இன்று கற்பித்தல் மட்டுமே இலக்கு - கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் மன்சூர் கூறுகிறார்


(காரைதீவு நிருபர் சகா)

இன்று கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளும் மாணவர்களுக்காக திறக்கப்படுகின்றன. ஆசிரியர்கள் தமது வரவினை பிரத்தியேக படிவத்தில் பதியவேண்டும். மாறாக கைவிரல் பதிவினையோ வழமையான வரவுப்பதிவேட்டிலோ பதியவேண்டிய அவசியமில்லை.

என்று கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.

இன்று மாணவர்களுக்காக நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் திறக்கப்படுகின்றன. இவ்வேளையில் கிழக்கின் நிலைப்பாடுபற்றி அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நாட்டில் கொரோனாத் தொற்று ஏற்பட்டதும் திடீரென இழுத்து மூடப்பட்ட அரச பாடசாலைகள் கடந்த மூன்றரை மாதங்களின் பின்னர் மீண்டும் கடந்த 29ஆம் திகதி திங்களன்று பகுதியளவில் ஆரம்பமாகியமை தெரிந்ததே.

பணிப்பாளர் மன்சூர் மேலும் கூறுகையில்:
ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலைக்குவரும்போது மாஸ்க் அணிந்துவந்தாலும் வகுப்பறையினுள் அதனை அணிய வேண்டிய கட்டாயமில்லை. சுகாதார நடைமுறைகளின்படி கைகழுவுதல், சமுக இடைவெளி பேணுதல் என்பன கட்டாயம் பின்பற்றப்படவேண்டும்.

கற்றல்கற்பித்தல் செயற்பாடுகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கவேண்டும். அதிபர் முகாமைத்துவக்குழுவின் ஏற்பாட்டில் கடந்தவாரம் தயாரிக்கப்பட்ட நேரசூசிக்கு இணங்க ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அதற்காக அனைவரும் பிற்பகல் 3.30மணிவரை நிற்கவேண்டும் என்பதில்லை.அதேபோல் அனைவரும் காலை 7.30க்கு வரவேண்டுமென்பதுமில்லை.

இதுதொடர்பான பூரணவிளக்கம் இதுவரை வழங்கப்பட்டுள்ள சுற்றுநிருபங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை அதிபர்கள் நன்குவாசித்து அதன்படி நடத்தல் நல்லது.
இன்றும் கண்காணிப்புக்குழுக்கள் பாயும்!.

கிழக்கு மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை மாணவர்களுக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும்போது அரசினால் அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகள் சீராகப் பின்பற்றப்படுகின்றதா என்பதை அவதானிக்க மீண்டும் வலயரீதியாக கண்காணிப்புக்குழுக்கள் விஜயம் செய்யவிருக்கின்றன.

இதற்கென மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களுக்கும் கல்வி அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக்குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 29ஆம் திகதியும் கிழக்கிலுள்ள சுமார் 120 பாடசாலைகளுக்கு சென்று தரிசிப்பை மேற்கொண்டு அறிக்கைப்படுத்தியுள்ளனர்.

கல்வியமைச்சின் 15/2020 வழிகாட்டல் சுற்றுநிருபப்படி கொரோனாத் தடுப்பு செயற்பாடுகள் எந்தளவில் பாடசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை கண்காணிப்பதற்கு திருமலையிலிருந்து வலயம் தோறும் அதிகாரிகள் இன்று வருகைதரவுள்ளனர்.

இதேவேளை அந்தந்த வலய மட்டத்திலும் கல்விசார் உத்தியோகத்தர்கள் இன்று பாடசாலைகளைத் தரிசித்து கண்காணித்து உரிய ஆலோசனைகளை வழங்குவதுடன் கல்வித்திணைக்களத்தினால் வழங்கப்பட்ட 15 அம்ச செவ்வை பார்க்கும் பட்டியலை பூர்த்திசெய்யவுள்ளனர்.