்டது. ஒரு ஆசிரியரின் விதந்துரைப்பின்படி அல்லது ஒரு சோதனையின் பெறுபேறாக பிள்ளைகள் விசேட கல்வி வகுப்பில் சேர்க்கப்பட்டனர். பெற்றோரும் தொழில் வாண்மையாளரும் இது வலுவான கல்விக் கொள்கையை வலியுறுத்தும் ஒரு செயல் அல்ல என்றும் சம வாய்ப்பளிக்கும் நடைமுறை அல்ல என்றும் கருதி சட்டரீதியாக செயற்பட்டனர். பிள்ளைகளின் விசேட தேவைகள் இனங்காணப்படுகின்ற பிள்ளைகளில் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறது இன்றுள்ள விசேட கல்வி முறைமையே அவர்களது கோரிக்கையாக இருந்தது.

1960 இல் தேசிய கல்வி ஆணைக்குழுவினால் சட்டவிதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. (1961/8.4) இதன்படி 6-14 வயதுடைய பிள்ளைகள் யாவரும் பாடசாலையில் சேர்த்தல் கட்டாயமாக்கியது. மீண்டும் 1990 இல் இலங்கை 'யாவருக்கும் கல்வி' எனும் கொள்கையை சிறுவர் உரிமைகள் பற்றிய பிரகடனத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டது. 1994 இல் உள்ளடக்கும் கல்வி எனும் எண்ணக்கரு இலங்கையிலும் கொள்கை ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1997 இல் 1005/3 ஆம் இலக்க விசேட கல்விக்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 5 தொடக்கம் 14 வயது வரையிலான எல்லா பிள்ளைகளுக்கும் கல்வி கட்டாயமாக்கப்பட்டது. உள்ளடங்கும் கல்வி எனும் எண்ணக்கரு ஒரு கல்விக் கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும் விசேட பாடசாலைகளும் ஒன்றிணைந்த கல்வியும் நடைமுறையில் உள்ளது.
தாய்லாந்தில் இடம்பெற்ற எல்லோருக்கும் கல்வி பற்றிய ஜொம்டியன்
மாநாட்டின் முன்பும் பின்பும் பல மாற்றங்கள் இலங்கையில் விசேட கல்வி தொடர்பாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இம்மாநாடானது EPA பற்றிய உலகப் பிரகடனமும் அடிப்படை கற்றல் தேவைகளை அடைந்து கொள்வதற்கான ஒரு செயற்பாட்டுச் சட்டகமும் (ஜொம்பியன் செயற்பாட்டுக்கான சட்டகம்) அரசாங்கங்கள் செயல்படுத்தக்கூடிய ஆறு விரிவான EFA இலக்கு பரிமாணங்களை முன்மொழிகிறது. அவையாவன,

1. குறிப்பாக ஏழை, பிரதிகூலங்களையுடைய, இயலாமை உடைய பிள்ளைகளின் குடும்ப மற்றும் சமூக இடையூறுகள் உட்பட்டதாக ஆரம்ப பிள்ளைப் பருவ கவனிப்பும் விருத்தியும்.

2. 2000 ஆண்டளவில் உலகளாவிய ஆரம்பக் கல்விக்கான அல்லது (அடிப்படை என கருதக்கூடிய உயர்மட்ட கல்வி) வாய்ப்பும் பூரணப்படுத்தலும்.

3. பொருத்தமான வயது குழுவினரின் ஒரு சம நூற்று வீதத்தினர் வரையறுக்கப்பட்ட தேவையான கற்றல் அடைவை அல்லது அதைவிட அதிகமாக அடையுமாறு கற்றலடைவில் மேம்பாடு.

4. வயது வந்தோரின் கல்வியறிவின்மை வீதத்தை குறைத்தல். அதாவது 1990 இல் இருந்ததை விட 2000 ஆண்டில் இது அரைவாசியாக்கப்படல் வேண்டும். கல்வியறிவு பெற்றோர் தொடர்பாக தற்போதைய நிலைமைகளின் படி ஆண் பெண்களுக்கு இடையிலான வேறுபாட்டைக் குறைப்பதற்காக பெண்களின் கல்வியறிவிற்கு கூடிய அழுத்தம் கொடுத்தல் வேண்டும்.

05. இளைஞர்களுக்கும் வயது வந்தோருக்கும் தேவைப்படும் அடிப்படை கல்வி கிடைக்கும் தகவு ஏனைய அவசியமான திறன்களில் தேவையான பயிற்சிகள் என்பவற்றை நடத்தை மாற்றங்கள், ஆரோக்கியம், வேலை வாய்ப்பு, ஆக்கத்திறன் என்பவைகளில் ஏற்படும் தாக்கம் அதிகரித்துச் செல்லும் விளைதிறனை உடையது என உறுதி செய்யும் வகையில் விரிவாக்குதல்.

06. நடத்தை மாற்றத்தில் விளைதிறனை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் ஊடகங்கள் நவீன மற்றும் பாரம்பரிய தொடர்பாடலின் ஏனைய வடிவங்கள், சமூக நடத்தை என்பவை உள்ளிட்ட எல்லாக் கல்வி முறைகளின் ஊடாகவும் சிறந்த வாழ்க்கை, சமூக வாழ்க்கை மற்றும் நின்று நிலைத்திருக்கும் விருத்தி என்பவைகளுக்குத் தேவையான அறிவு, திறன் மற்றும் விழுமியங்களை தனியாட்களும், குடும்பங்களும் பெற்றுக் கொள்வதைத் தவிர்த்தல்.

போன்றவடிவற்றின் மூலமாக கல்வியை உறுதிப்படுத்துதல் அல்லது பாடசாலைக்கு செல்வதற்கான வாய்ப்பை வெறுமனே அதிகரித்தல் என்பது கருத்தல்ல. பிள்ளையை முறைசார் கல்விக்கு ஆயத்தப்படுத்தும் ஆரம்ப பிள்ளைப்பருவ கவனிப்பும் கல்வியும் என்பது மேலே உள்ள ஆறு இலக்குகளில் ஒன்றாகும். மேலும் கற்றல் அடைவு மிக முக்கியமானதொரு இலக்கு என இனங்கண்டிருப்பதனால் கல்வியினூடாக பிள்ளைகள் தேர்ச்சிகளைப் பெற்றுக் கொள்ளல் மிக முக்கியமானதாகும். வளர்ந்தவர்கள் அதிலும் குறிப்பாகப் பெண்கள் எழுத்தறிவில் தொடங்கி கல்வி பெறுவதற்கு சமமான கவனம் செலுத்தப்படுகின்றது. சிறந்த வாழ்க்கைக்கு தேவையான ஆற்றல்களை பெற்றுக் கொள்வதற்காகவும், தொழில்வாய்ப்பு, ஆக்கத்திறன் என்பன பெறுமதிமிக்கவைகளாக கருதப்படுவதனாலும் அறிவு, ஆற்றல்களுக்கு பல்வேறு கல்வி மூலங்களிலிருந்து வாய்ப்பு அளிக்கப்படல் மிக அவசியமாகும்.

1991 இல் செய்யப்பட்ட அனைவருக்கும் கல்வி பிரகடனத்தின் தொடர்ச்சியாக கொள்கை திட்டமிடல், திட்ட அமுலாக்கல் அமைப்பினால் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் முகவர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட "இலங்கை பிள்ளைகளுக்கான செயற்பாட்டுத் திட்டம்" அனைவருக்கும் கல்வியின் இலக்குகளுக்குப் பொருத்தமான பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை உள்ளடக்கியிருந்தது. பிள்ளைகளுக்கான செயற்பாட்டுத் திட்டத்தின் உருவாக்கத்தின் பின்பு முதல் ஐந்து வருடங்களில் EFA க்கான வசதிகளின் விருத்தி பின்வருவனவற்றை உள்ளடக்கியிருந்தது.

01. முதல்தடவையாக செயற்பாட்டுக்கான திட்டத்தின்கீழ் ECCD நிகழ்ச்சித் திட்டம் ஒரு செயற்பாடாகச் சேர்க்கப்படல்.

02. 1995 இல் அரசாங்கத்தினால் கட்டாயக் கல்விக்கான அனுமதி.

03. பெருமளவிலான ஆசிரியர்கள் தூர பிரதேசங்களில் நியமிக்கப்பட்டதனால் 1991 இல் 146000 ஆக இருந்த ஆசிரியர் எண்ணிக்கை 1992 இல் 184000 ஆக அதிகரித்திருந்தது.

04. பிராந்தியங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை குறைப்பதற்காகவும் பின்தங்கிய பிரதேசங்களுக்கு கூடிய வசதிகளை அளிப்பதற்காகவும் நான்கு பிரதான அபிவிருத்திதச் செயற்றிட்டங்களை ஆரம்பித்தல்.

     01. தோட்டப்புற பாடசாலை அபிவிருத்தி செயற்றிட்டம். 
     02. ஆரம்ப பாடசாலைகள் அபிவிருத்தி செயற்றிட்டம். 
     03. IDA/WB இன் உதவியுடன் பொதுக் கல்விச் செயற்றிட்டம்.
     04. தோட்டப் பாடசாலைகளில் அபிவிருத்தி.

ஜொம்றியனுக்கு முன்பு இலங்கையரின் தொடக்கம் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான கற்றல் கற்பித்தல் செயன்முறையில், 1990 ஆம் ஆண்டின் பின்புதான் நாட்டில் உள்ள எல்லா பிள்ளைகளுக்கும் கல்வி வழங்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டியதா என்பதையும் கூறக் கூடியதாக இருக்கும். ஜொம்டியன் மாநாட்டுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே எல்லோருக்கும் கல்வி என்ற கோட்பாட்டை இலங்கை முன்னெடுத்திருந்தது.

சர்வதேச சமவாயங்கள் அறிமுகப்படுத்துவதற்கும் உலகளாவிய இலக்குகள் அமைக்கப்படுவதற்கும் நிகழ்ச்சித்திட்ட உருவாக்கத்தின் அடிப்படை தேவைகள் அடையப்பெறுவதற்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற உணர்வு பெறுவதற்கும் பல வருடங்களுக்கு முன்பே 1940 களில் எல்லாப் பிள்ளைகளுக்கும் உள்ள கல்விக்கான உரிமை இலங்கையில் அங்கீகரிக்கப்பட்டது. அரசியல் சுதந்திரம் பெறப்படுவதற்கு முன்பே அரசாங்க சபை நிர்வாகம் தூரப் பிரதேசங்களில் 54 மத்திய பாடசாலைகளை இடைநிலைக் கல்வியை வழங்குவதற்காக அமைத்து ஐந்தாம் தர புலமைப்பரிசில் ஊடாக பிரதேசத்திலுள்ள ஆரம்பப் பாடசாலைகளில் இருந்து மாணவர்களைப் பெறுவதற்கு வழி வகுத்தது இது இடைநிலைக் கல்வியினூடாக பல்கலைக்கழக கல்வியை பெற ஒரு மார்க்கமாக அமைந்தது. கடந்த காலங்களில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் விரிவாக்கம் அடைந்து தற்பொழுது புலமைப்பரிசில் பரீட்சை ஒன்றின் அடிப்படையில் வசதிமிக்க ஆரம்ப நிலைக்கு பின்னான பாடசாலைகளில் 15000 இடங்களை வழங்குவதுடன் 10000 பேருக்கு நிதியுதவியும் வழங்கப்படுகின்றது.

ஆரம்ப, இடைநிலை மற்றும் பல்கலைக்கழக கல்வியை இலவசமாக வழங்குவது 1945 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது மக்களின் பல்வேறு பகுதியினருக்கும் கல்விக்கான ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்துவதும் அவர்களின் சமூக பொருளாதார நகர்வை மேல் நோக்கியதாக ஆக்கிக் கொள்வதும் மேற்குறிப்பிட்ட கொள்கையின் நோக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவரை இருந்த கல்வி கொள்கைகளினால் விரிவாக்கப்பட்டு இருந்த சமூக பொருளாதார சமமின்மையை குறைப்பது இதற்காக முன்வைக்கப்பட்ட நியாயமாக அமைந்தது. கல்விக் கொள்கையின் பல்வேறு அவத்தைகளில் இலவச மதிய உணவு, மானியமளிக்கப்பட்ட போக்குவரத்து என்பன வழங்கப்பட்டன. 1980ல் ஆரம்பிக்கப்பட்ட தரம் 1 தொடக்கம் 11 வரையிலான வகுப்புகளுக்கு இலவச பாடப்புத்தக வசதிகளுடன் அண்மைக் காலங்களில் இத்தகைய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

1993இல் ஒவ்வொரு பிள்ளைக்கும் சீருடை தைப்பதற்கான துணி வழங்கல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பப் பாடசாலைகளில் 1945 இல் தாய்மொழி போதனா மொழியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. படிப்படியாக இத்தாய் மொழிக் கொள்கை இடைநிலைப் பாடசாலைகளில் 1953 இல் இருந்து 1959 வரை அமுல் நடத்தப்பட்டதன் மூலம் மொழி ரீதியாக இருந்த தனிச்சலுகை முறை நீக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக நோக்கும்போது, இக்காலகட்டத்தில் அரசாங்கப் பாடசாலைகளை நோக்கி எல்லா பிள்ளைகளையும் கவர்ந்து கொள்ளவும் பயிற்சி அளிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதை அறிந்து கொள்ளலாம்.

மேற்கூறிய வகையில் பட்டியற்படுத்தப்பட்ட நலச் செயற்பாடுகள் விசேடமாக சமூக பொருளாதார பின்னணி உடைய பிள்ளைகளை பாடசாலையில் தொடர்ந்திருக்க வழிகோலியது. எவ்வாறாயினும் இக்காலகட்டத்தில் பின்வரும் விடயங்களுக்கு விசேட கவனம் செலுத்தப்படவில்லை என்பதை கவனிக்கவும். 

01. ஆரம்ப பிள்ளைப் பராமரிப்பும் கல்வியும் 
02. வளர்ந்தோர் எழுத்தறிவு அபிவிருத்தி 
03. கற்றல் அடைவில் விருத்தி

"அனைவருக்கும் கல்வி" அதிகாரபூர்வமான நடவடிக்கைகள் 1990 களும் அதற்குப் பின்னரும் 1992 இல் நடைபெற்ற ஜொம்டிஎன் மாநாட்டின் பரிந்துரைக்குத் துலங்குவதற்காக தேசிய கல்வி ஆணைக்குழு ஆரம்பக்கல்வி மறுசீரமைப்புக்கான பல்வேறு முன்மொழிவுகளை செய்தது. அந்தவகையில் ஆரம்பக்கல்விப் பரிந்துரைகள் பின்வருமாறு.

01. பாடசாலைக் கற்றலில் பிள்ளைகள் பங்குபற்றுதலையும் தொடர்ந்திருத்தலையும் அதிகரித்தலும் கட்டாயக்கல்வி விதிமுறைகளை இயற்றுதலும்.

02. தேர்ச்சிகளின் விருத்திக்கு அழுத்தம் ஒன்றை கொடுக்கக்கூடிய வகையில் விளையாட்டுச் செயற்பாடு, மேசை வேலை என்பவற்றைப் பொருத்தமான வகையில் கலந்து இதனூடாக தரம் ஒன்றிலிருந்து தரம் 5 வரையான பாடசாலைக் கற்றலின் தரத்தை விருத்தி செய்தல்.

03. மாணவர்கள் மத்தியில் குழு வேலை, ஒத்துழைப்பு என்பவைகளை மேம்படுத்த ஒரு வகையில் பாடசாலைக் கணிப்பீட்டில் முதல்நிலை கட்டத்தை மேற்கொள்ளல்.

04. முழுமையான தொழில்வாண்மைத் தகைமையை அடையக்கூடிய வகையில் எல்லா ஆசிரியர்களுக்குமான சேவை முன் பயிற்சி ஒன்றை உறுதிப்படுத்துவதன் மூலம் ஆசிரியர் கல்விக்கான தேசிய அதிகார சபையின் நெறிப்படுத்தலின் கீழ் ஆசிரியர் கல்வியை மேம்படுத்துதல்.

05. மூன்று வகையான புத்தகங்கள் - தமது சொந்தக் கற்றலுக்கு மாணவர் பயன்படுத்தக்கூடிய பாடப் புத்தகங்கள், மாணவர் பாடங்களில் திறமை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட வேலைப் புத்தகங்கள், உசாத்துணைகள் ஊடாக மேலதிக தகவல்களைப் மாணவர் பெற்றுக் கொள்ளக்கூடிய மேலதிக வாசிப்பு நூல்கள் என்பவற்றை பாடசாலைக்கு வழங்கல்.

06. எல்லாப் பாடசாலைகளும் கல்வி ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கல். ஜனவரி 1998 இல் 5 -14 வயதுப் பிரிவினருக்கான கட்டாயக் கல்வி ஒழுங்கு விதிகள் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டு இதை வசதிப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களும் முன்வைக்கப்பட்டன.

தமது பிள்ளைகளுக்கு பொருத்தமானதும் போதுமானதுமான கல்வி வசதிகளைப் பெற்றோர்கள் வழங்க முடியாது இருந்தால் இந்த ஒழுங்கு விதிகள் 5-14 வயது வரையிலான பிள்ளைகளை கல்வி நிறுவனங்களில் சேர்க்க பெற்றோர்களை கட்டாயப்படுத்துகின்றன.

கட்டாய வருகையை கண்காணிப்பதற்காக இரண்டு குழுக்கள் உள்ளுர் மட்டத்தில் கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட இருந்தன.

01. ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் ஒரு பாடசாலை வருகை குழு அல்லது மேற்படி பிரிவில் 5 பாடசாலைகளை விட அதிக எண்ணிக்கையில் காணப்படுமானால் இரண்டு குழுக்கள், கிராம அதிகாரி, ஒரு பாடசாலை அதிபர், பாடசாலை அபிவிருத்திக் குழுக்களில் இரண்டு பிரதிநிதிகள் குறித்த பிரிவின் சமுர்த்தி அதிகாரி என்பவர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்படல் வேண்டும்.

02. பிரிவுக்கான கல்விப்பணிப்பாளர் ஒருவர், பிரிவின் நன்னடத்தை அதிகாரி, குறைந்தது உதவி போலீஸ் சுப்பிறிண்டன், தளத்தில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவர், பிரிவில் வசிக்கும் சமூக சேவையில் ஈடுபட்டுள்ள முக்கியமான நபர் ஒருவர் என்பவரை கொண்டதாகவும் ஒவ்வொரு பிரிவுச் செயலகத்திலும் ஒரு பாடசாலை வருகைக் குழு அமைக்கப்படல். மாகாணக் கல்விப்பணிப்பாளர் மேற்படி குழுக்களின் உறுப்பினர்களில் இருந்து குழுவிற்கான தலைவரை நியமிக்க அதிகாரம் பெற்றவராக இருப்பார். குறித்த பிரிவிலுள்ள இலங்கை கல்வி நிர்வாக சேவை அலுவலர் ஒருவர் பாடசாலை செல்லாத பிள்ளைகளினதும் அவர்தம் பெற்றோர்களதும் பட்டியல் ஒன்றினை குழுவினரிடமிருந்து பெற்று விசாரணைகள் நடத்தி பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்க்க அறிவுறுத்தல்களை வழங்குவார். நியாயமான காரணங்கள் இருப்பின் விதிவிலக்குகளையும் அனுமதிப்பார். மூன்று மாதங்களின் பின் முன்னேற்றங்களைக் கண்காணிப்பார். பின்பு பாடசாலை வருகைக் குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிப்பார். பாடசாலை செல்லாத பிள்ளைகளின் பெற்றோரை அழைத்து தேவையான ஆலோசனைகளை வழங்க இக்குழுவானது வலுவூட்டப்பட்டுள்ளது. குழு பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப பெற்றோருக்கு அறிவுறுத்தல்களை வழங்கி மாணவர்களின் ஒழுங்கான வருகையையும் உறுதிப்படுத்தும். பெற்றோர் ஒருவர் இதற்கு உடன்படாத போது விதிமுறைகள் அவரை ஒரு குற்றம் இழைத்ததாக இனங்காணும். ஆனால் இத்தகைய தண்டனைகளையும் விதித்துரைக்காது.

கல்வியமைச்சின் செயலாளரினால் 29 ஏப்ரல் 1998 இல் அனுப்பப்பட்ட ஒரு கடிதம் / சுற்றறிக்கை வகுப்புகளுக்கு குறித்துரைக்கப்பட்ட எண்ணிக்கையடன் அவர்களின் பாடசாலைக்கு அனுமதிபெற விண்ணப்பித்த பிள்ளைகளை அனுமதிக்குமாறு எல்லா பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்துகின்றது. பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாதவிடத்து சத்தியக்கடதாசியைப் பெற அல்லது ஆவணங்களைப் பெற உதவுமாறு முறைசாராக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர். அத்துடன் பிள்ளைகளைப் பாடசாலைகளில் அனுமதிப்பதற்கு பெற்றோருக்கு உதவுவதற்காக அரச சார்பற்ற மற்றும் சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களிடம் உதவி கோரப்பட்டது. ஒவ்வொரு இடத்திலும் பாடசாலை செல்லாத பிள்ளைகளுக்காக முறைசாரா எழுத்தறிவு மத்திய நிலையங்களில் ஒழுங்குபடுத்துமாறு முறைசாராக் கல்வி அலகுக்கு அறிவுறுத்தப்பட்டது.

EFA இன் இலக்குகள் 2000 ஆண்டில் டாக்கர் உலக கல்வி அவையில் கட்டியெழுப்பப்பட்டன. ஏற்கனவே இருந்த 1990 இல் ஜொம்டியனில் விருத்தி செய்யப்பட்ட EFA இலக்குகள் மீளாய்வு செய்யப்பட்டும், வலுவூட்டப்பட்டும் அவை உருவாக்கப்பட்டன.

01. குறிப்பாக பாதுகாப்பற்ற ஏழ்மை நிலையில் உள்ள பிள்ளைகளுக்காக அகல் விரிவான முன்பிள்ளைப் பருவ கவனிப்பும் கல்வியும் என்பதை விரிவாக்கலும் விருத்தி செய்தலும்.

02. 2015ஆம் ஆண்டளவில் எல்லா பிள்ளைகளும் குறிப்பாக சிறுமிகள், கஷ்டமான சூழ்நிலைகளில் உள்ள பிள்ளைகள், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தோர் இலவச கட்டாய சிறந்த தரத்தில் உள்ள ஆரம்பக் கல்வயைப் பெறுவதையும் பூர்த்தி செய்வதையும் உறுதி செய்தல். 

03. உகந்த கற்றல், வாழ்க்கைத் திறன் நிகழ்ச்சித் திட்டங்களுக்கான சமவாய்ப்பின் ஊடாக எல்லா இளைஞர் யுவதிகளுடையதும், வளர்ந்தோரினதும் கற்றல் தேவைகள் பெறப்படுவதை உறுதி செய்தல்.

04. வளர்ந்தோரின் எழுத்தறிவு மட்டங்களில் 50% அபிவிருத்தியை 2015ஆம் ஆண்டளவில் குறிப்பாக பெண்களில் அடைதலும் அடிப்படையானதும் தொடர் கல்விக்கானதுமான சமவாய்ப்பை எல்லா வளர்ந்தோருக்கும் ஏற்படுத்தலும். 

05. ஆரம்ப இடைநிலை கல்வியின் பால் நிலைச்சமத்துவத்தை 2015 ஆம் ஆண்டளவில் அடைதலம் தரமான அடிப்படைக் கல்வியில் சிறுமிகளுக்கான முழுமையான சமவாய்ப்பை அடைதல் இங்கு உறுதிப்படுத்தப்படும். 

06. கல்வித் தரத்தின் எல்லா அம்சங்களையும் விருத்தி செய்தலும் குறிப்பாக எழுத்தறிவு எண்ணறிவு அவசியமான வாழ்க்கைத் திறன்களில் அங்கீகரிக்கப்பட்டதும் அளவு கூடியதுமான கற்றல்விளைவுகளை எல்லோரும் அறிவதை உறுதிப்படுத்துதலும்.

கல்வியின் தரமும் பொருத்தப்படும் தரத்தில் சரி ஒப்புரவு என்னும் எண்ணக்கருவை உள்ளடக்கிய விரிவாக்கப்பட்ட பால்நிலை சமத்துவ எண்ணக்கருவொன்று சமூகரீதியில் புறந்தள்ளப்பட்ட குழுக்கள் (பேரளவில் "பாதுகாப்பற்ற ஏழைச் சிறுவர்கள்” “கடினமான சூழ்நிலைகளில் உள்ள சிறுவர்கள், சிறுபான்மை இனத்தைச் சார்ந்தோர்") பற்றிய வெளிப்படையான குறிப்பு என்பவைகளுக்கு கூடிய அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம்.

1990 களிலிருந்து கொள்கை பற்றிய ஆவணங்களிலும் கல்விச் சீர்திருத்தங்களிலும் சரி ஒப்புரவு பற்றிய பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேசியக் கல்வி ஆணைக்குழுவினால் 1997 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தத்தின் 5 தொடக்கம் 14 வயது குழுவினருக்கான கட்டாய கல்விக்கு மேலதிகமாக 324 நிர்வாகப் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் சகல வசதிகளுடன் கூடிய தரமான பாடசாலைகளை நிர்மாணித்தலுக்கான முன்மொழிவுகள் சமமான கல்வி வாய்ப்புக்களை உறுதிப்படுத்தும் முகமாக முன்மொழியப்பட்டது. தேசிய கல்வி ஆணைக்குழுவின் பொதுக் கல்விக்கான சட்டகம் ஒன்றின் முன்மொழிவுகள் (2003) தரமான கல்விக்கான வசதி வாய்ப்புகளில் சரி ஒப்புரவுக்கும் முன்னுரிமை அளித்து இருந்தது. பிள்ளைகளுக்கான செயற்பாட்டின் தேசிய திட்டம் (2004) மேற்படி முன்மொழிவுகளில் குறிப்பிடப்பட்ட கட்டாயக்கல்வி வயதை 16 வயதிற்கு நீடித்தலுக்குச் சம்மதம் தெரிவித்தலுடன் ஆரம்ப கனிஷ்ட இடைநிலைக் கல்வியை போதுவானதாக்குவதற்கு முன்னுரிமையளித்தல். சிரேஷ்ட இடைநிலைக் கல்விக்கான வாய்ப்பை அதிகரித்தல். வேறுபாடுகளைக் குறைத்தல், தரத்தை உறுதி செய்தல், பாடசாலையை விட்டு விலகியோருக்கு இரண்டாவது சந்தர்ப்பம் வளங்கல் போன்றவற்றுக்கும் முன்னுரிமை வழங்கியது. 14 வயதுக்குக் குறைந்தோர் பிள்ளைத் தொழிலாளியாக செய்யப்படுவதை சட்டம் தடை செய்ததுடன் 16 லிருந்து 18 வயதுக்குள் ஆபத்தான தொழில்களில் ஈடுபடுவதையும் தடை செய்கிறது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையை நிறுவியமை, சிறுவர் உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட சிறுவர் அபிவிருத்திக்கான அணுகுமுறைகளையும், அவர்தம் நலன்களையும் மீள வலியுறுத்துகின்றது.

மேலும் கல்வித்துறை நிகழ்ச்சித்திட்டம் (ESDFP) 2005 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு 2006 இல் நடைமுறைப்படுத்தப்பட்டது. ESDFP இன் கருதிட்டம் ஒன்றின் கீழ் ஆரம்ப, இடைநிலைக் கல்விக்கான சமமான வாய்ப்பை உள்ளடக்கியதாக மேம்படுத்தப் பின்வரும் நிகழ்ச்சித் திட்டங்கள் இனம் காணப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

ESDFP இன் கீழ் 1998 இல் அமைக்கப்பட்ட கட்டாய வருகை குழுக்களுக்கு புத்துயிர் அளிப்பதற்கு முதன்மை அளிக்கப்பட்டது. இக்குழுக்கள் 2000 ஆண்டில் இருந்து செயல் இழந்து காணப்பட்டன. இதனால் 5 தொடக்கம் 14 வயது குழுவினரின் கட்டாயக்கல்வி விதிகளின் வினைத்திறன் எல்லைப்படுத்தப்பட்டிருந்தன. இக்குழுக்கள் தமக்குரிய கடமைகளைச் செவ்வனே செய்வதற்கு ESDFP புத்துயிர் அளிக்க எதிர்பார்க்கப்பட்டது. கல்வி அமைச்சு 8450 குழுக்களுக்கும் புத்தூக்கம் அளிக்கப்படுவதற்கும் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துவதற்கான சுற்றுநிருபம் ஒன்றை அனுப்பியது. சோராக் கல்வி விசேட கல்வி பகுதி என்பவற்றினூடாக முறைசார் பாடசாலை முறைமைக்கு வெளியில் கல்வி வாய்ப்புகளை விரிவாக்குவதற்கும் பிள்ளை தொழிலாளிகள், இயலாமைகள் உள்ள பிள்ளைகள், வீதி சிறுவர்கள் போன்ற பாதுகாப்பற்ற பிள்ளைகளின் குழுக்களை பாடசாலைகளினுள் கொண்டுவருவதற்கும் ESDFP பிரதான பங்கை வகித்தது.

ESDFP யின் கீழ் அரசாங்கம் அபிவிருத்திப் பங்குதாரர்களிடம் இருந்து உதவிகளை "அனைவருக்கும் கல்வி" என்பதை நோக்கி நகர்த்தியது. நாட்டு நிகழ்ச்சித் திட்டங்களில் விசேடமாக அடிப்படைக் கல்வி, அனைவருக்கும் கல்வி, பிள்ளைகளின் உரிமைகள், பிள்ளை நேசப் பாடசாலைகள் போன்றவற்றிற்கு உதவி அளிப்பதில் UNICEF இற்கு நீண்ட கால பாரம்பரியம் ஒன்று உண்டு. தரமான அடிப்படைக் கல்விக்கு முழுமையான அணுகுமுறையினூடாக சமவாய்ப்பு , பாடசாலை வசதிகளையும், கற்றல் கற்பித்தல் வளங்களையும் வாய்ப்புகளையும் விருத்தி செய்வதன் மூலம் கட்டாயக்கல்வி வட்டத்தினை பூரணப்படுத்த பாடசாலைப் பிள்ளைகளுக்கு உதவுதல் போன்றன மூலம் தொடர்ந்து இது உதவிகளை வழங்கி வருகிறது.

மேலும் வடக்கு கிழக்கில் இனப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் வெறும் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து நிகழ்ச்சித் திட்டங்களில் அவர்கள் பங்கு பற்றுவதை உறுதிப்படுத்தும் முகமாக முறைமைகளையும் ஆற்றல்களையும் பலப்படுத்தும் நோக்கில் UNICEF நெருக்கடி நிலை கல்விக்குத் தேவையான உதவிகளை வழங்கியது. முறைசார் கல்வி முறைமையுள் மீள இணைத்துக் கொள்வதற்கு ஒரு "மேற்கோள் கல்வி நிகழ்ச்சித் திட்டம்" உதவுகிறது. சுனாமிக்கு பின்பான பாடசாலை மீளமைப்புக்கான விரிவாக்கத் திட்டம் ஒன்றிற்கும் UNICEF உதவிகளை வழங்குகின்றது.

இனப்பிரச்சினை, சுனாமி என்பவற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஒன்று தொடக்கம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிய உணவுக்காக உலர் உணவு நிகழ்ச்சித் திட்டம் (WFP) இலங்கை அரசாங்கத்தின் ஊடாக உதவிகளை வழங்குகின்றது. உணவு தயாரிப்பதற்கு தேவையான பண்டங்கள் மத்திய அரசாங்கத்தினால் மாவட்ட பண்டகசாலைகளுக்கு வழங்கப்பட்டு பின்பு இலக்கககுக்குரிய பாடசாலைகளுக்கு வலயப் பணிமனைகளுக்கூடாகவும் கூட்டுறவு அல்லது தனியார் போக்குவரத்துக்கூடாகவும் வழங்கப்படுகின்றன. பாடசாலை அபிவிருத்திச் சங்கம் உணவு தயாரிப்பு மேற்பார்வை செய்கிறது. ஐந்து கல்விக் கோட்டங்களில் பண்டங்கள் ஒரு அரசசார்பற்ற நிறுவனமாக உலக தொலைநோக்கு (WORLD VISION) ஊடாக முன்னோடி நிகழ்ச்சித் திட்டமாக வழங்கப்படுகின்றது.

தனிப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள், வெளிநாட்டு நன்கொடையாளர்களின் உதவியுடன் WFP கிட்டத்தட்ட 40 பாடசாலைகளுக்கு நிரந்தரமான சமையலறைகளையும், சேமித்து வைக்கும் வசதிகளையும் வழங்கியுள்ளது. பாடசாலை உணவளிக்கும் இத்திட்டத்தின்கீழ் எல்லாப் பாடசாலைகளிலும் சமையல் உபகரணங்கள், அடுக்களை உபகரணங்கள், வட்டில்கள் என்பன பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. மேலும் ESDFP கீழ் பிற்படுத்தப்பட்ட பாடசாலைகளில் முதலாம் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு காலை உணவு பாடசாலைகளில் தயாரித்து வழங்கப்படுகிறது.

கட்டாயக் கல்வி விதிமுறைகள் அங்கீகரிக்கப்பட்டு இவ்விதிமுறைகளை நடைமுறைப்படுத்த குழுக்கள் அமைக்கப்பட்ட போதும் பெரேராவின் ஆய்வின்படி 8459 பாடசாலை வருகை குழுக்களும் பாடசாலை வருகைக் கண்காணிப்பு குழுக்களும் 1989 ம் ஆண்டளவில் அமைக்கப்பட்டு 2000 ஆண்டளவில் இவற்றின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன. இந்நிலைமைக்கு மாகாண கல்வி அதிகாரிகளின் பங்களிப்பு குறைவும், கல்வியமைச்சின் முறைசாரா மற்றும் விசேட தேவைகள் துறையின் முன்மொழிவு அமுல் நடத்தப்படுவதற்கு தங்கி இருந்தமையும் காரணங்களாகக் கூறப்பட்டன. இத்துறை தலைமை தாங்கும் முகவராக இனங்காணப்பட்ட போதும் அமுல் நடத்துதலுக்குத் தேவையான வளங்கள் மிகக் குறைந்ததாகவும் ஆளணி போதிய அளவு இல்லாததாகவும் இருந்தது.

கலாநிதி.ந.மஹ்திஹஸன், 
உதவி அதிபர், 
மேல்/ஹோ/கலகெதர முஸ்லிம் வித்தியாலயம்,
பாதுக்க.